தமிழகம் எங்கும் வளரும் ஒரு மருத்துவகுணம் நிறைந்த கீரை மரம் இந்த கல்யாண முருங்கை மரம். முள் முருங்கை அல்லது கிஞ்சுகம் என்று பெயருடைய இது ஒரு சில கிளைகளுடன் அடர்த்தியாக வளரக்கூடிய மரம். இந்த மரத்தின் இலை, பூ, விதை, பட்டை ஆகியவை மருத்துவகுணம் கொண்டது.
இதன் இலைகள் வெற்றிலை போன்று அகன்று இருக்கும். இதன் பூ ஒரே காம்பில் வரிசை வரிசையாக மொட்டு விட்டு கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறத்தில் வளரும். இது செந்நிற உருட்டு விதைகளையும் முட்களைக் கொண்ட மென்மையான கட்டையினையும் உடைய மரம். இதன் மொக்கு காக்கையின் வடிவத்தில் இருப்பதால் இதைச் சிறுவர்கள் “காக்காய்ப் பூ” என்றும் கூறுவார்கள். இதன் பூ பெரிய பெரிய இதழுடன் செக்கச்செவேலென்று பார்வைக்கு அழகாக இருக்கும்.
இலைகள் சிறுநீரை பெருக்கவும், மலமிளக்கியாகவும், தாய்ப்பாலை பெருக்கவும், மாதவிலக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த பலன் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். பூ கருப்பைக் கோளாறுகளை நீக்க உதவுகிறது. பட்டை கோழையகற்றியாகவும் ஜுரம் நீக்கவும், குடல் பூச்சிகளை கொல்லவும் உதவுகிறது. விதை மலமிளக்கியாகவும் குடல் பூச்சி கொல்லியாகவும் செயல்படுகிறது.
நீர்ச்சுருக்கு குணமாக
கல்யாண முருங்கை இலையைக் கொண்டு வந்து கசக்கிச் சாறு எடுத்து காலையில் நான்கு தேக்கரண்டி மாலையில் 4 தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுத்து வந்தால் நீர்ச்சுருக்கு குணமாகும்.
தாய்ப்பால் சுரக்க
கல்யாண முருங்கை இலையை கொண்டு வந்து ஆய்ந்து பச்சைப் பருப்பு சேர்த்து சமைத்து பிரசவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குழந்தை பிறந்த பின் தாய்ப் பால் தட்டுப்பாடு இருக்காது.
பருத்த உடல் சிறுக்க
சிலருக்கு அளவுக்கு மீறி உடல் பருத்து விகாரமாகத் தோன்றுவார்கள். இவர்கள் கல்யாண முருங்கை சர்பத் தயாரித்து செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சமநிலைக்கு வரும்.
கல்யாண முருங்கை சர்பத்
கல்யாண முருங்கை இலையை சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு டம்ளர் அளவு சாற்றை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட்டு இதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சி பாகுபதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து சீசாவில் வைத்துக்கொண்டு காலை மாலை 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து பருகலாம். இதனை பருகுவதால் ஒரு வாரத்தில் உடல் பருமன் குறையத் தொடங்கும். தேவையான அளவு குறையும் வரை சாப்பிடலாம். 5 மாத கர்ப்பஸ்திரீகள் சாப்பிடக்கூடாது.
சுவாச காசம் குணமாக
கல்யாண முருங்கை இலையைக் கொண்டு வந்து சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்து பொடியாக நறுக்கிக் கொண்டு, ஆழாக்கு புழுங்கல் அரிசியை ஊற வைத்து மை போல அரைத்து அதில் இலையையும் வெங்காயத்தையும் போட்டு பிசைந்து ருசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வைத்துக்கொண்டு இரண்டு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெய் விட்டு மாவை தேவையான அளவு எடுத்து அடைப் போல் தட்டி எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கவேண்டும். எத்தனை அடை வருகிறதோ அத்தனை அடை செய்து வைத்துக் கொண்டு, காலை, பகல், மாலை இந்த வேளைகளில் சாப்பிட வேண்டும். மூன்றே வேளையில் குணம் தெரியும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பூரண குணம் ஏற்படும்.
மாதவிடாய் வயிற்று வலி குணமாக
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்திற்கு முன்னும் பின்னும் அதே நேரத்திலும் கடுமையான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. இதைப்போக்க கல்யாணமுருங்கை நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது. கல்யாண முருங்கை இலையைக் கொண்டு வந்து தேவையான அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து சாறு எடுத்து காலை மாலை நான்கு தேக்கரண்டி வீதம் உட்கொண்டு வந்தால் இந்த வயிற்றுவலி குணமாகும்.