குறைந்த காலத்தில் அதிகமாக விளைச்சல் கிடைக்கும் என்ற ஆசையால், விவசாயிகள் பலரும் இரசாயனங்களை பயன்படுத்தி கடந்த சில காலமாக சாகுபடி செய்தனர். இதனால் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும், இயற்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. மேலும் உணவு நஞ்சானதும், அதனை உட்கொள்ளும் மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றனர். இயற்கையும் தனது நிலையில் இருந்து மாறுபட தொடங்கியுள்ளது.
இப்போது பல விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கும் விதமாக சின்ன சின்ன விவசாயக் குறிப்புகள் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கு காண்போம்.
சுழற்சி முறை பயிர் சாகுபடி
விவசாய நிலத்தில் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று தடவைக்கு மேல் சோளம் விதைத்தால், அந்த நிலத்தில் கோரை புல் வளருவதில்லை. அதே போல் சோளம் சாகுபடி நிலத்தில் மஞ்சள் நடவு செய்தால் மகசூல் அதிகமாக இருக்கும்.
கம்பு சாகுபடி நிலத்தில் வாழை பயிரை நடவு செய்தால் அதிக மகசூல் பெறலாம். மேலும் கம்பு சாகுபடி செய்த வயலில் நிலக்கடலையும், நிலக்கடலை சாகுபடி செய்த நிலத்தில் கம்பையும் மறு சுழற்சி முறையில் பயிரிட்டால் விளைச்சல் அதிகமாக கிடைக்கும்.
இதற்கு பதில் இதை பயன்படுத்துங்க
வயலில் யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக மாட்டு கோ மூத்திரத்தை உபயோகப்படுத்தலாம். டி.ஏ.பி-க்கு பதிலாக ஜீவாமிர்தம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
பொட்டாசியத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள், அதற்கு பதிலாக அடுப்பு சாம்பலை வயலுக்கு பயன்படுத்தலாம்.
வயலில் பயிர்களுக்கு தழைச்சத்து அதிக அளவில் கிடைக்க பலதானிய விதைப்பு முறை மற்றும் கொழுஞ்சி விதைப்பு முறைகளை பயன்படுத்தலாம்.
இரசாயன உரங்களுக்கு பதிலாகவும் மற்றும் பயிர்கள் வளர்ச்சி ஊக்குவிக்கும் பஞ்சகவ்யத்தை உபயோகப்படுத்தலாம்.
பயிர்களை தாக்கும் பூச்சிகளுக்கு வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், தசகவ்யா, அக்னி அஸ்திரம் போன்றவற்றை தண்ணீருடன் கலந்து அடிப்பதால் பயிர்கள் செழித்து வளரும்.
பார்த்தீனியம் செடியை அழிக்க நாம் அன்றாடம் பயன்படுத்தும் கல் உப்பை பயன்படுத்தலாம். மேலும் களைக்கொல்லிக்கு பதிலாக மாட்டு கோ மூத்திரத்தை பயன்படுத்தலாம். மண்ணின் அடி ஆழத்தில் இருக்கும் சத்துக்களை மேலே கொண்டு வரும் சக்தி மண்புழுவிற்கு உண்டு.
இந்த யுக்தி விவசாயிகளின் சக்தி
மா, கொய்யா, சப்போட்டா போன்ற பழ தோட்டங்களில் அதிகளவில் அணில்களின் நடமாட்டம் இருக்கும். பழத் தோட்டத்தில் அணில் வராமல் விரட்ட ஒரு கைப்பிடி அளவிலான பூண்டை அரைத்து நாலு லிட்டர் தண்ணீருடன் கலந்து மரத்தில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிப்பதால் பூண்டு வாசனையால் அணில்கள் ஓடி விடும். மேலும் பழ தோட்டத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருக்கும்.
தென்னை மரத்தில் அதிக காய் காய்க்க தென்னம் பாலையில் ஒரு செங்கல்லைக் கட்டி தொடங்க விடுவதால், பாலையில் உள்ள குரும்பைகள் கீழே கொட்டாமல் அதிகமாக காய்க்கும்.
அதே போல் காய் பிடிக்காத தென்னை மரத்தில் பாலைகளுக்கு இடையில் கொழிஞ்சியை வைத்தால் காய்கள் நன்றாக பிடிக்கும்.
மேலும் அவரையில் அடிக்கடி ஏற்படும் நோய்களில் காய் துளைப்பான் ஒன்றாகும். இதை கட்டுப்படுத்த தண்ணீருடன் வேப்ப எண்ணெயை கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும்.
அவரை செடிகளுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் விளைவிக்கும் பொருட்களும் இயற்கையாக இருக்கும், நாமும் அதிக லாபம் பெறலாம்.