நமது வீட்டில் வளர்க்க அன்றாடம் தேவைப்படும் சத்தான கொத்தமல்லியைப் எளிதாக வளர்க்கலாம் வாங்க…
எளிதாக வளரும் இந்த கொத்தமல்லி பலருக்கும் சவாலாக இருக்கும் செடிவகைகளில் ஒன்று. கொத்தமல்லியை வீட்டில் வளர்க்க அன்றாடம் பயன்படுத்தும் சிறு நாட்டு தனியாவே போதும்.
நாமூர் தடப்பவெப்பத்திற்கு வருடம் முழுவதும் எளிமையாக விளையவைக்கலாம். நாற்றுகள் விடவேண்டாம். நேரடியாக விதைக்கலாம். கொத்தமல்லி செடியின் காயே விதையாகும்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். மல்லி வளர்க்க சற்று அகலமாகவும் ஆழம் குறைவாகவும் இருக்குமாறு தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.
கரும் பழுப்பு நாட்டு தனியாவை இரண்டாக உடைத்தால் கொத்தமல்லி தழைகளுக்கான விதைகள் இருப்பதை காணலாம். பொதுவாக தனியாவை ஒன்றிரண்டாக உடைக்காமல் விதைத்தால் பெரும்பாலும் பலனளிக்காது. கைகளில் லேசாக தேய்த்து உடைத்து விதைத்தால் சட்டேன்று முளைப்பதைக் காணலாம். மேலும் பஞ்சகவ்யா, அமிர்தகரைசல், ஜீவாமிர்தம் கொண்டு விதைநேர்த்தி செய்தும் பயன்படுத்தலாம் அல்லது தண்ணீரில் ஊறவைத்து விதைகளை விதைக்கலாம். மழை நீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகமாகவே இருக்கும்.
அவற்றை நாம் கலந்து வைத்திருக்கும் மண்ணில் பரவலாக விதைகளை தூவ வேண்டும். மீண்டும் மேல் சிறிது மணல் கொண்டு மூடிவிட வேண்டும். விதைக்கும் போது எப்பொழுதுமே விதைகளின் அளவைவிட இரண்டு மடங்கு மண்ணுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்குமாறு விதைக்க வேண்டும். பின்பு பூவாளியைக் கொண்டு தண்ணீரை தெளிக்க வேண்டும். உப்பு கலந்த நீரை ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது மழைநீரை பிடித்து வைத்துக்கொண்டு மழைநீரை கொத்தமல்லிக்கீரை வேருக்கு ஊற்றுவதனால் கீரைகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். விதை விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் கொத்தமல்லி செடி முளைத்துவிடும். விதைத்த மூன்றாம் நாளும், அதன் பின் வாரம் இரண்டு முறை செடிகளுக்கு ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் தெளிக்க வேண்டும்.
பொதுவாக வீட்டு தோட்டத்தில் கொத்தமல்லி விதைக்கும் பொழுது எல்லா விதைகளையும் மொத்தமாக விதைக்காமல் 20 நாட்கள் இடைவெளியில் விதைகளை சுழற்சி முறையில் மற்றொரு தொட்டியில் விதைக்கலாம். இவ்வாறு செய்வதால் நம் வீட்டிற்கு தேவையான கொத்தமல்லி இலைகளை தேவைக்கேற்ப பறித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை மண்புழு உரம் கொடுக்கலாம். தேவைக்கேற்ப அன்றாடம் அறுவடை செய்ய நல்ல மணமாக, சத்தான, சுவையான கொத்தமல்லிகள் இனி உங்கள் வீட்டில் சிறப்பாக வளரும்.
கொத்தமல்லியில் ஏற்படும் பூச்சி தாக்குதல்
இலைபேன்கள், மாவுபூச்சிகள், பச்சைபுழுக்கள் அல்லது சில வைரஸ்களால் சில நோய்களும், அதிப்படியான நீரினால் வேர் அழுகல் நோயும் ஏற்படலாம். இதற்கு வேப்பெண்ணை கரைசல், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கலாம். அவ்வபொழுது இயற்கை வளர்ச்சி ஊக்கிகளை தெளிக்க நோய், பூச்சி தாக்குதல் இன்றி நல்ல விளைச்சலைப் பார்க்கலாம்.