Welcome to HealthnOrganicsTamil !!!

காய்கனிகளை எவ்வாறு தேர்நதெடுப்பது

இயற்கையின் விதியை மீறி ஒன்றுமில்லை. செயற்கை, அறிவியல் வளர்ந்தாலும் இந்த மண்ணில் பிறந்த அனைவரும் இந்த மண்ணை விட்டு போய்த்தான் ஆகவேண்டும். மனிதனுக்கு மட்டுமல்ல இந்த விதி. ஊர்வன, பறப்பன, நகர்வன தொடங்கி நகராத மரம் செடி கொடிவரை அனைத்திற்கும் இது பொதுவிதி .

ஒரு செல்லிலிருந்து கரு உருவாகி அது குழந்தையாக வெளிவந்து, வளர்ந்து மனிதனாகி, முதுமையை அடைந்த பிறகு இயற்கையாக இந்த மண்ணை விட்டு போவது என்பது மனிதனுக்கு உள்ள விதி. அவ்வாறு மண்ணில் சேர்ந்த ஒரு விதையிலிருந்து முளைவந்து அது செடியாகவோ அல்லது மரமாகவோ வளர்ந்து பூவிட்டு, பிஞ்சாகி, காயாகவும், கனியாகவும் உருமாறி முதிர்ந்து தன் வித்துக்களை விட்டு விட்டு மீண்டும் இந்த மண்ணை அடைவது அசையாத மரம் செடி கொடிகளின் விதி. இந்த விதிகளை மாற்றுவதும், மீறுவதும் பல அழிவுகளுக்கு வழிசெய்வதாகும்.

இது ஏதோ கதையோ அல்லது கற்பனையோ அல்ல. அன்றாடம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் தங்கள் கண்முன் பார்க்கும் நிதர்சனம்.

சர்வசாதாரணமாக அனைத்து குடும்பத்திலும் இன்று குணப்படுத்த முடியாத உயிர்கொல்லி நோய்யான புற்று நோய் தாண்டவமாடுகிறது. இதற்கு காரணம் விதி மீறல் தான். எதை மீறினோம் என்கிறீர்களா?

ஒன்றா, இரண்டா.. நமது உணவு தொடங்கி, ஆடம்பரம், வாழ்வியல் முறைகள், பழக்க வழக்கம் என அனைத்திலுமே விதி மீறல்களும் மாற்றங்களும் தான்.

உணவு என்றதும் பலருக்கு அதன் மேல் உள்ள மோகம் தான் நினைவிற்கு வரும். சுவையான உணவிற்கும், மணக்கும் உணவிற்கும் இந்த உலகமே அடிமைதான்.

வணிகமயமும், தொழில்மயமும் இந்த உணவிற்கு பெரும் சந்தையையே உருவாக்கியுள்ளது. உடனடி உணவில் மட்டுமல்லாது இன்று காய்கறி, பழங்கள், கீரைகளிலும் இயற்கையின் விதிமீறல்கள் உச்சத்தில் உள்ளது.

vegetables, select fresh vegetables in tamil, good vegetables, naatu kaai, organic vegetables

ஒரு உணவு மணக்கவும், சுவைக்கவும் தரமான உட்பொருட்கள் தேவை. அதிலும் இயற்கையாக கிடைக்கும் காய்கறிகளும் கீரைகளும் அவசியமான ஒன்றாகிவிடுகிறது.

அன்றாடம் பயன்படுத்தப்படும் இவற்றில் இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள், களைக்கொல்லிகள் என பல வகை நஞ்சுக்கள் கலக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் இவை கெடாமல் இருக்கவும், பார்க்க பளபளப்பாகவும் இருக்க பல செயற்கை வேதிப்பொருட்களையும் இதனுள் செலுத்துகின்றனர். 

இவ்வாறு நச்சுக்களை உணவென்று கூட பார்க்காமல் அதன் வாழ்நாளை உயர்த்த, வியாபாரத்திற்காக சேர்க்க பல பல நோய்கள் தாண்டவமாடுகிறது. 

இருபது வருடங்களுக்கு முன் வரை தீயபழக்கவழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வந்தன. இன்று அந்த நிலை மாறி எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத பலருக்கு நோய்கள் தாக்க முக்கியக் காரணம் இவ்வாறான உணவுகள் தான்.

அதனால் நச்சுக்கள் கலக்காத இயற்கையான முறையில் விளையும் காய்கள், கீரைகளை தேர்ந்தெடுத்து உண்ணுவது வளமான வாழ்வைத் தரும்.

சரி, உணவிற்கு தேவைப்படும் பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எவ்வாறு தேர்நதெடுப்பது என்று தெரிந்துகொண்டு அவற்றை வாங்கி இனி பயன்படுத்த ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாக்கலாம்.

நம்மைச்சுற்றி, நாம் வாழும் சீதோஷண நிலையில், அருகாமையில் நம்மை சுற்றியுள்ள இடங்களில் விளையும் காய்கறிகளை உண்ணுவதால் உடல் உஷ்ணம் சமநிலைப்படும். கழிவுகள் அகலும். 
வெப்பம் அதிகமுள்ள இடத்தில் வசிப்பவர்கள் நீர்காய்களையும், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் கிழங்கு வகை காய்களையும் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

விதையில்லாத பழங்கள், காய்களை முற்றிலும் தவிர்ப்பது அவசியம். வித்தே செடிகள் மரங்கள் வளர ஆதாரமாக உள்ளது, அவை இல்லாத புது ரக உணவுகளால் பல ஆபத்துகள் உள்ளது. குழந்தையின்மை, ஆண்மைக்குறைவு போன்ற இன்றைய தொந்தரவுகளுக்கு இதுவே முதல் காரணம்.

பார்க்க பளபளப்பாக இருக்கும் காய் கனிகளை தவிர்த்து நாட்டு ரகங்களை உண்பது வந்த நோயை விரட்டவும் உதவும். இவை உணவின் சுவை, மணம், சத்தினைக் கூட்டும்.

நவீனம் வளர்ந்த இந்த கால கட்டத்தில் அனைத்தும் சாத்தியம் என்கிறது அறிவியல். நவீன காய்கனிகளை எந்த நிலத்திலும், மண்ணிலும், பருவத்திலும் இன்று விளைவிக்க முடியும். இவற்றை தவிர்த்து அந்தந்த மண்ணிற்கு எந்த காய்கனிகள் விளையுமோ அதாவது எது எங்கு நன்கு விலையுமோ அவற்றை வாங்கி உண்பதால் ஆரோக்கியம் சிறக்கும்.

அதே போல் பருவத்திற்கு ஏற்ற காய்கனிகளை தேர்ந்தெடுத்து உண்ண உடல் சமநிலைப்படுவதுடன் இரத்தவிருத்தியும், சுறுசுறுப்பும் கூடும்.

பூச்சிகளே இல்லாத கீரை, காய்கனிகள் சுவைக்காது. பூச்சிகளே உண்ண தவிர்த்ததை நாம் உண்பதா?… பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாது இயற்கையாக விளைந்தவற்றை பயன்படுத்த வேண்டும்.

முத்தலான காய், கனி, கீரைகளை தேர்ந்தெடுக்காது பிஞ்சாகவும், இளசாகவும் இருக்க சுவையும், மணமும் கூடும் அதிலும் மண்பானையில் சமைக்க அதன் சுவை அலாதியாக இருக்கும்.

கீரை

அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை போன்ற கீரைகள் இளங்கீரைகளாகவும், சிறு தண்டுகளாகவும், பூக்காத கீரைகளாகவும், மஞ்சள் நிற இலைகள் இல்லாது இருக்க வேண்டும், பூச்சிக்கொல்லிகள் தெளிக்காது பூச்சிகள் லேசாக அரித்த கீரைகள் சுவையாக இருக்கும். 

வெந்தயக்கீரை

பத்துநாள் வயதுடைய சிறு வெந்தயக்கீரை கடைவதற்கு சுவையாக இருக்கும். 

