கோடையில் செடிகளை எவ்வாறு பராமரிப்பது

கோடை காலம் தொடங்கிவிட்டது. நகரத்தில் தண்ணீர் பஞ்சத்திற்கு குறைவே இல்லை. அதிலும் சில இடங்களில் ஒரு குடும்பத்திற்கு இத்தனை லிட்டர் தான் தண்ணீர் என்று தண்ணீரை அளந்து விநியோகம் செய்கின்றனர். இந்த நிலைமையில் செடிகள், தோட்டம் வேறா? இதற்கெல்லாம் எவ்வாறு தண்ணீர் அளிப்பது. அதிலும் கடும் கோடையில் செடிகளை எவ்வாறு பாதுகாப்பது? என்ற குழப்பம் மட்டுமல்ல வீட்டில் இது தேவையில்லாத வேலை என்று திட்டுபவர்களுக்கும் பதில் சொல்லவேண்டும் என்ற கவலை வேறு… இனி  கவலை வேண்டாம். அனைவரும் பாராட்டும் வகையில் எளிதாக செலவின்றி கோடையிலிருந்து நம்மையும் நமது செடிகளையும் எவ்வாறு குளுமையாக வைத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

கோடையில் செடிகளை வளர்ப்பது பெரும் சவாலான விஷயம் தான். அதிலும் உலக வெப்பமயமாக்களுக்கு மத்தியில் மழை இல்லாமல் கடும் வெயிலில் செடிகளை வளர்ப்பதற்கு தனி சாமர்த்தியமே தேவை. அது என்னென்னவென்று பார்ப்போம். கோடைகாலத்தில் செடிகளை வளர்க்க கோடையை விரும்பும் அதாவது வெப்பத்தை விரும்பும் செடிகளை தேந்தேடுத்து வளர்க்கவேண்டும். உதாரணத்திற்கு வெண்டைக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி, தக்காளி, கத்திரிக்காய், கற்றாழை, பூசணிக்காய், சிலவகையான கீரைகள் போன்றவற்றை தேர்வுசெய்து வளர்க்க வேண்டும்.

கோடை செடிகள்

கோடையை விரும்பும் செடிகள் என்றால் அதிகமாக சூரிய ஒளி தேவைப்படும் செடிகள். அதாவது சூரியனிலிருந்து வரக்கூடிய கதிர்களைக் கொண்டு ஒளிச்சேர்க்கை மூலமாக தனக்கு தேவையான உணவை உற்பத்தி செய்யக்கூடிய செடிகள். பெரிய இலைகளை கொண்ட பூசணி போன்ற செடிகள் அதிகமாக சூரிய ஒளியை கிரகித்து தனக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யக்கூடிய செடிகளாகும். இவ்வாறான செடிகளை கோடையில் விதைக்கும் பொழுது எளிதாக அதிக விளைச்சலை பெற முடியும். மேலும் இதிலிருந்து கிடைக்கும் காய், கனிகளை நாம் உண்ணும்பொழுது கோடையை சமாளிக்கும் சத்துக்களும் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.

கோடையை விரும்பும் செடிகளுக்கு கோடை காலத்தில் பெரியளவில் எந்த பராமரிப்பும் தேவையில்லை. காலை, மாலை தண்ணீர் தெளிப்பதும், வாரம் ஒருமுறை இயற்கை வளர்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்றவற்றை அளிப்பதே போதுமானது. இவையே தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தையும் தங்களின் பெரிய இலைகள் மூலம் (மூடாக்கு போட்டுக்கொள்ளும்) காத்துக்கொள்ளும். 

இவற்றை தவிர மற்ற செடிகளை வளர்க்கும்பொழுது கட்டாயம் மாலை நேரத்தில் இலைகளில் படுமாறு தண்ணீர் தெளிக்கவேண்டும் (தண்ணீரை ஊற்றக் கூடாது தெளிக்கவேண்டும்). தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலத்தில் மறுசுழற்சி மூலமே நம்மையும் நமக்கான தூய்மையான இயற்கை உணவையும் பெறமுடியும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை கழுவிய நீரையும், இயற்கை பற்பொடி, இயற்கை குளியல்பொடி, இயற்கை சலவைப்பொடி பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் நீரையும் சேமித்து அவற்றை நம் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு பயன்படுத்த வேண்டும். 

