பொதுவாக பலகினமாகவும், எதிர்ப்புசக்தியுமற்ற மனிதர்களை மட்டும்தான் எளிதாக நோய்க்கிருமிகள் தாக்கும். ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் இருக்க காற்றாலும், நீராலும் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும். ஆனால் அவ்வாறு பரவும் நோய் கிருமிகள் அங்கிருக்கும் ஆயிரம் நபர்களையும் தாக்குவதில்லையே.. குறைந்தது ஒரு பத்து பதினைந்து நபர்கள் மட்டும்தான் நோயின் தன்மையை அடைகின்றனர். மற்றவர்களிடம் பரவிய நோய்க்கிருமிகள் அழிந்துபோய்விடுகிறது. அதாவதும் மனிதனிடம் இயற்கையாகவே உடலில் நோயெதிர்ப்புத்திறனும் அதற்காக உடலிலேயே தோல், உமிழ்நீர், சிலவகையான சுரப்பிகள் போன்றவை உடலைக்காக்கும் அரணாகவும், பாதுகாப்பு படையாகவும் பணிசெய்கிறது. அதனால் பஞ்சபூதங்களின் வழியிலும் உணவாகவும் பொதுவாக பரவக்கூடிய நோய்க்கிருமிகளை உடல் தானாகவே அழிக்கும் வல்லமை படைத்திருக்கிறது. இந்த நோயெதிர்ப்புத்திறன் சீராக செயல்பட ஆற்றல் மிகுந்த மரபணுவும், சத்தான உணவும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் அவசியம்.
ஆற்றல் மிகுந்த மரபணு என்றுமே சிறந்த முறையில் தன்னுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தும். சிறந்த ஆற்றல் கொண்ட மனிதர்களுக்கு இயற்கையாகவே நோயெதிர்ப்புத்திறன் சீராகவும், செம்மையாகவும் செயல்படும். உதாரணத்திற்கு சில குழந்தைகளுக்கு பிறந்தது முதல் அடிக்கடி காய்ச்சல், சளி என ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படுவதைக் காணலாம். மரபணு ஆற்றல் குறைவாக அதாவது தாய்தந்தையின் மரபணுவைப் பெற்ற குழந்தை அவர்களிடமிருந்து ஆற்றல் குறைந்த மரபணுவை பெறுவதால் இயற்கையாகவே இவர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக இருக்கும்.
சத்தான உணவுகளை உட்கொண்டு, பாரம்பரிய பழக்கவழக்கங்களை பின்பற்றி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பவர் உடலுக்குள் தீமை செய்யும் நோய்க்கிருமி சென்றால் அவரின் நோய்யெதிர்ப்புத்திறன் அந்த நோய் கிருமியை அடித்து வெளியேற்றும் என்பது அனைவருமறிந்த ஒன்றுதான். இவ்வாறு நோய்கிருமியினை உடலைவிட்டு வெளியேற்ற பல பாதுகாப்பு படையினைர் நமது உடலில் உள்ளனர். நமது சத்தான ஆகாரம் உடலில் இலட்சக்கணக்கில் இருக்கும் பாதுகாப்பு படையினரை விழிப்போடும், துடிப்போடும் வைத்திருக்க உதவும். மேலும் நோஞ்சானாக இல்லாமல் எதிர்க்கும் திறனை வளமாக்க உடலுக்கு போதிய தெம்பையும் அளிக்கும். நமது சத்தான ஆகாரங்கள் உடலில் இருக்கும் பல நன்மை செய்யும் நுண்ணுயிர்களைப் பாதுகாத்து தீமை செய்யும் நுண்ணயிர்கள் உடலில் நுழைந்தாலும் அவற்றை அடித்து விரட்டிவிடும்.
அதேபோல் நம்முடைய பழக்கவழக்கங்களும் மிகமுக்கியம். சிறந்த மரபணுவையும், நல்ல உணவும் உட்கொள்ளும் சிலருக்கு நோய்த்தாக்குதல் சில நேரம் காணப்படும். அதற்கு காரணம் முறையற்ற பழக்கவழக்கங்கள். இதனால் உடல் தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து சற்று தடுமாறும். அவ்வாறான நேரத்தில் நோய்க்கிருமிகள் தாக்கும். உதாரணத்திற்கு காலநேரமறிந்து செயல்படாமலிருப்பது. நம்மூரில் பொதுவாக ஆடிமாதம் காற்றடிக்கும் மாதம். நோய்க்கிருமிகள் அதிகம் பரவும் காலம். இந்த காலத்திற்கென்று சில வழிமுறைகளை அதாவதும் வீடுகளில் வேப்பிலை, மாவிலை, மஞ்சள் போன்றவற்றில் தோரணங்களை கட்டுவதும் அந்த காலத்திற்கேற்ற உணவை எடுத்துக்கொள்வது என ஒரு முறையை நம் முன்னோர்கள் பின்பற்றினர். காற்றின் மூலமாக பரவக்கூடிய நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க இந்த பழக்கம் இருந்தது. இதுபோன்ற பழக்க வழக்கங்களை இன்று கருத்தில் கொள்ளாமல் இருப்பதாலும் நோய்க்கிருமிகள் தாக்குகிறது.
அதனால் கூடுமான வரை நல்ல உணவுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், பொதுவான நடைமுறை பழக்கங்கள் ஆகியவற்றை சீராக கடைப்பிடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் கிருமிகள் தாக்கம் ஏற்பட்டாலும் அவற்றை நமது உடல் அழித்து வெளியேற்றும்.
நல்ல உணவுகள் என்பது ஆரோக்கியமான பொருட்களை கொண்டு எந்த இரசாயனங்கள் செயற்கை சுவையூட்டிகள், மணமூட்டிகள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட உணவுகள், அதிகமாக இயற்கை உணவுகள், காய்கறி, பழங்கள் போன்றவை. உடலுக்கும குடலுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எளிதாக செரிமானமாகும் உணவுகள். நமது பருவகாலம், தட்பவெப்பம், இருக்குமிடம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உட்கொள்ளும் உணவுகள் உடலுக்கு சிறந்த மருந்தாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளாகவும் உள்ளது.
பாரம்பரிய பழக்கவழக்கங்கள் என்பது நமது முன்னோர்கள் வழிவழியாக செய்த சில சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் போன்றவை. உதாரணத்திற்கு முன் நாம் பார்த்த ஆடி மாதம் கூழ் ஊற்றும் பண்டிகையும் அதனை பருகும் சடங்குகளும்.
பொதுவான நடைமுறை பழக்கங்கள் என்பது அன்றாடம் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுவது, சூரிய ஒளியில் அரை மணிநேரம் இருப்பது, பசித்து புசிப்பது, காலையில் நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், இரவு உணவினை எழு மணிக்குள் முடிப்பதும், இரவு பத்துமணிக்குள் தூங்குவதும் உடலுக்கு சிறந்த ஆற்றலை அளிக்கும்.