முருங்கைக்கீரை

கொழுந்து முருங்கைக்கீரை பொரிப்பதற்கும், கூட்டிற்கும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய்

நாட்டு விதையில் விளைந்த வெண்டைக்காய்கள் ஒரே அளவில் பச்சை பசேலென்று இல்லாமல் இருக்கும். கால் கிலோ வெண்டையில் கண்டிப்பாக இரண்டு அல்லது மூன்று காய்களில் பூச்சிகள் இருக்கும். இவ்வாறான வெண்டையை பிஞ்சாகவும், முத்தல் இல்லாததுமாக உடைத்துப் பார்த்து வாங்க வேண்டும்.

முருங்கை

முருங்கை சதைக்காயாகவும், கடினமில்லாமலும், பச்சையாகவும், நன்கு வளையக்கூடிய காயாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

வாழைக்காயை

வாழைக்காயை சுண்டிப்பார்க்க டங்கென்று சத்தம் வர, பச்சைக் காயாக பார்த்து வாங்கி சமைக்க சுவையாக இருக்கும்.

கத்திரி

கத்திரிக்காயை தோல் லேசாகவும், கம்பு கனமாகவும், பெரிதாகவும், காய்ந்துபோகாமலும் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும்.

விஷங்கள் தெளிக்காத கத்திரிக்காயில் ஒன்றிரண்டு சொத்தை பூச்சி காய்களும் இருக்கும், அவற்றை தவிர்த்து சமைக்க உணவு மணக்கும்.
கிழங்குகளை முளைக்காததாக இருக்க பார்த்து வாங்க வேண்டும்.

தக்காளி

நாட்டு ரக தக்காளிகளை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உகந்தது. நாட்டு ரக தக்காளிகளை வாங்கும் முன் அவற்றின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் இல்லாது சிவந்திருக்க வாங்கி பயன்படுத்துவது உணவின் சுவையைக் கூட்டும்.

அவரை

நாட்டு அவரையில் விதைகள் தெரியாமல் ஒரே பரப்பில் இருக்க சிறக்கும்.

வாழைப்பூ

கறுப்பாகாமலும், காயாமலும் வாழைப்பூ இருக்க வேண்டும்.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் காயாத பச்சை நிற தோலுடன் ஒரே அளவில் இருக்க வேண்டும்.

சௌ சௌ

சௌ சௌ வாங்கும் முன் அதனுள் முற்கள் இல்லாது புதுக்காயாக வளமாக இருக்க வேண்டும்.

சுரைக்காய்

சுரைக்காய் தோல் மென்மையாக இருக்க வேண்டும்.

முள்ளங்கி

முள்ளங்கி வேர்கள் இல்லாது பிஞ்சாகவும் தொட்டு பார்க்க நீர்ச்சத்துடன் கனமாகவும் இருக்க வேண்டும்.

புடலங்காய்

நாட்டு புடலங்காயை நீளமானதாகவும், நாரில்லாது இளசாகவும் இருக்க சுவைக்கும். இந்த புடலையில் விதைகளும் இளசாகவும் சுவையாகவும் இருக்கும்.

மிதி பாகல்

சிறுமுற்கள் இருக்கும் மிதி பாகல் உடலுக்கு உகந்தது. குண்டாக இருக்கும் பாகற்காயை விட அடர்த்தியாக இருப்பது நன்றாக இருக்கும்.

வாழைத்தண்டு

வாழைத்தண்டு நாரில்லாது கிள்ளிப்பார்க்கும்பொழுது இளசாக இருக்கும். அடித்தாண்டான வாழைத்தண்டுகள் நீர்ச்சத்துடன் நன்றிருக்கும்.

மொச்சை, துவரை, பட்டாணி போன்ற பச்சை பயறுகளை வாங்கும்முன் அவற்றை முழுதோலுடன் வாங்கவேண்டும், தோல் காய்ந்ததாகவும், பயறுகள் நன்கு முற்றியதாகவும் இருக்க வேண்டும்.

