அந்த காலத்தில் அஜீரணம் என்பது திபாவளிக்கு மட்டுமே வந்த ஒரு தொல்லையாக இருந்தது. அதனாலேயே இனிப்பு உணவுகள், தின்பண்டங்கள், அதிக பலகாரங்கள், விருந்தோம்பல், உற்றார் உறவினருடன் உணவுகள் என ஒரு கட்டு கட்டி தீபாவளி முடிந்ததும் அனைவருக்கும் அஜீரணம் காணப்படும். இதனைப் போக்கவே நமது முன்னோரும் திபாவளிக்கு திபாவளி லேகியம் செய்து உண்ணும் பழக்கத்தையும் நடைமுறைப்படுத்தினர்.
இன்றோ நிலைமை தலைகீழ் ஒவ்வொரு நாளும் பலருக்கும் அஜீரணம் தான். அந்தளவு அதிக உணவு. அதிலும் பசியில்லாமல் உண்பது, கண்ட உணவை உண்பது, உணவிற்கு உணவு இடைவெளி இல்லாமல் கிடைப்பதையெல்லாம் வாயிலிருக்கும் பல்லினால் அரைக்காமல் விழுங்குவது என பல காரணங்கள் அஜீரணத்தை ஏற்படுத்துகிறது.
உபவாசம், விரதம் என்பதெல்லாம் மறந்தே போய்விட்டது. இதுவும் அஜீரணத்திற்கு ஒரு மிக முக்கிய காரணம். அஜீரணத்தால் புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், மூலம் உட்பல பல தொந்தரவுகளும் ஏற்படுகிறது. இதனைப் போக்க சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேலும் ஒவ்வொரு வேளையில் பசித்தபின் உணவை நன்கு பற்களால் மென்று விழுங்குவது அஜீரணத்தை முற்றிலும் போக்கும்.
- 4 முதல் 5 கற்பூர வல்லி இலையை மென்று தின்றால் வயிற்றுக் கோளாறு நீங்கும்.
- உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறு 1 பங்கும், நுணா இலை சாறு ஒரு பங்கு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 3 அல்லது 4 வேளை 6 மாதக் குழந்தைக்கு சிறிய ஸ்பூனில் அரை ஸ்பூன் அளவும், 1 வயது முதல் 2 வயது – ஒரு ஸ்பூன், 3 வயதிற்கு மேல் இரண்டு ஸ்பூன் என சாப்பிட எல்லா விதமான வயிற்றுக் கோளாறுகளும் நீங்கும்.
- ஓம தண்ணீர் குடிக்கலாம்.
- ஓமம், சுக்கு, திப்பிலி, ஏலம் ஆகியவை சமன் எடையில் வறுத்து இடித்து பொடி செய்து வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டியாகக் காலை, மாலை தேன் கலந்து சாப்பிட்டால் செரியாமை. நீங்கும். கடும் வயிற்றுப் போக்கு தீரும்.
- பப்பாளி பழத்தை ஒவ்வொரு நாளும் ஒரு வேளை உணவாக சிறிதளவு சாப்பிட செரிக்கும் திறன் பெருகும்.
- கொய்யா கொழுந்து இலையை மென்று விழுங்க செரியாமை நீங்கும். கொய்யா இலை தேநீர் பருக சிறந்த பலனை பெறலாம்.
- புளியந் தளிரை துவையலாக்கி சாப்பிட வயிறு மந்தம், அஜீரணம் தீரும்.
- கோரைக் கிழங்கு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம், செரியாமைக்கு சிறந்த பலனை அளிக்கும். கோரைக் கிழங்கைக் குடிநீராக்கிக் காய்ச்சிய பாலில் சேர்த்து அதனை மோராக்கி சாப்பிட்டால் குழந்தைகளின் செரியாமை நீங்கும்.
.