அறுசுவை.. என்றதுமே நாவில் உமிழ் ஊற தொடங்கும் முன் மனம் பெருமகிழ்ச்சி அடைகிறது. மூக்கில் நீர்வடிந்தாலும் சுவைக்கு அடிமையான நாம் அறுசுவையில் வெளிப்படுத்தாமல் சுவைப்பது கார்ப்பு சுவையை. அதிலும் இன்றைய சமையலில் கார்ப்பு என்றதும் மிளகை மறந்து அனைவரும் சுவைப்பது மிளகாயின் கார சுவையை.
அளவோடு பயன்படுத்தப்படும் மிளகாய் உடல் உறுப்புகளுக்கும், உடல் செயல்பாட்டிற்கும் ஏற்றதாகவும் உள்ளது. பெரும்பான்மையான மக்களால் விரும்பும் கார்ப்பு சுவையாகவும் மிளகாய் உள்ளது.
ஒட்டு ராகம் போன்ற காரணங்களால், இன்று சற்று பெரிய அளவு பச்சை மிளகாயெல்லாம் சந்தையில் கிடைத்தாலும் அவை உண்மையில் காரசுவையை கொடுப்பதில்லை. அதோடு இந்த வகை மிளகாய் உடலுக்கு உகந்ததாகாது.
சாதாரணமாக கிராமங்களில் கிடைக்கும் பச்சைமிளகாய்கள் சிறிதாக இருந்தாலும் காரத்தில் குறைவில்லாமல் இருக்கும். அவ்வாறான விதைகளை மிளகாய் விதைப்பிற்கு தேர்ந்தெடுப்பது அவசியம். இவ்வாறான மிளகாய் பூச்சி தாக்குதல், நோய் போன்றவற்றை இயல்பிலேயே எதிர்க்கும் தன்மை பெற்றிருக்கும்.
இயற்கையில் விளைந்த மிளகாயினை பிரித்து அதிலிருக்கும் விதைகளே எளிமையாக கிடைக்கும் மிளகாய் விதைகள். இவற்றைக்கொண்டே நாம் இன்று மிளகாய் செடிகளை பயிரிடப்போகிறோம். மிளகாய் செடிகளை முதலில் விதைத்து பின் ஐந்தாறு வாரங்கள் வளர்ந்த நாற்றுகளை தொட்டிகளில் நட்டு வளர்த்தால் செழிப்பான விளைச்சலை எடுக்கலாம். மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ள மிளகாய் செடி வளர்ப்பு.
மிளகாய் விதைகளை முதலில் பஞ்சகவ்யத்தில் விதைநேர்த்தி செய்துகொள்வது அவசியம். வீட்டின் தேவைக்கேற்ப இரண்டு மூன்று தொட்டிகளே போதுமானது. 20 விதைகளை முதலில் எடுத்துக்கொள்ளலாம். பின் சிறிய தொட்டியில் ஈரப்பதமான மண்புழ உரம் நிரப்பி விதைகளை தூவி லேசாக மண்ணைக்கொண்டு மூடிவிடவேண்டும். நிழலில் அல்லது சிறிது வெயில் படுமிடத்தில் இந்த சிறிய தொட்டியை வைத்துக்கொள்ளலாம். ஐந்து நாட்களில் முளைவிடும் இவைகளுக்கு தேவைக்கேற்ப லேசாக தண்ணீர் தெளிக்கவேண்டும்.
ஐந்தாறு வாரங்கள் சென்ற பின் இந்த மிளகாய் நாற்றுக்கள் பெரிய தொட்டிகளில் நட தயாராகிவிடும்.
மணல், சிறிது செம்மண், மண்புழு உரம், மக்கு உரம் போன்றவற்றைக்கொண்டு மண் கலவை தயாரித்து அடியில் துளையிட்ட தொட்டிகளில் நிரப்பவேண்டும். இரண்டு செடிகளை ஒரு தொட்டியில் நடலாம். நிலத்தில் நடவேண்டுமானால் மண்ணை நன்கு கொத்திவிட்டு பஞ்சகவ்யா தெளித்து அவற்றில் மண்புழு உரம், மக்கு உரம் இட்டு மண்ணை தயார்செய்யவேண்டும். முளைத்திருக்கும் நாற்றுகளை சிறிய தொட்டி மண்ணுடன் இந்த பெரிய தொட்டிக்கோ அல்லது நிலத்து மண்ணிலோ நட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவேண்டும். மூடாக்கு இடவேண்டும்.
ஆரோக்கியமான சூழலில் அடுத்த ஒருமாதத்தில் பூக்கள் வைக்கதொடங்கிவிடும். அடுத்த பதினைந்து நாட்களில் மிளகாய் காய்க்க தொடங்கிவிடும்.
பூச்சி, நோய், பூஞ்சண தாக்குதல்
மிளகாய்க்கு ஆரம்பம் முதலே பல பூச்சி தாக்குதல்கள் இருக்குமென்றாலும் தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும். மேலும் மண்ணை தொட்டிகளில் இடும் முன் பஞ்சகவ்யா தெளித்து சிலநாட்கள் காயப்போட்டால் பூஞ்சணங்களால் பாதிப்புகளையும் தடுக்கலாம். பூச்சிகள் அதிகமாக இருந்தால் அருகில் காராமணி போன்ற செடிகளை வளர்க்கலாம்.
காய்த்தூளைப்பான், சாறு உறுஞ்சும் பூச்சிகள், இலைப்பேன், அஸ்வினி போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்த எளிமையாக 1 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி லிட்டர் வேப்பெண்ணெய், சிறிதளவு காதி சோப் கலந்து இலைகள் மீது தெளிக்கலாம்.
மேலும் வாரம் ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் தெளிப்பதும் அவசியம். பொதுவாக இவற்றை மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும். அல்லது வேப்பிலையினால் தயாரிக்கப்படும் இந்த நீரினை பூச்சிகளை கட்டுப்படுத்த தெளிக்கலாம். பூச்சிகள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
இரண்டு மாதங்களில் காய்க்க தொடங்கும் மிளகாய் அடுத்த மூன்று மாதங்களுக்கு காய்களைக் கொடுக்கும். காய்கள் தேவைப்படாத பட்சத்தில் அவற்றை செடிகளிலேயே விட்டுவிட்டால் அவை பழுது சிகப்பாக மாறி இறுதியில் வரமிளகாயாக நமக்கு கிடைக்கும்.