கடுக்காய் – நம் மூலிகை அறிவோம்

Terminalia Chebula; Chebulic Myrobalan; கடுக்காய்

பலருக்கும் அறிமுகமான சில மூலிகைகளில் கடுக்காய்க்கு ஒரு தனி இடமே உண்டு. சித்த மருத்துவத்தில் திரிபலா என்ற கூட்டு மருந்தில் இடம்பெறும் மூன்று மூலிகைகளில் ஒன்று கடுக்காய். வாத, பித்த, கப நோய்களுக்கு மிக சிறந்த மூலிகை இந்த கடுக்காய். உடலில் தேங்கும் கழிவுகளை அகற்றவும், அசுத்த ரத்தத்தை தூய்மையாக்கவும் கடுக்காய் பேருதவியாக உள்ளது. ஜீவப்பிரியா, ஜெயா, அமுதம், சிவா, திவ்யா, பூதனா, ப்ராணதா, வரிக்காய், அந்தன், காயச்சித்தி, வன துர்க்கை, மேகம், கடு, பத்தியம், வாத நாசினி, அம்மை, அமரிதம் என பல அழகான பெயர்கள் இந்த கடுக்காய் மரத்திற்கு உள்ளது.

இந்த மரத்தின் இலைகள் எதிரிலைகளாகவும் தனி இலைகளாகவும் இருக்கும். கடுக்காய் மரத்தின் பூக்கள் மங்கிய வெண்மை நிறத்தில் கிளைகளின் நுனியில் அமைந்திருக்கும். இதன் கனிகள் நீள்வட்ட வடிவில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மேலும் அதன் தோலில் ஐந்து தெளிவற்ற கோடுகள் காணப்படும். இனிப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என ஐந்து சுவைகளையும் உள்ளடக்கிய இந்த மரத்தின் பிஞ்சு, காய், கடுக்காய் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவை.

உடலில் தேங்கும் நீர், மலம் ஆகியவற்றை போக்கி உடலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும் மூலிகை கடுக்காய். வாத, பித்த, கப நோய்களைப் போக்கும் வல்லமைக் கொண்ட இந்த காய் மூலம், மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்றுப் புண் (அல்சர்), நாவறட்சி, பக்கவாதம், தோல் நோய்கள், உடல் வலிகள், பல் வலி, அதிமூத்திரம், கண் நோய்கள், இருமல், இளைப்பு போன்ற நோய்களையும் தொந்தரவுகளையும் விரட்டும் தன்மைக் கொண்டது.

இரத்தம் சுத்தமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை கொட்டை நீக்கி சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் ஒரு சுண்டக்காய் அளவு எடுத்துவர இரத்தம் சுத்தமாகும். இவற்றை உருட்டி சிறு சிறு மாத்திரைகளாக தயாரித்து வைத்துக் கொண்டு உமிழ் நீரில் கலந்து உட்கொள்ள இரத்தம் விருத்தியாகும்.

பல்வலி

கடுக்காயை பொடித்து அதனைக் கொண்டு பல் துலக்கி வர பல்வலி, பல் ஆட்டம், ஈறிலிருந்து இரத்தம் வடிதல், ஈறுவலி தீரும்.

புண்கள் ஆற

கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றுடன் காசிக்கட்டி பிசின் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஆறாத புண்கள் மீது பூசி வர விரைவில் புண்கள் ஆறும்.

கண்களுக்கு

ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய்த் தூளை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை எடுத்து வர கண் எரிச்சல், கண் நோய்கள், அதிமூத்திரம் நீங்கும்.

கப நோய், கொழுப்பு கரைய

ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் அளவு கடுக்காய்த் தூள் கலந்து தினமும் இரண்டு வேளை எடுத்து வர கபத்தினால் வரும் அனைத்து நோய்களும் நீங்கும். கடுக்காய்த் தூளுடன் தேன் கலந்து தினமும் இரண்டு வேளைகள் எடுத்து வெந்நீர் அருந்த கப நோய்கள் தீரும். உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, தேவையில்லாத சதை நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும்.

வாத, பித்த, கப நோய்களுக்கு

வாத, பித்த, கப நோய்களுக்கு கடுக்காய்த் தூள், திப்பிலி, சுக்கு, தேன், வெல்லம் ஆகியவற்றை சம பங்கு எடுத்து லேகிய பதமாகக் கிளறி காலை, மாலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாத, பித்த, கப நோய்களினால் வரும் அனைத்து நோய்களும் மறையும்.

சுகபேதியாக

கடுக்காய்த்தூள் மற்றும் கிராம்புத்தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கப் நீரில் கொதிக்க வைத்து காலையில் மட்டும் குடித்துவர வயிற்றுக் கடுப்பு, வாந்தி, குமட்டல் நீங்கி சுகபேதியாகும். உடலும் பலம் பெறும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

(1 vote)