கருவேப்பிலை வளர்க்கலாம்

வயது வந்த பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய செடி இந்த கருவேப்பிலை செடி.

எல்லா கடையிலும் சும்மாவே கருவேப்பிலை கொடுக்கிறார்களே பின் ஏன் கருவேப்பிலை வளர்க்கவேண்டும் என்கிறீர்களா…  பெரும்பாலும் கடைகளில் கிடைக்கும் கருவேப்பிலையில் பல இரசாயனங்கள் தெளிக்கப்பட்டு தான் விற்பனைக்கு வருகிறது. இதில் எந்த மருத்துவகுணமும் இல்லை. காரணம் சந்தைகளில் இன்று வரும் கருவேப்பிலை பலவகையான ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்டு சத்தற்ற கருவேப்பிலையாக வெளிவருகிறது. இதனை உண்பதால் எந்த  பிரயோஜனமும் இல்லை.

நாமே வீட்டில் வளர்த்து புதிதாக பறித்து உண்பதே சிறந்தது.
நாமே நம் வீட்டில் கருவேப்பிலையை வளர்த்து அதனை ஒவ்வொரு நாளும் புதிதாக எடுத்து உண்பதால் மட்டுமே கருவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்களை பெற முடியும். சரி எப்படி கருவேப்பிலையை வீட்டில் வளர்ப்பது என்று இனிப் பார்ப்போம்.

எந்த பெரிய பராமரிப்பும் தேவை இல்லாத செடி தான் இந்த கருவேப்பிலை செடி.. சின்ன மரம் என்று கூட சொல்லலாம். இதை வீட்டுத் தோட்டங்களில் வைப்பதால் தேவைக்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதிலும் வயது வந்த பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய செடி இந்த கருவேப்பிலை செடி. அவர்களின் அழகு, மாதவிடாய் தொந்தரவு, முடி வளர்ச்சி, மேனி பாதுகாப்பு என பல வகைகளில் இந்த கருவேப்பிலை பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு இலைகளை எடுத்து உண்டு வந்தாலே போதும் அட்டகாசமான அழகையும், ஆரோக்கியத்தையும் பெறமுடியும்.

அனைத்து மண் வகைகளிலும் எளிதாக வளரும் கருவேப்பிலை செடி நாமும் நமது வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். மற்ற விதைகளை போல் எளிதாக விதைத்து வளர்க்கக்கூடிய செடி அல்ல இந்த கருவேப்பிலை செடி. கருவேப்பிலை மரங்களில் உள்ள நன்கு பழுத்த பழங்களை பறித்து உடனே மண்ணில் நட இருபது நாட்களில் பொதுவாக முளைக்க தொடங்கும். இந்த பழுத்த விதைகள் கிடைக்கவில்லை என்றால் பல இடங்களில் கருவேப்பிலை நாற்றுகள் விற்கப்படுகிறது அல்லது ஒருபெரிய மரத்தின் அருகில் பலவிதைகள் முளைத்திருக்கும் அவற்றையும் பயன்படுத்தலாம்.

வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலை தழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பி, சிறிது நீர் தெளித்து அதில் இந்த நாற்றை நடவு செய்யலாம். பின் மூடாக்கிட்டு மண்ணை மூடுவது சிறந்தது. தேவைக்கேற்ப அன்றாடம் நீர் தெளிப்பதும், வாரம் ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் / ஜீவாமிர்தம், மீன் அமிலம் அல்லது ஏதேனும் ஒரு இயற்கை இடுபொருளை அளிப்பதும் வளமான வளர்ச்சியைத்தரும். பத்துநாட்களுக்கு ஒருமுறை ஒருகையளவு மண்புழுஉரம் அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதால் பூச்சித்தாக்குதல் கட்டுப்படும். நல்ல வளர்ச்சியைப் பெறலாம். 

கருவேப்பிலையில் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் காணப்படும். அவ்வாறு இருக்க வேப்பிலை கரைசல், வேப்பங்கொட்டை பூண்டு கரைசல், மஞ்சள் நிற ஒட்டும் பொறி பயன்படுத்தலாம் அல்லது நாட்டுமாட்டின் கோ மூத்திரத்துடன் பத்து சதவீதம் நீர் கலந்து இலைகளின் மேல் தெளிக்க நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வாறு இயற்கையான முறையில் கருவேப்பிலையை வீட்டிலேயே வளர்த்து அதனை உண்பதால் மட்டுமே பல மருத்துவ குணங்களைப் பெறமுடியும். எளிமையாக பெரிய பராமரிப்பு எதுவுமின்றி வருடம் முழுவதும் பயனளிக்கும் இந்த இயற்கை முறையில் விளைந்த கருவேப்பிலையை மற்றவர்களுக்கும் கொடுத்து பயன்பெறலாம்.

(4 votes)