ஆரோக்கியமான உணவு, சுத்தமான நீர், தூய்மையான காற்று, அளவான உழைப்பு இவை மட்டும் போதுமா வளமான வாழ்விற்கு? கண்களுக்கு தெரிந்த இவைகளையெல்லாம் கண்ணுக்கு தெரியாத உறக்கம் என்ற நிகழ்வின் மூலமே சீராக நடக்கிறது. உறக்கம் இல்லாமல் மற்றது என்ன தான் செழிப்பாக இருந்தாலும் அவையனைத்தும் வீணாக போகும். இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் அல்லது ஓய்வு இல்லையானால் அனைத்துமே புரியாத நிலை ஏற்படும். சிலருக்கு புத்தி குழம்பியது போல் இருக்கும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த தூக்கத்தில்.
வாழ்வில் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது.. அப்படி இருக்க ஒவ்வொரு நாளும் மூன்றில் ஒருபங்கு தூக்கத்தில் செலவாகிறது. மொத்தத்தில் நமது வாழ்நாளில் ஒரு பெரும் பங்கு தூக்கத்திலேயே கழிகிறது.
இந்த தூக்கம் தான் உடலையும் உயிரையும் ஒருங்கிணைந்து சீராக செயல்பட வைக்க உதவுகிறது. பஞ்சபூதங்களில் நேரடியாக செயல்படும் நிலம் (மண்), நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றிற்கு ஒரு இடத்தினைக் கொடுத்து செய்யப்பட வைக்க உதவுவதும் இந்த ஆகாயம் என்ற வெற்றிடம் தான். இந்த வெற்றிடம் இருந்தால் மட்டுமே மற்றவைகள் சீராக செயல்பட முடியும். இந்த உறக்கம் என்ற வெற்றிடம் அன்றாடம் நமது பணிகள், சிந்தனைகள், செரிமானம், செயல்பாடு, இரத்த ஓட்டம், சோர்வு, மகிழ்ச்சி என பலவற்றை ஒழுங்குபடுத்துவதுடன் அவற்றை நிலைப்படுத்தவும் உதவுகிறது.
இது மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.. ஏன் உலகமும் இதன் அடிப்படையிலேயே தான் தன்னை அனுதினமும் இரவையும் அதன் அமைதியையும் கொண்டு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இந்த புதுப்பித்தல் இல்லையென்றால் மாசு, கழிவு என்று குப்பைக்கூடமாக மட்டுமே நாம் இந்த உலகினைக்காணலாம். பல பல ஆயிரம் ஆண்டுகளைக்கடந்தும், பல அழிவுகளைக்கடந்தும் தனது அழகினையும், பிரம்மிப்பினையும் இன்றையவர்களுக்கு சற்றும் சளைக்காமல் அளிக்கிறதே. இவை அனைத்திற்கும் காரணம் வெற்றிடம் தான், அந்த வெற்றிடம் பல புதியவைகளை உருவாக்கவும், பழையவைகளை களையவும் துணைபுரிகிறது.
இரவு மனிதனை மட்டுமல்ல உலகையும் புதுப்பிக்கிறது.
இதுதான் நிலத்திலும், நமது மண்ணிலும் நடக்கிறது. பயிற் சுழற்சி, அறுவடை ஆகியவற்றிற்குப் பின் நிலத்தினை சிறிது காலம் வெறுமனே ஆடுமாடு மேய விட்டு போட்டுவைப்பது நமது பாரம்பரிய பழக்கங்களாக இருந்தது. இன்று இவ்வாறு வெறுமனே நிலத்தினை விடுவது வீண் என்று டன்கணக்கில் உரங்களைக் கொட்டி ஒரே பயிரினை மீண்டும் மீண்டும் பயிரிடுவதால் நிலங்கள் மலடாக மாறுகிறது.
நிலங்களில் பயிர் சுழற்சியும் அதன் பின் ஆடு மாடுகளை மேயவிடுவதும் ஒருவகையில் மண்ணை வளமாக்கியது. இதனால் நிலமும், மண்ணும் செழிப்பாக மீண்டும் அடுத்த உழவுக்கு தயாராகிறது. மேலும் இந்த நிலத்தில் ஏதேனும் புஞ்சை, நோய்க்கிருமி தாக்குதல்கள் இருந்தாலும் அவையனைத்தும் நிலத்தினை வெறுமனே சிலகாலம் போடுவதால் அழிக்கப்படுகிறது.
இனி நமது தோட்டத்தினை எவ்வாறு வளமாக வைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.
வீட்டில் தோட்டம் வைத்திருப்போர் ஒவ்வொரு அறுவடைக்குப்பின்னும் அவசியம் தங்களின் மண்ணை சிலகாலம் குறைந்தது பத்துநாட்களாவதும் வெயிலில் கொட்டி பரப்பிவிட்டு காயவைக்கவேண்டும். இதனால் அந்த மண்ணில் இருக்கும் தேவையற்ற பூஞ்சான், பூச்சிகள், நோய்க்கிருமிகள் அழியும்.
மண் தரையில் தோட்டம் இருக்க, ஒரு செடியின் கடைசி அறுவடைக்குப்பின் தங்களின் நிலத்தினை குறைந்தது அரையடி முதல் ஒரு அடி ஆழம் வரை கொத்தி கிளறிவிட்டு அறப்போடவேண்டும்.
அதுவே தொட்டிகளை வைத்திருப்போர் கடைசி அறுவடைக்குப்பின் செடிகள் காய்ந்து பழுத்ததும், அதிலிருக்கும் மண்ணை தரையில் கொட்டி கிளறி பரப்பி விடவேண்டும்.
குறைந்தது பத்து நாட்களுக்குப்பின் அதில் பசுஞ்சாணக்கரைசல் / அமிர்தக்கரைசல் / பஞ்சகாவ்யா, மண்புழு உரம் போன்றவைகளை சேர்த்து பரப்பிய மண்ணை குவித்து ஈரப்பதம் காக்க ஒரு சணல் சாக்கினைக்கொண்டு மூடிவைக்கவும். அதுவே நிலமாக இருக்க கொத்திய மண்ணில் பசுஞ்சாணக்கரைசல் / அமிர்தக்கரைசல் / பஞ்சகாவ்யா, மண்புழு உரம், வீட்டுக்கழிவு உரம், காய்ந்த சருகுகள் ஆகியவற்றையும் சேர்த்து மேடாகவோ அல்லது பாத்தியாகவோ நிலத்தினை தயார்செய்யவும். ஒருவாரத்திற்குப்பின் நிலத்தில் விதை, நாற்று அல்லது பதியம் செய்தவற்றை நட்டு நீரூற்றி தேவையான மண்புழு உரம் இட்டு செடிகளை வளர்க்கலாம்.
அதுவே தொட்டிகளாக இருக்க சணல் சாக்கு போர்த்திய மண்ணுடன் தேவையான மண் கலவைகளை சேர்த்து துளையிட்ட தொட்டிகளில் நிரப்பி விதைவிதைக்கவும்.
இவ்வாறு செய்வதால் மண்ணும் புத்துணர்வு பெறும் செடிகளும் இந்த ஊட்டமேற்றிய மண்ணில் வளர செழிப்பான விளைச்சளை தரும்.