வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் வெப்பத்திலிருந்து நம்மைக்காக்கும் வெந்தயக்கீரை, கொத்தமல்லி, கற்றாழை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
மேலும் நமது உடலையும், அதிக வெப்பத்திலிருந்து நமது கூந்தலையும் காக்க செம்பருத்தியையும், செம்பருத்தி இலையையும் பயன்படுத்துவது அவசியம். இரத்த அழுத்தம், கருவளையம், பெண்கள் மாதவிடாய் தொந்தரவுகள், உடல் பருமன் என பல தொந்தரவுகளுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. இதனை எளிதாக வீட்டில் வளர்க்கலாம்.
அதிக சூரியஒளியினை விரும்பும் செடிகளில் ஒன்றானது இந்த செம்பருத்தி, இதனை வளர்க்க இந்த செடியில் சிறு பகுதியை (ஒரு அடி நீளமுள்ள குச்சி) தயாராக முதலில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
செம்பருத்தி குச்சியினை கொண்டுவந்து அதனை ஒன்றிற்கு பத்து என்ற விகிதத்தில் பஞ்சகாவ்யா அல்லது அமிர்த கரைசல் அல்லது பசுஞ் சாண நீரில் அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு சிறு தொட்டியில் மண்புழு உரம் கொண்ட மண் கலவையை நிரப்பிய அதனில் ஊறிய குச்சியை (ஊறிய பாகத்தை) நட வேண்டும். பின் அந்த தொட்டியில் நீரூற்றி வைக்கவும். ஒவ்வொரு நாளும் தேவைக்கேற்ப ஈரப்பதத்தை பொறுத்து நீர் ஊற்ற வேண்டும்.
மூன்றுவாரத்திற்கு பின் லேசாக இலைகள் துளிர்த்த பின் அதனை வேறொரு பெரிய மண் கலந்த தொட்டிக்கு அப்படியே உரத்துடன் மாற்றவேண்டும்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். செம்பருத்தி வளர்க்க சற்று ஆழமாகவும், அகலம் குறைவாகவும் இருக்குமாறு தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.
மற்றபடி பெரிய பராமரிப்பு அவசியமில்லை. நல்ல வெயில் காலத்தில் கூட இந்த செம்பருத்தியை சிறப்பாக வளர்க்கலாம். ஒவ்வொருநாளும் இரண்டு முறை நீரும், வாரம் ஒருமுறை ஒரு கையளவு மண்புழு உரமும் பத்து நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளில் ஒன்றை தெளிக்க சிறந்த வளர்ச்சியும், பூக்களும் அதிகரிக்கும். உரங்கள் அதிகரிக்கமாலும் பார்த்துக் கொள்ளவேண்டும், உரங்கள் அதிகரித்தால் இலைகள் தடித்து பெருத்துவிடும்.
செம்பருத்தியில் நோய் தாக்குதல் பொதுவாக ஏற்படுவதில்லை. செழிப்பான மண்ணும், உரமும் இருக்க எந்த பூச்சியும் இதனை தாக்காது. சீராக உரம் அளிக்காத நிலையில் சிறு சிறு வெள்ளை பூச்சிகள் மாவு பூச்சி தக்குதல் ஏற்பட 3G கரைசல் தெளிக்கலாம் நாட்டுப் பசுவில் கோமூத்திரத்தை ஒன்று பங்கிற்கு பத்துப்பங்கு நீர் கலந்து தெளிக்கவேண்டும். மண்கலவையை மேம்படுத்தவேண்டும்.
தேவைப்படும் நேரத்தில் இலைகளை அரைத்து தலைக்கும் குளிக்கலாம் பேன், பொடுகு தொல்லை நீங்கும், பூக்களை தேனீராகவும் அருந்தலாம்.
அன்றாடம் இரண்டு மூன்று பூக்களை மென்று உட்கொள்ள வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சத்தினை அதிகரிக்கும்.