இன்று அனைத்து இடங்களிலும் கிடைக்கும் இனிப்பு சோளத்தை தவிர்த்து நமது நாட்டு ரக சோளத்தை அமிக்கிப்பார்த்து இளசாகவும், முத்தலாகவும் இல்லாது இடைப்பட்டு இருக்க வேண்டும். இந்த வெளிநாட்டு ரக இனிப்பு சோளத்தை தொடர்ந்து உண்பதால் பல நோய்களும், குறைபாடுகளும் உருவாகிறது.

காய்கறிகளில் அதிக இரசாயனத்தையும், பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு காலிஃப்ளர், முட்டை கோஸ் வளர்கிறது.. இவற்றை முடிந்தவரை தவிர்த்து இயற்கையில் விளைந்ததை உண்பது சிறந்தது.

காய்களை மட்டுமல்லாது பழங்களையும் பார்த்து வாங்குவது சுலபம்தான். வணிகமயம் அதிகரித்ததால் பழங்கள் விரைவாக பழுக்க வேண்டும் என்பதற்காக புகைபோடுவது, ரசாயனம் தெளிப்பது, கல்வைப்பது என்று உடலுக்கு தீங்கு வைக்கும் செயல்கள் அரங்கேறுகிறது.

இயற்கையாக வளர்ந்து பழுக்கும் பழங்களுக்கு பல நோய்களை தீர்க்கும் தன்மையுண்டு. சுவையும், உயிர்சக்தியும் அதிகமுள்ள விசமில்லாத பழங்களாக இவை இருக்கும்.

வெளிநாட்டு பழங்களை முடிந்தவரை வாங்காதது சிறந்தது. அயல்நாட்டிலிருந்து ஒரு பழம் நமது சந்தைக்கு வர குறைந்தது 60 நாட்களாவது ஆகும். 60வது நாட்கள் பழங்கள் அழுகாமல், சுருங்காமல், நிறம்மாறாமலும் இருக்க அதிக இரசாயனங்களை வெளிப்பூச்சாக சேர்ப்பது மட்டுமல்ல உட்புகுத்தலும் நிகழ்கிறது. இதனால் அவை பழங்களின் தகுதியை இழந்து பார்க்க மட்டுமே பழங்களாக இருக்கிறது.

விதையில்லாத பழங்களை தவிர்க்க வேண்டும். விதையில்லாத பழங்களை சோம்பேறித்தனத்தால் உண்ண இன்றைய இளைஞர்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் சிரமப்படுகின்றனர். 

மெழுகு பூசிய ஆப்பிள், ஸ்ட்ராபெரி, ஸ்டார் ப்ருட், கிவி போன்ற பழங்களை தவிர்த்து அதிக சத்துக்கள் நிறந்த நமது நாட்டு கொய்யா, விதையுள்ள பப்பாளி, சப்போட்டாக்களை உண்ணலாம்.

புகை, கார்பைட் கற்கள், எத்திலின் போன்றவற்றை கொண்டு செயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களை எளிதாக கண்டறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செயற்கையாக பழுக்கும் பழங்களின் தோல்கள் ஓரே நிறத்தில் பளபளப்பாக பழுத்து இருக்கும் ஆனால் உள்ளிருக்கும் சதைப்பகுதி காயாகவே இருக்கும். 

பெங்களூர் வாழை என்று கிடைக்கும் வாழை அதிக இரசாயனங்கள் கொண்டு செயற்கையாக வளர்க்கவும், பழுக்கவும் வைக்கின்றனர். சுவையில்லாத இந்த வாழையை தவிர்த்து நமது நாட்டு ரகங்களான கற்பூரவல்லி, போந்தான், பூவம் பழம் போன்ற பழங்களை இயற்கையாக பழுக்கவைத்து உண்பது சிறந்தது.

பழங்களில் அதிக இரசாயனங்களை கொண்டு திராட்சை வளர்கிறது. மேலும் சீட்லெஸ் என்று வெறும் விஷமாகவே இன்றைய திராட்சை உள்ளது. இவற்றை தவிர்த்து பூச்சிகொல்லியற்ற விதையுள்ள கருப்பு திராட்சை உடலுக்கு நல்லது.