நிழல் வலை

செடிகளின் வாழ்வாதாரமே சூரிய ஒளி தான். அதனால் அவற்றிற்கு சூரியஒளி அவசியம். சிலசெடிகளுக்கு மிதமான சூரியஒளி போதுமானது. அவ்வாறான செடிகளை மற்ற காலங்களில் வளர்ப்பது சிறந்தது. அப்பொழுதுதான் பூச்சி தொல்லையும் குறையும்.. இல்லை, இல்லை கோடையிலும் அவற்றை வளர்க்க வேண்டும் என்பவர்கள் அதிக பராமரிப்பு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு வெப்பம் பிடிக்காத செடிகளை வளர்க்கும் பொழுது அதிக வெப்பத்தால் செடிகள் கருகுவதை பார்க்கலாம். இந்த சூழலில் ஐம்பது சதவீதம் ஒளியைத் தடுக்கக்கூடிய நிழல் வலையை செடிகளுக்கு மேல்புறம் மட்டும் பயன்படுத்தலாம். நாலாபக்கமும் அடைக்கக்கூடாது. க்ரீன் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய பசுங்குடில் போல் அமைக்கக்கூடாது. நமது தட்பவெப்பநிலைக்கு கிரீன் ஹவுஸ் பாதிப்பை ஏற்படுத்தும். 

க்ரீன் ஹவுஸ் என்று சொல்லக்கூடிய பசுங்குடில் போல் அமைக்கக்கூடாது. நமது தட்பவெப்பநிலைக்கு கிரீன் ஹவுஸ் பாதிப்பை ஏற்படுத்தும்.

மூடாக்கு

அனைத்து செடிகளுக்கும் கட்டாயம் மூடாக்கு இடவேண்டும். மண்ணிற்கு சூரியஒளி அவசியமில்லை.. செடிகளுக்கு அதன் இலைகளுக்கு தான் அவசியம்.

அதனால் மண்ணை மூடாக்கு இட்டு மூட வேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணில் இருக்கும் ஈரப்பதம் ஆவியாவதை தடுத்து ஈரப்பதம் காக்கப்படும். மேலும் மண்ணிலிருக்குக்கும் நுண்ணுயிர்களுக்கு பாதுகாப்பை இந்த மூடாக்கு அளிக்கும். செடிகள் சிறப்பாக வளர உறுதுணையாக இருக்கும். இலைதழைகள், காய்ந்த சருகுகள் போன்றவற்றைக் கொண்டு மூடாக்கிடலாம். இதனால் அதிகாலை பனித்துளியை அறுவடை செய்து சேமித்துவைத்து செடிகள் பயன்படுத்திக்கொள்ளும். இந்த முறையை கையாள்வதால் வெயில்காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவே அவசியமில்லை.

தென்னை நார்க் கழிவு

செடிகளின் தொட்டிகளை மண்கலவைக்கொண்டு நிரப்பும்போது அவற்றோடு பத்தில் ஒரு சதவீதம் தென்னை நார்க் கழிவை சேர்த்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும். இந்த தென்னை நார் கழிவு மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தை காக்க உதவும். 

மறுசுழற்சி

ஒவ்வொரு தொட்டியிலும் செடிகளுக்கு அருகில் ஒரு சிறு மண் பானையை வைத்து அதில் மறுசுழற்சி தண்ணீரை நிரப்பி வைக்கலாம். இவ்வாறு செய்வதால் பானையின் அடியில் இந்த தண்ணீர் மெதுவாக கசிந்து தொட்டியில் இருக்கும் மண்ணை குளிர்விப்பதோடு செடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தையும் அளிக்கும்.

ஒவ்வொரு தொட்டிக்கும் அடியிலிருக்கும் துளையின் திரிபோல் சணல் கயிறை மண்ணின் மேல்புறம் தொடங்கி துளைவழியாக அதே பங்கு அடியிலும் இருக்குமாறு செய்து, பின் தொட்டிக்கு கீழ் வேறொரு தொட்டியில் மறுசுழற்சி செய்த நீரை நிரப்பி வைக்கலாம். இதனால் கீழிருக்கும் நீரை தேவைக்கேற்ப இந்த திரி தொட்டியிலிருக்கும் மண்ணிற்கு அளிக்கும். மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும்.

