எளிதாக வீட்டிலேயே மிளகாய் செடி எவ்வாறு வளர்ப்பது என்று பார்க்கலாம்.
மிளகாய்.. நமது நாட்டு உணவு இல்லையென்றாலும், நமது உணவுடன் இன்று ஒன்றாகக்கலந்த ஒரு உணவாக மாறிவிட்டது. ஒவ்வொரு உணவிற்கும் பச்சை மிளகாய் அல்லது சிகப்பு மிளகாயை பயன்படுத்துவது இன்று நடைமுறையில் இருக்கும் ஒன்று. இந்த மிளகாயில் கூட மாற்று விதைகள்.. வயிற்றிற்கு அதிக கேடுவிளைவிக்கும் இந்த ஒட்டு விதைகளை இனியாவதும் நமது உணவுகளிலிருந்து அகற்றி நமது நாட்டு விதைகளை பயன்படுத்துவோம்.
அன்றெல்லாம் பச்சை மிளகாய் ஒன்று போட்டாலும் காரம் குறையாமல் இருந்தது. இன்று மிளகாயை வெறுமே உண்டால் கூட காரமாக இருக்காது, அதுவே பார்க்கவும் பெரிதாக இருப்பதிலிருந்து நமக்கே தெரியும் இது ஏதோ புதுவகை மிளகாய்யென்று.. நமது உடலுக்கு (மரபணுவிற்கு) பரிச்சியமில்லாத மிளகாய்.
ஒவ்வொரு நாளும் இரசாயனம், பூச்சிக்கொல்லி இல்லாத மிளகாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. இதனை வீட்டிலேயே சுலபமாக வளர்க்க ஆரோக்கியம் நிலைக்கும்.
மிளகாய் செடி எளிதாக வைக்க முதலில் ஒரு சிறு கொட்டாங்குச்சி அல்லது ஒரு சிறு கப்பினை எடுத்துக்கொள்ளவும். அதில் வீட்டில் தயாரித்து வைத்திருக்கும் இயற்கை உரத்தினை நிரப்பி வீட்டிலிருக்கும் இயற்கையில் விளைந்த காய்ந்த மிளகையினை பிரித்து ஐந்து விதைகளை தூவி மண்ணால் மூடி சிறிது நீரினை தெளிக்க வேண்டும். நிழலான இடத்தில் இதனை வைக்கவேண்டும்.
அன்றாடம் சிறிது நீரினை தெளிக்கவேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பின் அரையடிக்கு மிளகாய் செடி வளர்ந்து விடும். அதனை ஒரு பெரிய மண் கலவை நிரப்பிய தொட்டியில் மாற்றி நட வேண்டும். இதனை நாற்று நடுவது என்று அழைப்பார்கள்.
வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக் கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலை தழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். பின் அதனில் பதினைந்து நாட்கள் வளர்ந்த மிளகாய் நாற்றினை தாய் மண்ணுடன் சேர்த்து நடவேண்டும். பின் அதன் மேல் மூடாக்கு இட்டு நீர் தெளிக்கவேண்டும்.
வார மொருமுறை இயற்கை உரம், மண்புழு உரம், பஞ்சகாவ்யா / அமிர்த கரைசல் / ஜீவாமிர்தம் அல்லது ஏதேனும் ஒரு இயற்கை வளர்ச்சி ஊக்கியை அளிப்பதுடன் அன்றாடம் தண்ணீர் தெளிக்க பூத்து மிளகாய் எளிதில் காய்க்க தொடங்கிவிடும்.