நூற்றுக்கணக்கான கீரைகள் நம்மை சுற்றி உள்ளது. ஆனால் சந்தைகளில் நான்கு முதல் அதிகபட்சமாக பத்து வகை கீரைகளை மட்டுமே நாம் பார்க்க முடியும். பல கீரைகளை மாற்றி மாற்றி உண்பது சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கும். எல்லா கீரைகளையும் பெற முடியாது என்றாலும் கிடைக்கும் கீரைகளை மாற்றி மாற்றி உண்பது நல்லது. இதனால் பல கீரைகளில் உள்ள பல சத்துக்களை நாம் முழுமையாக பெறலாம். மேலும் மிக முக்கியமானது இரசாயனங்கள், பூச்சி கொல்லிகள் தெளித்த கீரைகளை தவிர்ப்பது அவசியம். அன்றாடம் கீரைகளை உண்பது மலச்சிக்கலை நீக்கும், ஜீரணத்தை பெருக்கும், ஆரோக்கியம் மேம்படும்.
- வறண்ட, வாடிப்போன கீரைகளை ஒதுக்கிவிட வேண்டும். மஞ்சள் நிற கீரை, பூச்சிகள் முட்டை இட்ட கீரைகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
- கீரைகள் பசுமையாகவும், நீர்த் தன்மை / எண்ணெய் பசை கொண்டதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
- இளந்தளிர் கீரைகள் முற்றின கீரைகளை விட சத்துக்கள் அதிகம் கொண்டவை. அதனால் அவற்றை தேர்ந்தெடுத்து உண்பது சிறந்தது.
- கீரைகளை இரவு நேரத்தில் உண்பதை தவிர்க்க வேண்டும். எந்த கீரையை எந்த காலத்தில் யார் உண்ணலாம் என்பதும். இரவில் எந்த கீரையை எடுத்துக்கொள்ளலாம் என்றும் எந்த கீரையை எந்த காலத்தில் சாப்பிடலாம் என்ற பதிவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
- உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கீரைகளை சமைக்கும் போது உப்பு சேர்க்காமல் சமைத்து இறுதியில் கால் உப்பு சேர்த்து உண்பது நல்ல பலனை அளிக்கும்.
- கீரைகளை இரவில் பறிக்காமல் காலைவேளையில் சூரிய உதயத்திற்குப் பின் பறித்து சமைத்து உண்பது சிறந்தது.
- பிரித்த கீரைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். பழுப்பு, பூச்சி கீரைகளை நீக்கி நன்கு நீரில் மூன்று முறை அலசி பயன்படுத்த வேண்டும்.
- கீரைகளை நன்கு சுத்தம் செய்து அலசிய பின் குறுக்க நறுக்கி சிறிது நீரில் வேக வைக்க வேண்டும்.
- கீரைகளை சமைக்கும் போது மூடி போட்டு சமைக்கக் கூடாது. திறந்த பாத்திரத்திலேயே சமைக்க வேண்டும்.
- அதிகமாக கீரைகளை வேக வைக்க கூடாது. அரை வேக்காடு போதுமானது, மீதம் சூட்டிலேயே வெந்துவிடும். பின் நன்கு கடைந்து உண்ணலாம்.
- சமைத்த ஒரு மணி நேரத்தில் கீரைகளை உண்பது சிறந்தது. அதற்கு மேல் செல்ல கீரைகளின் சத்துக்கள் குறைய தொடங்கிவிடும்.
- சமைக்கும் பொழுது கீரைகளுடன் அதிக காரம், புளி, உப்பு சேர்க்காமல் சமைப்பது சிறந்தது. புளிக்கு பதில் நெல்லிக்காய், தக்காளி சேர்த்துக் கொள்ளலாம். இறுதியில் அரை உப்பு சேர்த்துக் கொள்ள சிறந்தது.
- கீரைகளில் மிளகாய்க்கு பதில் மிளகை பயன்படுத்தலாம்.