சொட்டுநீர்ப்பாசன முறையை முடிந்தால் கையாளலாம். செயற்கையுரங்கள் மண்ணையும் செடியையும் வறண்டு போகச்செய்யும். அதனால் அவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இயற்கை உரங்களை அளிக்கவேண்டும்.

உயர வளரும் செடிகள் படரும் செடிகள் போன்றவற்றை அருகருகில் நிழல் வெயில் இரண்டும் கலந்தாற்போல் வைக்கவேண்டும். இதனால் காலை மாலை நேரங்களில் ஒன்றோடு நிழல் மற்றொன்றின் மேல்படுவதும் ஒருவகையில் ஈரப்பதத்தை காக்கும். 

கரும்பு சக்கை

கோடை தொடங்கியதும் கரும்பு சாறு வண்டிகளும் அங்கங்கே வந்துள்ளது. அவற்றை அதிகமாக பயன்படுத்திக்கொள்வதால் செடிகளும் வெப்பத்தைத் தாங்கி நன்கு வளரும், நீரும் சிக்கனமாகும், செடிகளுக்கும் போதுமான சத்துக்கள் கிடைக்கும். கரும்பு சக்கையில் அதிகமாக செடிகளுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. இவை செடிகளின் மண்ணிலிருக்கும் நுண்ணுயிர்களுக்கு உணவாக இருக்கும். இந்த கரும்பு சக்கையை அந்த கடைகளில் இருந்து எடுத்துவந்து சிறுதுண்டுகளாக வெட்டி அவற்றை செடிகள் இருக்கும் தொட்டிகளில் மூடாக்காக இடவேண்டும். இயற்கையாக ஈரப்பதத்தை காக்கும் முடக்கு ரெடி.. இந்த கரும்பு சக்கை தேங்காய் நார் கழிவைப்போல் நீரை சேமித்துவைப்பதுடன் செடிகளுக்கு மூடாக்காகவும் உணவாகவும் செயல்படும். நீரின் தேவையும் குறையும், செடிகளுக்கு தேவையான சத்துக்களும் கிடைத்துவிடும்.

வளர்ச்சி ஊக்கிகள்

வாரம் ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல், ஜீவாமிர்தம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளை செடிகளுக்கு அளிப்பதால் செடிகள் கடும் வெப்பத்தை சமாளித்து வளர்வதோடு இந்த இயற்கை ஊக்கிகளில் இருக்கும் சில நுண்ணுர்கள் செடிகளுக்கு தேவையான நீரையும் சேமித்து வைத்து இலைகள் கருகுவதையும் வாடுவதையும் தடுத்து செடிகளை கோடையிலிருந்து காக்கும்.

மொத்தத்தில் செலவில்லாமல் கோடையில் மூடாக்கிட்டு வெப்பத்தை விரும்பும் செடிகளை வளர்த்தால் உடலுக்கு குளிரூட்டும் ஆரோக்கியமான இயற்கை உணவுகளை எளிமையாக பெறலாம்.
கோடையில் இயல்பாக வளரும் செடிகள் அந்த நிலத்தில் வாழும் மனிதர்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் உணவுகளாக இருக்கும். இதுதான் இயற்கை.. 

மழை காலங்களில் இயல்பாக வளரும் செடிகள் அந்த சூழலில் அந்த நிலத்தில் வாழ்பவர்களுக்கு ஏற்ப உடல் உஷ்ணத்தை சமன்செய்யும் உஷ்ணமான உணவாக இருக்கும். இதனை புரிந்துகொண்டு உடல் ஆரோக்கியத்திற்காக தான் செடிகள், தோட்டம் என்பதை அறிந்து நீரின் பயன்பாட்டையும் குறைத்து அனைத்தையும்  கருத்தில்கொண்டு காலத்திற்கேற்ப செடிகளை வளர்ப்போம். கோடையில் செடிகளை பராமரிப்பது எளிதுதான். கோடையை விரும்பும் செடிகளை வளர்ப்போம்.. நாமும் அவற்றை விரும்புவோம். ஆரோக்கியம் நம்மை விரும்பும்.

கோடையை சமாளிக்க நமக்கு குடை.. செடிகளுக்கு மூடாக்கு…