விதையுள்ள நாட்டுப் பப்பாளி, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை சிறந்தது.

பளபளக்கும் நிறத்திற்காக மாதுளை, தர்பூசணியில் பியூரிடான் போன்ற நஞ்சுக்களை சேர்க்கின்றனர். இவற்றை தவிர்த்து நாட்டு ரகங்களை, விதையுள்ள மாதுளையையும் பார்த்து வாங்க வேண்டும்.

முற்கள் விரிந்து, நல்ல சுவை, மணம் உள்ள பலாப்பழத்தை உண்பது தேவகனியைபோன்றிருக்கும்.

மாம்பழத்தை கல் வைக்காமல் இயற்கையாக பழுக்க வைத்து உண்ண உண்மையான முக்கனியின் சுவையினை அனுபவிக்கலாம். இவ்வாறு இயற்கையாக உள்ள பழங்களை குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

சரி இதல்லாம் எங்கு கிடைக்கும் என்கிறீர்களா? எந்த சிரமமும் படாமல் நமது வீட்டருகில் இருக்கும் சந்தை, மார்க்கெட், தோட்டங்கள், கிராம சந்தை, உழவர் சந்தை போன்ற இடங்களில் விவசாயிகளே நேரடியாக வந்து குறைந்த இருப்புடன் விற்பார்கள். அவை நமது நாட்டு பழங்களாக இருக்கும், அதுவும் அந்த காலத்திற்கும், பருவத்திற்கும் ஏற்றவைகளாக இருக்கும். எந்த செயற்கை பளபளப்பும் இல்லாத இவற்றை எளிதாக வாங்கி உண்ணலாம். ஆரோக்கியம் கூடும். உணவு சுவைக்கும்.

இயற்கையான முறையில் விளையும் காய்கனிகளே சிறந்தது என்றாலும், இன்றைய சூழலின் பல நேரங்களில் இரசாயனங்கள் கலந்த காய்களையே பயன்படுத்தவேண்டிய நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கோம்.

இதற்கு சிறந்த தீர்வு நமக்கு வேண்டிய காய்கள், கீரைகளை நாமே நமது வீடுகளில் இருக்கும் குறைந்த இடத்திலோ அல்லது மொட்டை மடிகளிலோ வளர்க்கலாம்.

அதுவும் சாத்தியமில்லை என்பவர்கள் முடிந்தவரை கிடைக்கும் காய்கனிகளை நன்கு கழுவி எதோ அரைசதவீத இரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் தவிர்த்து உண்ணலாம்.

காய்கனிகளில் சதைப்பகுதியைவிட தோல் பகுதியில் அதிக சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்துக்கள் உள்ளது, இவற்றை வீணாக்காமல் சிறந்த முறையில் கழுவுவதால் ஓரளவு இரசாயனங்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

எவ்வாறு எதனைக்கொண்டு காய்கனிகளை கழுவலாம்.

சுத்தமான நீரினில் 20 சதவீதம் இங்கு குறிப்பிட்டுள்ள ஏதேனும் பொருட்களை கலந்து அந்தந்த நீரிணைக் கொண்டு காய்கனி கீரைகளை பத்து நிமிடம் ஊறவைத்து பின் நன்கு துடைத்து பயன்படுத்தலாம். எலுமிச்சை நீர், உப்பு நீர், மஞ்சள் நீரிணைக் கொண்டு கழுவலாம். உப்பு இரசாயன நச்சுக்களையும், மஞ்சள் கிரிமி நாசினியாகவும் செயல்படும். இவ்வாறு நன்கு கழுவிய காய்களை முடிந்தவரை தோல் சீவாமல் சமைக்க சத்துக்கள் கூடும். 

மதிப்பீடு செய்யவும்
சிந்தனை துளிகள் :

கெண்டை பட்டாலும் பட்டது, கிடாரம் பட்டாலும் பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!