தானியங்களை எவ்வாறு முளை கட்டுவது?

பச்சைபயிறு, கொள்ளு, கருப்பு உளுந்து, கொண்டைக்கடலை, நிலக்கடலை (வேர்கடலை), கம்பு, கேழ்வரகு, சோளம், நரிபயறு என தானியங்களை அவ்வாறே எடுத்துக்கொள்வது பலநேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் இவற்றை முளைக்கட்டி எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும் புரதச் சத்துக்கள் நிறைந்த இந்த தானியங்களை சீரான முறையில் முளைகட்டி உட்கொள்வதால் இதிலிருக்கும் சத்துக்கள் பல மடங்கு அதிகரிப்பதும், உயிர் சத்துக்கள் எண்ணிலடங்காத அளவு பெருகுகிறது.

முளைகட்டி தானியங்களை உட்கொள்ள பல பயன்களையும் நாம் பெறமுடியும். முளைகட்டிய தானியங்களில் இருக்கும் சத்துக்களைப் பற்றியும் அவற்றினால் ஏற்படும் நன்மைகளையும் முளைகாட்டிய தானியங்களின் நன்மைகள் என்ற பதிவில் பார்க்கலாம். இனி ஒவ்வொரு தானியங்களையும் எவ்வாறு முளைகட்டுவது அவற்றை எவ்வளவு ஊறவைப்பது என பார்க்கலாம்.

தானியங்களை முளைகட்ட கவனிக்க வேண்டியவை

  • தரமான தானியங்களை வாங்க வேண்டும். தரமான தானியங்களே முளைக்கும் திறன் கொண்டவை.
  • வண்டு, புழு, பூச்சி இருக்கும் தானியங்களை தவிர்க்க வேண்டும்.
  • வறுத்த தானியங்கள் முளைக்காது, அதனால் எந்த விதத்திலும் சமைக்காத அடுப்பில் போடாத தானியங்களையே முளைகட்ட பயன்படுத்த வேண்டும்.
  • சுத்தமான சாதாரண நீரைக் கொண்டே தானியங்களை ஊறவைக்க வேண்டும். சுடுநீர் பயன்படுத்தக் கூடாது.
  • குறிப்பிட்ட காலத்திற்கு மேல் சில மணி நேரம் மட்டுமே ஊறவைக்கலாம், அதற்கு மேல் சென்றால் தானியங்களில் இருந்து புளித்த / கெட்ட வாடை வரும்.

பச்சை பயறு

மிக எளிதாகவும், விரைவாகவும் முளைக்கக் கூடிய தானியங்களில் ஒன்று பச்சைப் பயறு. முளைகட்டிய பச்சைபயிரை காலையில் உண்பதும், ஏதேனும் உணவுகளை தயார் செய்து உண்பதும் சிறந்தது. முதலில் பச்சைபயிரை ஒருமுறை கழுவிவிட்டு குப்பைகள் இருந்தால் நீக்கிவிட்டு மூன்று பங்கு சுத்தமான நீரைக்கொண்டு ஊறவைக்க வேண்டும்.

குறைந்தது ஆறு மணி நேரம் அதிகமாக எட்டு மணிநேரம் ஊறவைத்தால் போதும் பிறகு நீரை நன்கு வடித்து விட்டு ஒருமுறை சுத்தமான நீரைக் கொண்டு கழுவி விட்டு பருத்தி துணி அல்லது வலைத் துணியில் போட்டு காற்று போகுமாறு கட்டிவைக்க வேண்டும். அவ்வளவு தான் அடுத்த மூன்று முதல் ஆறு மணி நேரத்தில் பச்சை பயிறு நன்று முளைத்து விடும்.

கருப்பு உளுந்து

பச்சைபயிரைத் தொடர்ந்து மிக எளிதாகவும், விரைவாகவும் முளைக்கும் மற்றொரு தானியம் கருப்பு உளுந்து. இதனையும் பச்சை பயிரைப் போல் அதே நேரம் ஊறவைத்து அதே நேரம் கட்டிவைக்க சிறப்பாக முளைத்து விடும்.

Vigna Mungo, Black Gram, ulundu, urad dal

நரிபயறு

நரிபயரும் பச்சைபயறு, கருப்பு உளுந்து போல் ஆறுமணி நேரம் ஊறவைத்து ஆறு மணி நேரம் முளைகட்ட வேண்டும்.

கொள்ளு

பச்சைபயிறு, கருப்பு உளுந்து போல் மிக விரைவாக முளைக்கும் தானியம் கொள்ளு என்றாலும் இதனை ஊறவைக்கும் நேரம் மட்டும் மாறும். குறைந்தது எட்டு மணிநேரம் ஊறவைத்து பின் பச்சைப்பயிரைப் போல் முளைக்க விடவேண்டும்.

கொண்டைக் கடலை

கொண்டைக்கடலையை குறைந்தது பத்து மணிநேரம் பச்சைபயிறு போல் ஊறவைக்க வேண்டும். பின் நன்கு அலசி பன்னிரண்டு முதல் இருபத்தி நான்கு மணி நேரம் கற்றோட்டமுள்ளவாறு கட்டிவைக்க முளைவிடும்.

நிலக்கடலை / வேர்கடலை

முளைகட்டுவதில் சற்று தாமதமாகும் தானியம் நிலக்கடலை. நல்ல தரமான நிலக்கடலையை அலசி விட்டு பத்து மணி நேரம் ஊறவைத்து பின் ஒருநாள் முளைக்க வைக்க வேண்டும். தரமான தானியங்களே முளைக்கும்.

கம்பு, கேழ்வரகு, சோளம்

கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றை குறைந்தது பத்து மணி நேரம் ஊறவைத்து பனிரெண்டு மணிநேரம் கட்டிவைக்க அழகாக முளைத்துவிடும். மேலும் இவற்றை எவ்வாறு முளைகட்டுவது என விவரமாக தெரிந்துக் கொள்ள கேழ்வரகு, கம்பு பகுதிகளைப் பார்க்கலாம்.

(12 votes)