கருப்பட்டி – சர்க்கரை – பனை வெல்லம்
மனிதனின் காலச்சக்கரத்தில் பலமான இடத்தை பிடித்திருப்பது உணவும், மகிழ்ச்சியும். பிரபஞ்ச மனிதர்கள் அனைவரும் விரும்பும் ஒரு மகத்தான சொல் இனிப்பு.
பல் முளைக்காத குழந்தைகள் முதல் பல்லிழந்த முதியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவது இனிப்பை. இனிப்பு என்றதும் நம் நினைவுக்கு வருவது லட்டு, ஜிலேபி, கேக், கேசரி, பாயசம், பால் கோவா, அல்வா இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இனிப்பு ஒவ்வொருவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் சுண்டி இழுப்பதற்கு காரணம் அதன் சுவையும் உடலில் ஏற்படும் மாற்றமும்.
நாம் உட்கொள்ளும் அனைத்தும் நம் உடலில் இனிப்பாகவே இறுதியில் உருமாறுகிறது என்றாலும் இனிப்பு சுவை இல்லறத்தையே சுவைக்க வைத்து தன் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. சுவைகளின் அரசன் என்று கூட இனிப்பை வர்ணிக்கலாம். அப்படி என்னதான் செய்கிறது இனிப்பு நம் உடலில் என்கிறீர்களா?
உணவு இனிப்பாக மாறும்
நாம் உண்ணும் அனைத்தும் இறுதியில் உடலுக்கு சக்தியையும் ஆற்றலையும் கொடுக்கக் கூடியதாக உடலால் உருமாற்றப்படுகிறது. fructose, glucose, galactose, sucrose, lactose, starch, glycogen, maltose என பல வகைகளில் உடலால் பிரிக்கப்பட்டு, கிடைக்கும் ஆற்றலை அன்றாடம் செயலாற்ற பயன்படுத்தி அதிகம் இருப்பதை உடலில் சேமித்தும் வைக்கிறது. நாம் உண்ணும் அனைத்தும் இனிப்பாக மாற்றப்பட்டு சதை, தசை, செல் வளர்க்க துணைபுரிகிறது.
உணவும் நஞ்சும்
இன்றோ உணவு பல இரசாயன பொருட்களாளும், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி விஷங்களாலும் ஊடுருவி உள்ள காரணத்தாலும் நாம் உண்ணும் நஞ்சு கலந்த உணவை புரிந்து கொள்ள உடலால் முடியாமலும், சீராக ஜீரணிக்க முடியாமலும், கழிவான இந்த நஞ்சை வெளியேற்றவும் முடியாமல் உடல் சிரமப்படுகிறது. இதனால் தசைகள், சதைகள், செல்கள் கழிவுகளால் சூழப்பட்டு உடல் பருமனாகவும், பல உபாதைகளுடனும் நாள்பட்ட நோயாக மாறி வருகிறது.
உண்ணும் உணவெல்லாம் இனிப்பாக உடலால் மாற்றப்பட்டாலும் நாக்கில் உணரும் இனிப்பு சுவையின் தத்துவமே வேறு. இந்த இனிப்பு சுவைக்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெருமளவில் அனைவரும் அடிமைகளாகி இருக்கிறோம்.
அடிமையாக்கும் அளவிற்கு இந்த இனிப்பு சுவை என்னதான் மாயமந்திரத்தை உடலில் செய்கிறது என்கிறீர்களா? இனிப்பு சுவை என்பது உணவு மட்டுமல்ல உடலின் சீரான இயக்கத்திற்கு பெரிதும் உதவும் சூட்சம இரகசியம்.
சுவையும் உடல் உறுப்பும்
ஒவ்வொரு சுவையும் உடலில் ஒவ்வொரு செயல்பாட்டை புரிகிறது. உடலுறுப்புக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு புளிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் வெளி உறுப்பான கண்கள் அதனை வெளிப்படுத்த உள்ளுறுப்பும் புத்துணர்வடையும்.
