ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் இருக்க காற்றாலும், நீராலும் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும். ஆனால் அவ்வாறு பரவும் நோய் கிருமிகள் அங்கிருக்கும் ஆயிரம் நபர்களையும் தாக்குவதில்லையே.. குறைந்தது ஒரு பத்து பதினைந்து நபர்கள் மட்டும்தான் நோயின் தன்மையை அடைகின்றனர். காரணம் நோய் எதிர்ப்பு ஆற்றல்… இந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை ஓவ்வொருவரும் தத்தமது உடலில் அதிகரித்துக்கொள்வதால் எப்பேர்ப்பட்ட நோய் கிருமிகள் உடலை தாக்கினாலும் உடலின் படைவீரர்களான நமது எதிர்ப்பு சக்தி அதனை சண்டையிட்டு வென்று வெளியனுப்பும். இதனால் நமக்கு பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லாது உடல் ஆரோக்கியமும் நமது நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.
நமது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சில வழிகள்…
- அன்றாடம் காலையில் அரை மணி நேரமாவதும் சூரிய ஒளியில் இருப்பது மிகவும் அவசியமானது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும், உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும், கண்ணுக்கு தெரியாத பல நுண்ணூட்ட சத்துக்களையும் அளிக்கும் ஆற்றல் கொண்டது காலை சூரிய ஒளி.
- ஒவ்வொரு நாளும் மஞ்சள் தேநீர் பருகுவது சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
- அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் அருகம்புல் சாறை பருகுவதால் சிறந்த ஒய் எதிர்ப்பு ஆற்றலை பெறலாம். எந்த நோயும் அணுகாமல் எளிமையாக செலவின்றி நமது உடலை பாதுகாக்க அருகம்புல்லுக்கு இணையான ஒரு உணவு இல்லை என்றுகூட சொல்லலாம்.
- வீட்டருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து பருகுவது உடலின் கழிவுகளை நீக்கவும், உடலுக்கு பலத்தையும் தெம்பையும் அளித்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
- வேகவைக்காத நெல்லிக்காய், கொத்தமல்லி (கொத்தமல்லி கீர்), முருங்கை சாறு, பேரிச்சம்பழம், பச்சை தேங்காய், துளசி, வில்வ இலை ஆகியவற்றை அதிகளவில் உட்கொள்ள சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறலாம்.
- இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் (48 நாட்கள் உண்டு வர) நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் நல்ல ஆரோக்கியமான எளிதில் செரிமானமாகும் சமச்சீர் உணவு (அனைத்து சத்துக்களும் மாவு சத்துக்கள், நார்சத்துக்கள், புரதம், கொழுப்பு சத்துக்கள், வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது சத்துக்கள் சரிவீகிதமாக இருக்கவேண்டும்), பாரம்பரிய அரிசிகள், இயற்கை உணவு, இயற்கை சாறுகள், காலை யோகா போன்ற உடற்பயிற்சிகள், சுத்தமான மண்பானை குடிநீர் போன்றவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.