ஒரு செடி வளர ஏன் கால நேரம் அவசியம் என்று இனி பார்ப்போம்?
இயற்கையில் படைக்கப்பட்ட ஜீவராசிகள் அனைத்தும் உலகின் சுழற்சி, சந்திரனின் ஈர்ப்பு, சூரியனின் ஆற்றல் ஆகியவற்றால் இயங்குகிறது. பல ஆராய்ச்சியாளர்கள் உலக உயிரினங்களைக் கொண்டு அதன் உண்மைத் தன்மையை ஆராய்ச்சி செய்தனர்.
இருட்டறையில், செயற்கை வெப்பத்தையும், ஈர்ப்பையும் அளித்தாலும் பல உயிர்கள் இயற்கை சுழற்சியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என தெரியவந்தது. இதனடிப்படையிலேயே நமது செடிகளும், மரங்களும்… இயற்கையாக கிடைக்கும் நமது பாரம்பரிய விதைகளிலிருந்து வளர குறித்த காலத்திலும், குறித்த நேரத்திலும் தவறாமல் பூத்து, காய்த்து அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது. தங்களுக்குள் ஒரு நாள்கட்டியையும், கடிகாரத்தையும் வைத்திருப்பதைப்போல் இருக்கிறது இந்த அதிசயம் என்றால் அது மிகையாகாது.
பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரைப்போல் ஆங்கங்கே குறிப்பிட்ட காலத்தில் அனைத்து தாவரங்களும் தங்களுக்கான கால நேரத்தில் மலருகிறது.
இந்த வகையில் நமது காய்களும், பழங்களும் கூட அதிசய பட்டியலில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா. கோடைகாலத்தில் கிடைக்கும் மாம்பழமும், பலாப்பழமும், நுங்கும், தண்ணீர்பழமும் இந்த அதிசய பட்டியலில் தான் உள்ளது.
குளிர்காலத்தில் பயிறுவகைப்பயிர்கள் விளைந்து அறுவடைக்கு வருவதும் அதிசயம் தான். இதற்கெல்லாம் காரணத்தைக் கேட்டால் ஆச்சரியம் கலந்த அதிசயமாக இருக்கும்.
இயற்கையின் படைப்பில் அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைத்திருக்கிறது என்று படித்திருப்போம். ஒன்று மற்றொன்றின் உணவாகவும் உணவுச்சங்கிலியை பூர்த்தி செய்கிறது. இதனடிப்படையில் மனிதர்கள் உண்ணும் தாவரங்கள் மனிதர்களின் உடல் உணர்ச்சி நிலைக்கேற்றவாறு விளைந்து உணவாகிறது.
கோடைகாலத்தில் கிடைக்கும் உணவுகள் கோடை உஷ்ணத்தையும், கோடையில் ஏற்படும் சோர்வையும் தணிக்க உதவும் உணவுகளாக இருக்கும். அதேபோல் குளிர்காலத்தில் கிடைக்கும் உணவுகள் புரதம் நிறைந்த நோய் எதிர்ப்பு சத்துக்கள் நிறைந்து உடலுக்கு ஆற்றலளிக்கும் உணவுகளாக இருக்கும். இதன் காரணமாகவே காலத்திற்கேற்றவாறு அந்தந்த தாவரங்கள் செழித்து வளர்கிறது.
விவசாயம், பயிர் வளர்ச்சி போன்றவையெல்லாம் ஒரு அரைக்குள் (eg Lab) நடக்கும் விசயமல்ல. இயற்கையின் முழு ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் செயல். கண்ணுக்கு தெரியாது மண்ணிலிருக்கும் நுண்ணுர்கள் தொடங்கி மண்புழுக்கள், பூச்சிகள், பறவைகள், தேனீக்கள், காற்று, மழை, என பஞ்சபூதங்களின் வரிசையில் அனைத்தின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது..
இவை எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்களின் வாழ்வாதாரமான சூரியன் செடிகளின் வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானது. ஒன்றன் துணையோடு ஒன்று இருந்தால் மட்டுமே உணவு சாத்தியப்படும். இந்த சங்கிலியில் ஒன்று அறுபட்டால் கூட சில காலங்களில் உணவு பெரும் கேள்விக்குறியாகும். இவை அனைத்துமே இயற்கையின் அங்கங்களாக இருக்க, அவற்றின் துணையுடன் வளரும் செடிகளும் இயற்கையின் வரப்பிரசாதம் தானே. விடியும் சூரியனும், பிரகாசிக்கும் சந்திரனும் கூட நேரம் காலம் பார்க்கும் பொழுது அவற்றின் துணையில் வளரும் செடிகளுக்கு நேரமும் காலமும் அவசியம். நாமும் இதனை ஏற்று இயற்கையின் போக்கில் சென்றால் செடிவளர்ச்சி என்ன இயற்கையின் கூரைக்கு அடியில் அனைத்துமே சாத்தியமாகும்.