அதைப் போல் இனிப்பு சுவை நாக்கில் பட்டவுடன் உதடு மலர, எச்சில் சுரக்க, இரைப்பையும் (வயிறு), மண்ணீரலும் புத்துணர்வடைய ஜீரணம் சீராவதுடன், சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இன்சுலின் எளிதாக சுரக்க மனமும் அமைதி பெறும். இன்னும் என்ன வேண்டும் உடல் – உணவு – உணர்வு இவற்றின் சுகத்தை எளிதாக அனுபவிக்க.
இந்த முறையில் உணவை உட்கொள்ள அனைத்து சுரப்பிகளும் எளிதில் சுரப்பு நீரை சுரக்க உடலுக்கு தேவையான வளமான ஆற்றலும் பெருகுகிறது. இதனை அறியாமல் உடலும் உணர்வும் நம்மை ஆட்டி வைக்க நாமோ அறிந்தும் அறியாமலும் உடலுக்கு ஏற்றவாறு ஆட இனிப்பிற்கு அடிமையாகிறோம்.
ஆனால் வில்லன் இன்று இதன் ரூபத்திலேயே நம்மை சுற்றி வலம் வருகிறான். இனிப்பை கண்டாலே நம்மில் பலர் பயப்படுவதும் நம் குடும்பத்தார் உண்ணக்கூடாது என்று மிரட்டுவதும், கண்ணில் காட்டாமல் வைப்பதாலும் எந்த பலனும் இல்லை.
இனிப்பு உயிரினத்திற்காக பிரபஞ்சம் கொடுத்த கொடை. இயற்கை முறையில் இயற்கை படைத்த உடலுக்கு கொடுக்கும் போது வாழ்வு செழிக்கும்.
இனிப்பு எது?
இன்றோ இனிப்பு என்றதும் ஒரு குறிப்பிட்ட பொருளான வெள்ளை சர்க்கரையை மட்டுமே கருதுகிறோம். கருதுவது மட்டுமில்லாது அதனையே பயன்படுத்துவதனால் பல தீங்கும் ஏற்படுகிறது. வெள்ளை சர்க்கரையே நமது வில்லன். வணிகமயமாக்கலும், உற்பத்தி பெருக்களாலும் இந்த வெள்ளை சர்க்கரை தயாரிக்க பல இரசாயனங்களையும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நஞ்சையும் இதன் தயாரிப்பில் சேர்கின்றனர்.
நாக்கு இனிப்பு சுவையை உணர்ந்து சுரப்பிகளையும், சுரப்பு நீரையும், எச்சிலையும் சுரக்கச் செய்ய வில்லனான இரசாயனங்கள் சூழ்ந்த சக்கை வெள்ளை சர்க்கரை உடலில் செல்ல ஆசைக்காட்டி மோசமான கதையாய் உடல் சரியான உணவுக்கு ஏங்க தொடங்குகிறது. இந்த உணர்வால் சரியான உணவும் உடலுக்கு கிடைக்காது கழிவுகள் உடலில் தேங்கி நஞ்சு ரூபமாய் வெள்ளை சர்க்கரை இனிப்பு என்னும் ஏமாற்று வேலையைத் தொடர்கிறது.
நஞ்சு வெள்ளை சர்க்கரை நம்மை சுற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சக்கலேட்டாகவும், குளிர்பானங்களாகவும், bakery பொருட்களாகவும், ஐஸ்கிரீம், squash மற்றும் அனைத்து இனிப்பு பானங்களாகவும் வலம்வருகிறது.
நாக்கு உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கக் கூடிய சுவையைக் கேட்க, ஆற்றல் இல்லாத நஞ்சு கலந்த சுவையூட்டும் வெள்ளை சர்க்கரை உணவை கொடுக்க நம் பிஞ்சு குழந்தைகளின் உடலையும் உணர்வையும் ஏமாற்றுகிறோம். ஏமாந்த உடல் அதிகம் உணவை உட்கொள்ள சொல்கிறது. மேலும் தனக்குள் ஒரு வித வெறுப்பையும் விரக்தியையும் ஏற்படுத்துகிறது. மனநிலையும் உடல் நிலையுடன் பெரிதும் பாதிக்கப் படுகிறது.
தேவைக்கு சரியான உணவை கொடுக்காது நஞ்சையும் சக்கையையும் கொடுப்பதினால் விரைவில் உடல் உறுப்புக்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்கிறது. நஞ்சு அதிகமாக அதிகமாக உடல் சூடு அதிகமாகி உறுப்புகள் வறண்டு போகிறது. இன்சுலின் சுரப்பு நிறுத்திக்கொள்கிறது. ஜீரண சுரப்பிகள் சரிவர சுரக்காது சீரான ஜீரணம் தடைபடுகிறது. மூட்டுகளில் ஜவ்வு வறண்டு போக மூட்டு வலி நிரந்தரமாகிறது.
இனிப்பை உண்ணக்கூடாது என்று கண்டிப்பவர்கள் இனியாவது ஒன்றை புரிந்து கொள்வோம்.
இனிப்பு உடலுக்கும் உணர்வுக்கும் அவசியம் தேவை. இனிப்பு என்றால் வெள்ளை சர்க்கரை இல்லை. இனிப்பு என்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தியைக் கொடுத்து நல்ல ஆற்றலைக் கொடுக்கக் கூடியது.
இரசாயனங்களையும் சுவையூட்டிகளையும் கொண்டுள்ள பொருளான வெள்ளை சர்க்கரையை உட்கொள்வதால் உடலில் உள்ள பல வைட்டமின்களும் சுண்ணாம்பு சத்துக்களும் அரித்து எடுக்கப்படுகிறது. உடல் பலவீனமடைவதுடன் குழந்தைகள் பெரியவர்கள் தொடர்ந்து உட்கொள்ள எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள், ஜீரண குறைபாடு, தேவை புரியாது உட்கொள்ளப்படும் அதிகப்படியான உணவால் உடல் பருமன் எனப்பல நம்மை தாக்குகிறது.
உடலும் உணர்வும் கேட்கும் நஞ்சு கலக்காத இனிப்பு சுவை நம் நாட்டு சர்க்கரை, வெல்லம், பனை வெல்லம், பனஞ்சர்க்கரை, கருப்பட்டி மூலம் உடலுக்கு அளிக்க பல காலம் உடலில் சுரக்காத இன்சுலினும் (விலங்குகளில் இருந்து பெறாமல்) சுரந்து உடல் ஆரோக்கியமாகும்.
இயற்கை முறையில் தயாராகும் இனிப்பு பொருட்களை இந்த இணைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். வெல்லம் நாட்டு சர்க்கரை தென்னஞ் சர்க்கரை கருப்பட்டி |
அனல் பறக்கும் கோடையில் பலர் இனிப்பான செயலை விரும்புவர். இந்த கோடையில் வெள்ளை சர்க்கரை தவிர்த்து இரசாயனம் கலக்காத இளநீர், மோர், பதநீர், பானகம், தேன் எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ளலாம்.
இனி இனிப்பு பண்டங்களை வெள்ளை சர்க்கரை சேர்க்காது நாட்டுச் சர்க்கரையில் அல்வா, பாயாசம், லட்டு என்றும் பனஞ்சக்கரையில் மைசூர் பக்கு, கேக் மற்றும் கருப்பட்டியில் குழிப்பணியாரம், பணியாரம், கடலை மிட்டாய், தேங்காய் மிட்டாய் செய்து தர அனைவரும் எந்த இனிப்பு பயமும் இல்லாது உண்ணலாம்.