கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தொழில் நுட்ப்பவளர்ச்சியால் அனைத்தும் சாத்தியம் என்ற நிலை உருவாக அதற்கேற்றாற்போல தொழிநுட்பத்தை மண்ணிலும், பயிரிலும் அறிவியல் செலுத்த கிடைத்ததெல்லாம் ஆரோக்கியமின்மையும், மலட்டுத்தன்மையும்.
இதனை பலர் அறிந்து விழித்துக்கொண்டனர். நமது ஆரோக்கியம், நமது கைகளில் என்ற நிலை மேலோங்க தொடங்கியுள்ளது. நமக்கு ஆரோக்கியமான விஷமற்ற காய்களும், பழங்களும் வேண்டுமானால் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு, அதனை எந்த வழிகளிலெல்லாம் கிடைக்கப்பெறலாம் என்று நாமே சிந்தித்து அடியெடுக்கவேண்டும் என்று தங்களின் ஆரோக்கியத்திற்கும், தங்களின் குடும்ப நலனுக்கும் ஒன்றிணைந்து பொறுப்பேற்று அதற்கான முதலடியாக வீட்டுதோட்டத்தினை கையிலெடுத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் நாம் ஒவ்வொருவரும் நமக்கே நமது பொறுப்பான சிந்தனைக்கு முதல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளவேண்டும்.
எளிதாக இயற்கையின் சுழற்சியில் வரும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தி செழிமையான காய்களை வீட்டுதோட்டத்தில் பெறும் நாம் இன்று கொத்தவரை வளர்ப்பை பார்க்கலாம்.
கொத்தவரங்காய், பலருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்காத காய்களின் வரிசையில் இடம்பிடித்த காய் என்றாலும் இதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. குறிப்பாக இரத்தசோகைக்கு இது மாமருந்தாக உள்ளது. சிறந்த இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் கொண்ட சிறந்த காய். குழந்தைப்பேறு காலத்தில் பெண்கள் கட்டாயம் எடுத்துக் கொள்வது அவசியம். சர்க்கரை நோய்க்கும், இருதயம் சம்மந்தமான நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் கொடுக்கக்கூடிய காயாகும். எளிதில் வீட்டுதோட்டத்தில் வளரும் காய். ஒரு குடும்பத்திற்கு மூன்று தொட்டிகளே போதுமானதாகும்.
எல்லாக்காலங்களிலும் செழித்து வளரக்கூடிய இந்த கொத்தவரங்காய் அனைத்து மண்ணிலும் செழிப்பாக வளரும். குறிப்பாக ஆடி, ஐப்பசி, கார்த்திகைப்பட்டங்களில் செழிப்பாக வளரக்கூடியது.
முதலில் அறு முதல் பத்து விதைகளை எடுத்துக்கொண்டு அதனை விதைநேர்த்திக்கு தயாராக்கவேண்டும். பத்து மில்லி நீரில் மூன்று நான்கு சொட்டுகள் பஞ்சகவ்யாவை எடுத்துக்கொண்டு அதனில் இரண்டு மூன்று மணிநேரங்களுக்கு கொத்தவரங்காய் விதைகளை ஊறவைக்க வேண்டும்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். கொத்தவரை வளர்க்க சற்று ஆழமாகவும், அகலம் குறைவாகவும் இருக்குமாறு தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். பழைய மண்ணாக இருந்தால் அதனை காயப்போட்டு வேர்கள், கல் நீக்கி, உரமேற்ற வேண்டும்.
ஊறிய விதைகளை விதைக்கு முன் 30நிமிடம் நிழலில் உலர்த்த வேண்டும். பின் ஈரமான மண்ணில் ஒரு இஞ்சு துளையிட்டு அதனில் தொட்டிக்கு இரண்டு முதல் மூன்று விதைகளை இட்டு மண்ணை மூடிவிடவேண்டும். தேவைக்கேற்றவாறு நீரினை தெளிக்கவேண்டும்.
அதிக பராமரிப்பு தேவையில்லாமல் வளரும் இந்த கொத்தவரை மூன்று நாட்களில் மண்ணிலிருந்து இலைகள் விட்டு வெளிவரும். தளிர்களுக்கு அன்றாடம் தேவைக்கேற்றவாறு தண்ணீர் தெளிப்பது அவசியம். மண்ணை காய்ந்த இலைதழைகள், வைக்கோல் கொண்டு மூடாக்கு போட்டு மூடுவது அவசியம். முப்பது நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த கொத்தவரை பல வியாதிகளுக்கு மருந்தாகவும் உள்ளது. இந்த இளம்காய்கள் சுவையானதாகவும், சத்தானதாகவும் இருக்கும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை காய்களை பறிக்கலாம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு அறுவடை செய்யலாம்.
பூச்சி தாக்குதல்
அசுவினி, தத்துப்பூச்சி, இலைப்பேன் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் இந்த கொத்தவரை செடியின் தளிர்வளர்ச்சியையும் ஆரம்ப வளர்ச்சியையும் பொதுவாக பாதிக்கும். தரமான நாட்டு விதைகளைக் கொண்டு விதைக்கும் பொழுது பெருமளவில் இந்த பூச்சிகளின் தாக்கத்திலிருந்து செடியை பாதுகாக்கலாம்.
நோய் தாக்குதல்
சத்துக்குறைபாட்டால் இலைப்புள்ளி நோய் இந்த கொத்தவரை செடிகளை தாக்குகிறது.
பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த வாரம் ஒருமுறை மண்புழு உரம், பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் அளிக்கலாம். மேலும் இயற்கை முறையில் 3G கரைசல் (Ginger, Garlic, Green Chillies) என்று சொல்லக்கூடிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசலை தெளிக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்கலாம்.