Indigofera Tinctoria; Indigo Plant; அவுரி
நாற்பது வயதைக் கடந்த பலருக்கும் பரிச்சயமான ஒரு மூலிகை அவுரி. நரைமுடிக்கு இயற்கை சாயம் அடிக்க விரும்புபவர்கள் பயன்படுத்தும் இரண்டு மூலிகைகளில் ஒன்று தான் இந்த அவுரி. இயற்கை நீல நிற சாயத்தைக் கொண்ட மூலிகை இந்த அவுரி. தமிழகத்தில் இந்தியா மட்டுமில்லாமல் பல வெளிநாடுகளுக்கும் நீல நிற சாயத்தை இந்த அவுரி செடியிலிருந்து தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். நீலி என்றொரு பெயரும் இதற்கு உண்டு.
இது ஒரு செடி வகை தாவரம். இதன் இலைகள் ஆழ்ந்த பச்சு நிறமாக இருக்கும். இதன் இலைகள் சிறகு வடிவ கூட்டிலைகளாகும். இதன் கனிகள் வெடித்து சிதறும் அமைப்புக் கொண்டது. கசப்பு சுவை கொண்ட அவுரி செடியின் வேர், இலை ஆகியவை பயன்படும் பகுதியாகும்.
சாயம் தயாரிக்க மட்டுமில்லாமல் பல மருத்துவ பயன்களையும் கொண்டது இந்த அவுரி. உடலில் ஏற்படும் வெப்பத்தை அகற்றி, குடல் புழு பூச்சிகளைக் கொல்லும் ஆற்றலும் கொண்டது இந்த மூலிகை. மேலும் வாதம், பித்த, கபநோய்கள், கீல் வாதம், மாந்தம், மஞ்சள் காமாலை மற்றும் பதினெட்டு வகை நஞ்சுகளையும் போக்கும் அற்புதமான மூலிகை. உடலை பொன்னிறமாக மாற்றும் சிறந்த மூலிகை இது.
இளநரைக்கு / நரை முடிக்கு
நரை முடிக்கு அவுரி பொடியை நீருடன் கலந்து இரும்பு வாணலியில் ஓரிரவு ஊறவைத்து அல்லது அவுரியை நன்கு அரைத்து தலையில் தேய்த்து நான்கு மணி நேரத்திற்குப் பின் அலசி வர வெள்ளை நிற கூந்தல் நீல நிறத்திற்கு மாறும். இதுவே கருமையாக மாற இதனைப் பயன்படுத்தும் முதல் நாள் மருதாணியை தேய்த்து ஊறவைத்து அலசிய பின் அவுரியை பயன்படுத்த கருமை நிறத்திற்கு மாறும்.
அவுரி குடிநீர்
இந்த அவுரி செடியின் அவுரி வேரை நீரில் காய்ச்சி குடிநீராக செய்து குடித்துவர வெள்ளை, மயக்கம், வயிற்று வலி மற்றும் பல நச்சுக்களும் மறையும்.
வீக்கங்களுக்கு
உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க அவுரி இலைப் பொடி உதவுகிறது. அவுரி இல்லை பொடியை காலை மாலை என தினமும் உண்டு வர வீக்கங்கள் மறையும். கால்,கை வலிப்பு, வயிற்று வலி, மயக்கம் ஆகியவையும் தீரும்.
புண்களுக்கு
புண்களுக்கு சிறந்த பலனை அவுரிப் பொடி அளிக்கும். இந்த பொடியை புண்களின் மீது வைத்துக்கட்ட விரைவில் புண் ஆறும்.
வெள்ளை, வெட்டை மறைய
யானை நெருஞ்சில் என்ற பெருநெருஞ்சில் இலையுடன் அவுரி வேர் கலந்து நான்கு அரைத்து மோரில் கலந்து பருக வெள்ளை, வெட்டை நோய்கள் நீங்கும்.