கம்பு கூழ் / Kambu Koozh

கம்பு கூழ் செய்ய நாட்டுக் கம்பினை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். உடலுக்கு தெம்பையும் பல விதமான சத்துகளையும் அளிக்கும் சிறந்த சிறுதானிய உணவு இந்த கம்பு கூழ். கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்விக்கும் அற்புத பானம். காலையில் இதனை பருக பல சத்துக்களை பெறலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் அகலும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான சிறந்த உணவு.

மேலும் சிறுதானிய வகையைச் சேர்ந்த கம்பின் மருத்துவ குணங்கள், பயன்களை தெரிந்து கொள்ள – கம்பு / Bajra.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு மாவு
  • 1 கப் மோர்
  • 10 பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1 கப் நீராகாரம் (சாதம் ஊறிய தண்ணீர்’)
  • உப்பு

செய்முறை

  • கம்பு மாவை முதலில் எடுத்துக் கொண்டு அதை நீராகாரம் விட்டு நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த கரைசலை எட்டு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
  • பின் ஒரு மண் சட்டியில் அல்லது அடி கனமான பத்திரத்தில் நான்கு கப் தண்ணீரை கொதிக்க விடவும்.
  • கொதி வந்தவுடன் கரைத்து புளிக்க வைத்திருந்த கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்படாமல் சேர்க்கவும்.
  • உப்பையும் இதனுடன் சேர்த்து கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

  • மாவு நன்றாக வெந்ததும் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து வேறு பத்திரத்திற்கு / மண் சட்டிக்கு இதனை மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • இந்த கம்பு களி மூழ்கும்  அளவுக்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் அதை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

  • மீண்டும் நன்கு புளித்த பின் தேவையான அளவு அதாவது ஒரு நபருக்கு ஒரு கையளவு எடுத்து அதனுடன் மோர் கலந்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நீர்க்க கரைக்கவும்.
  • இதனுடன் சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து காலையில் பருக உடல் உஷ்ணம் நீங்கும்.
  • கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்தும் பருகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *