தக்களியைப் பற்றி பல சுவாரசியமான விசயங்களை இனி விதைகளே பேராயுதம் பகுதியிலும், விதைகள் பகுதியிலும் பார்த்தோம்… நம்ம ஊரு நாட்டுத் தக்காளி இன்று பல இடங்களில் காணாமல் போய்விட்டது. சந்தைகளில் சற்று அலைந்து திரிந்தால் சில இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.
இன்றிருக்கும் ஒட்டு ரக தக்காளிகள் பல வகைகளில் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் தக்களிகளாக உள்ளது. அதுவே நம் பாரம்பரிய நாட்டுத் தக்காளிகள் உடலுக்கு அவசியமான பல பல சத்துக்களை கொண்டிருக்கும் மிக சிறந்த உணவு. வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவு.
நாட்டுத் தக்காளியின் இனிப்பு புளிப்பு சுவையில் செய்யும் உணவுகளுக்கு தனி சுவையே என்று கூட சொல்லலாம். இதில் வைக்கும் ரசம் ஊரே மணக்கும். லேசாக கைகளில் பிழிந்து விடலே போதும் சமைக்கும் உணவுடன் கலந்து உணவையே இயற்கையாக சுவைக்க வைக்கும்.
இனி தக்காளி செடியினை நாமே வீட்டில் எவ்வாறு வளர்ப்பதை பார்க்கலாம்.
மிளகாயைப் போலவே தக்காளியையும் நாற்று விட்டு வளர்க்க வேண்டும். முதலில் சந்தையில் சற்று அலைந்து திரிந்து உண்மையான நாட்டு தக்காளியை வாங்கி வரவேண்டும். ஒவ்வொரு பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை பலவிடங்களில் இன்றும் உயிர்ப்புடன் நமது பாரம்பரிய நாட்டு தக்காளிகள் கிடைக்கிறது. நாம் தான் பார்க்க கவர்ச்சியில்லாத அவற்றை வாங்க மறுக்கிறோம் (இவை காணாமல் போக இதுவும் ஒரு காரணம்) என்று கூட சொல்லலாம்..
முதலில் அதனை வாங்கி வந்து ஒரு சிறு கப்பில் / தேங்காய் சிரட்டையில் இயற்கை உரம் நிரப்பி இந்த தக்காளியினை பிழிந்து விட்டு லேசாக சிறிது மண்ணை போட்டு மூடவேண்டும். பின் பதினைந்து இருவது நாட்கள் நீரினை தெளித்து நிழலில் பாதுகாக்க வேண்டும்.
அன்றாடம் சிறிது நீரினை தெளிக்கவேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பின் அரையடிக்கு மிளகாய் செடி வளர்ந்து விடும். அதனை ஒரு பெரிய மண் கலவை நிரப்பிய தொட்டியில் மாற்றி நட வேண்டும். இதனை நாற்று நடுவது என்று அழைப்பார்கள்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலை தழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். பின் அதனில் பதினைந்து நாட்கள் வளர்ந்த தக்காளி நாற்றினை தாய் மண்ணுடன் சேர்த்து நடவேண்டும். பின் அதன் மேல் மூடாக்கு இட்டு நீர் தெளிக்கவேண்டும். வாரம் ஒருமுறை உரம் சேர்த்து அன்றாடம் நீருற்றி வளர்க்க வேண்டும்.
இரண்டு மாதங்கள் கழித்தபின் சிறு சிறு பூக்கள் பூக்க தக்காளிகள் காய்க்க தொடங்கும். செடியின் அருகில் ஒரு குச்சி ஊன்றி அதனில் செடியை மேல் நோக்கி லேசாக ஒரு கயிறு கொண்டு கட்டலாம்.
வார மொருமுறை இயற்கை உரம், மண்புழு உரம், பஞ்சகாவ்யா / அமிர்த கரைசல் / ஜீவாமிர்தம் அல்லது ஏதேனும் ஒரு இயற்கை வளர்ச்சி ஊக்கியை அளிப்பது நல்ல செழிப்பான விளைச்சலைத் தரும்.
தக்காளிகள் வளரதொடங்கியபின் அடியிலிருக்கும் ஓரிரு தக்காளிகளை மீண்டும் விதைக்காக விட வேண்டும். அந்த செடி காய்த்து முடித்து வாட தொடங்க நமக்கு நமது பாரம்பரிய தக்காளி விதைகளும் கிடைத்து விடும். மீண்டும் அந்த விதைகளையே விதைத்து வருடம் முழுவதும் பலனை அனுபவிக்கலாம்.