உணவிற்கும், உலக உயிரினத்திற்கும் வாழ்வாதாரமாக இருக்கும் விதைகள் தரமான விதைகளாக இருக்க வேண்டும் என்பது அவசியம். அவை பாரம்பரிய விதைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த சூழல், மண், தட்பவெப்பம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு தன்னை செம்மைப்படுத்திக்கொண்டு ஆரோக்கியமான உணவினை அளிக்கும் என்பதினை மறந்துவிடக்கூடாது.
அதுவே ஒட்டு விதைகள், மலட்டு விதைகள் போன்றவை விளைச்சலை அதிகப்படுத்துமே தவிர தரமான உணவிற்கு உத்திரவாதமாக இருக்காது. இவ்வாறான விதைகள் அதிக இரசாயனங்களை (Fertilizer Responsive Crop அல்லது High Yield Variety) சார்ந்தே இருப்பவை.
பிரபஞ்சத்தின் சமநிலைக் கோட்பாட்டின் படி ஒன்றின் தன்மை அதிகரிக்கும் பொழுது மற்றொன்று குறையும். இரசாயனங்களின் துணையுடன் விளைச்சல் அதிகமாகும் பொழுது அதன் தரம் குறைகிறது.
பிரபஞ்சத்தின் சமநிலைக் கோட்பாட்டின் படி ஒன்றின் தன்மை அதிகரிக்கும் பொழுது மற்றொன்று குறையும். இரசாயனங்களின் துணையுடன் விளைச்சல் அதிகமாகும் பொழுது அதன் தரம் குறைகிறது.
அன்றாடம் உடலுக்கு தேவைப்படும் இரும்பு சத்தினையும், சுண்ணாம்பு சத்தினையும் அள்ளிக் கொடுக்கும் கீரைகளை எவ்வாறு விதைத்து, வளர்த்து அறுவடை செய்வது என்று பார்ப்போம்.
ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கிறதோ, இல்லையோ அவசியம் கீரைகளை வளர்க்க வேண்டும். காரணம், இன்று கடைகளில் கிடைக்கும் காய், கீரைகளில் அதிக இரசாயன நச்சுக்களும் பூச்சிக்கொல்லிகளும் உள்ளது, இதில் மிக அதிக பூச்சிக்கொல்லிகளை கொண்டு மிக குறைந்த நாட்களில் அறுவடைக்கு வருவது கீரைகள் தான். அதிலும் கீரைகளை மண்ணிலிருந்து எடுத்து, சந்தைக்கு வந்து, பின் நமது இல்லத்திற்கு வந்து உணவாக மாறுவதற்குள் அவற்றை பளிச்சென்றும், புதிதாகவும் காட்ட அதிக அளவு இரசாயனங்கள் தேவைப்படுகிறது. ஓரிரு நாட்களுள்ளே உணவாகும் இவற்றில் இருக்கும் இரசாயனங்களின் வீரியம் குறைவதற்குள் நமது குடலுக்குள் அவை செல்வதால் பல உடல் நல கேட்டினை அளிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் என்று நாம் நினைத்து உண்ணும் இவை உடலுக்கு பல வகைகளில் தொந்தரவளிக்கிறது.. அதனால் கட்டாயம் கீரைகளை வீட்டில் வளர்த்து உண்பது அவசியம்.
கீரைகளை எளிமையாக குறைந்த இடத்திலும், குறைந்த நாட்களுக்குள்ளேயும் வளர்த்துவிடமுடியும். கீரைகள் பொதுவாக 25 – 30 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். கீரை வளர்க்க சற்று அகலமாகவும் ஆழம் குறைவாகவும் இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் மண், மண்புழு உரம், மக்கு உரம், மணல் போன்றவற்றைக் கொண்டு மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும். மண்கலவையினை கற்கள், கட்டிகளின்றி நல்ல பொலபொலப்பாக முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா, ட்ரே அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். இந்த மண்ணை சமன் செய்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துக்கொள்ளவேண்டும். (ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்).
கீரை விதைகள் பொதுவாகவே சிறுசிறு விதைகள். அதனால் குறைந்த அளவான விதைகளே போதுமானது. ஒரு சிறு தொட்டிக்கு கால் ஸ்பூன் விதைகளுக்கும் குறைவான விதைகளே போதும். இந்த விதைகளை சிறிது மணலுடன் முதலில் கலந்து கொள்ள வேண்டும். (இவ்வாறு செய்வதால் விதைகளை தூவுவது எளிதாகும் அல்லது ஓரிடமாக பலவிதைகள் நின்றுபோய்விடும்). பின் அவற்றை மண்ணில் தூவவேண்டும். அதன் பின் மண்ணை லேசாக துழாவி விடவேண்டும். தேவைப்பட்டால் சிறிது நீர் தெளிக்கலாம்.
