Oldenlandia umbellata; இம்பூறல்
தமிழக கிராமங்களில் அதிகமாக தரையோடு படர்ந்து வளரும் ஒரு சிறு செடி இம்பூறல். நெஞ்சு சளி, இருமல் உட்பட பல பெயர்தெரியாத பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இந்த இம்பூறல் உள்ளது. இனிப்பு சுவைக் கொண்ட இம்பூறல் மூலிகையின் இலை, வேர், வேர்ப் பட்டை, சமூலமே மருந்தாக பயன்படும் அற்புத ஆற்றல் கொண்டது. இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் கூட்டாக சிறு மலர்களாக இருக்கும். இதன் இலைகள் நீண்டு அகலத்தில் குறுகி அடுக்காக இருக்கும்.
இரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றலும், உடல் கோழையை அகற்றும் தன்மையும் கொண்ட இம்பூறல் பித்தத்தைப் போக்கி. கப நோய்களையும், இரத்தப் போக்கையும் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொண்டது. கல்லீரல் தொந்தரவுகள், மாதவிடாய் பிரச்சனைகள், விக்கலுக்கு மிக சிறந்த மருந்து. உணவாகவும், குடிநீராகவும் இதனைப் எடுத்துக்கொள்ள நல்ல பலனைப் பெறலாம். இன்பூறா வேர், சாயவேர், இம்பூரா வேர், சிறு வேர், இராமேசுர வேர் என பல பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு.
இம்பூறல் குடிநீர்
இம்பூறல் சமூலத்தை அதாவது இலை, வேர் ஆகியவற்றை சேர்ந்து குடிநீர் செய்து கால் கப் அளவு பருகிவர இரைப்பு, இளைப்பு, இருமல் போன்ற பல தொந்தரவுகள் நீங்கும், இந்த குடிநீரை புண்களுக்கு தடவுவதாலும், கழுவதாலும் புண்கள் விரைவில் ஆறும். நுரையீரல் நோய்களுக்கும் இதனுடன் வல்லாரை கீரை சேர்த்து குடிநீர் தயாரித்து பருக நல்ல பலன் கிடைக்கும்.
இம்புறல் செடி வேர்
இந்த இம்புறல் செடியின் வேரை சுத்தம் செய்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு அடையாகவும் அல்லது வேறு உணவுகளிலும் பயன்படுத்த கபநோய்கள் மறையும். கப நோய்கள் நீங்க அரிசி மாவுடன் கலந்து இரண்டு அடை வீதம் காலை, மாலை உண்டு வர விரைவில் பலன் கிடைக்கும். மேலும் இதனை மாத்திரைகள் போல் சிறு உருண்டைகளாக மிளகு சேர்த்து உருட்டி கையைவைத்துக் கொண்டு அன்றாடம் உணவுடன் கலந்து உண்பதாலும் கப நோய்கள் தீரும்.
இம்பூறல் இலை
சாதாரணமாக கிடைக்கும் இம்பூறல் இலைகளை சுத்தம் செய்து சாறு எடுத்து பாலுடன் கலந்து தினம் 2 வேளைகள் பருகி வர மார்பு எரிச்சல் தணியும். உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலுக்கும் இம்பூறல் இலைச்சாற்றை தடவி வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.