இயற்கை உரம் மற்றும் வளர்ச்சி ஊக்கி
லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி இருக்கும் சிறந்த வளர்ச்சி ஊக்கி இந்த ஜீவாமிர்தம். இதனை செடிகள், பயிர்கள், மரங்களுக்கும் தெளிக்கலாம். சிறந்த வளர்ச்சியையும் நல்ல விளைச்சலையும் அளிக்கக்கூடியது. அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது இந்த ஜீவாமிர்தம். மண்ணை செழிப்பான மண்ணாக மாற்றக்கூடியது. பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.
ஜீவாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்
- 10 கிலோ நாட்டு பசுஞ்சாணம்
- 10 லிட்டர் நாட்டு மாட்டு கோ மூத்திரம்
- 2 கிலோ வெல்லம் (அல்லது 4 லிட்டர் கரும்பு சாறு)
- 2 கிலோ தானிய மாவு (பயறு மாவு – உளுந்து, துவரை, தட்டைப்பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று)
- ஒரு கையளவு பண்ணை வரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மண் (உங்கள் நிலத்தின் மண்)
- 200 லிட்டர் தண்ணீர்
ஜீவாமிர்தம் செய்முறை
- முதலில் 200 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதனுடன் சாணம், கோ மூத்திரம், வெல்லம் அல்லது கரும்புசாறு, பயறு மாவு மற்றும் கையளவு மண் சேர்த்து ஒரு தொட்டி பிளாஸ்டிக் கேனில் இட்டு நன்கு கலந்து 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும்.
- இதனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம்.
- காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் மூன்றாவது நாள் தயார்.
- இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம் அல்லது ஒரு லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம் பயன்கள்
லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் பல்கிப்பெருகி இருக்கும் சிறந்த வளர்ச்சி ஊக்கி இந்த ஜீவாமிர்தம். இதனை செடிகள், பயிர்கள், மரங்களுக்கும் தெளிக்கலாம். சிறந்த வளர்ச்சியையும் நல்ல விளைச்சலையும் அளிக்கக்கூடியது.
ஜீவாமிர்தம் பயன்படுத்தும் முறை
இந்த கரைசலின் மேல்புறத்தில் இருக்கும் தெளிவை மட்டும் வடிகட்டி எடுத்து பயன்படுத்த வேண்டும். பயிருக்குப் பயிர் தெளிக்கும் அளவு மாறுபடும். பொதுவாக ஒரு லிட்டருக்கு பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
ஜீவாமிர்தம் நன்மைகள்
- ஜீவாமிர்தத்தை மண்ணில் தெளிப்பதால் மண்புழுக்கள் அதிகரிப்பதோடு நுண்ணுயிர்கள் அதிகமாகும்.
- வேரில் ஏற்படும் நோய்களை தடுக்கும்.
- மண்ணிலிருக்கும் நுண்ணூட்ட மற்றும் பேரூட்ட சத்துக்களும் அதிகரிக்கும்.
- அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. மண்ணை செழிப்பான மண்ணாக மாற்றக்கூடியது.
- விதைநேர்த்திக்கு சிறந்தது.
- பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும்.