ஒரு நாள் விட்டு மீண்டும் இதில் லேசாக தண்ணீர் தெளிக்கவேண்டும். கீரை விதைகள் மூன்று அல்லது நான்கு நாட்களில் முளைவிட்டு விடும். வாரம் ஒருமுறை ஒருகையளவு மண்புழு உரம், பஞ்சகவ்யா தெளித்தால் போதும். இல்லையானால் வீட்டில் அரிசி, பருப்பு, மோர் போன்றவற்றின் களைந்த நீரினை புளிக்கவைத்து ஊற்றலாம்.
சத்தான சுவையான கீரைகள் முப்பது நாட்களில் தயாராகிவிடும். இந்த கீரைக்கும் சந்தையில் கிடைக்கும் கீரைக்கும் எட்டாதளவு வேறுபாடுகள் உள்ளன. இந்த முறையில் முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, பருப்புக்கீரை ஆகிய கீரைகளை வளர்க்கலாம். அரைக்கீரையினை அறுத்து எடுக்க வேண்டும். எடுத்த பின் மீண்டும் அந்த தண்டிலிருந்தே கீரையினை தேவைக்கேற்ப எடுக்கலாம். மற்ற கீரைகளை வேரோடு எடுக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை ஒரு தொட்டியினை தயார்செய்தால் தேவைக்கேற்ப கீரையினை ஒவ்வொருநாளும் பறித்து பயன்படுத்தலாம்.
சரி இனி கீரை வளர்ப்பில் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
கீரைகளில் எறும்பு தொல்லை
கீரைவிதைகளை எறும்புகள் எடுத்துச்சென்றுவிடும். இதற்கு தொட்டியை சுற்றி எண்ணெய்த் தடவுவதுதான் எளியவழி. தொட்டியின் அடியில் எறும்புகள் ஏறும் கால்களில் உப்புடன் நீர் கலந்த தண்ணீரினை வைக்கலாம் அல்லது அருகில் வாசனை அளிக்கும் புதினா, துளசி, ஓமவல்லி, சாமாந்திப்பூ போன்ற செடிகளை வளர்க்கலாம். இதனால் எறும்புகளின் தொந்தரவு குறையும்.
கீரைகளில் பூச்சி தாக்குதல்
வளர்ந்த கீரைகளை பூச்சிகள் தாக்குவதைக் கட்டுப்படுத்த அவ்வப்பொழுது நாட்டுப்பசுவின் கோமூத்திரத்தினை ஒன்றிற்கு பத்து என்ற அளவில் நீருடன் சேர்த்து அடிக்கலாம் அல்லது பஞ்சகவ்யா தெளிக்கலாம்.
கீரைகளில் ஏற்படும் சத்துக் குறைபாடு
கீரைகளில் மஞ்சள் நிறம் தழைச்சத்து குறைபாட்டினைக்காட்டும். இதற்கு மண்புழு உரம் அளிப்பதும் கோமூத்திரம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் அளிப்பதும் சிறந்தது. இவை மண்ணிலிருக்கும் தழைச்சத்தினை செடிகளுக்கு அளிக்கும். நிலப்பகுதியில் கீரைகளை வளர்த்தால் ஆங்காங்கே அகத்திக்கீரையினை நடுவது சிறந்த பலனைத்தரும்.
கீரைகளை புதிதாகவும், இயற்கையாகவும் 25 முதல் 30 நாட்களில் உண்பது சிறந்தது. பலப்பல சத்துக்கள் இந்த இளங்கீரையில் தான் உள்ளது. மூட்டுவலி, இரத்தசோகை போன்ற தொந்தரவுகளுக்கு நிரந்தர தீர்வினை இந்த கீரைகள் அளிக்கும். கீரைகள் அதிகமாக வளர அதனை அக்கம் பக்கத்தியிருப்பவர்களுக்கும் விற்கலாமே.. ஆர்கானிக் கீரைகள்.. யார்தான் வாங்க மறுப்பார்கள். இலாபமும் கிடைக்கும்.