காலமும் நேரமும் பலவற்றை எளிதாக்குகிறது. ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். செடி வளர்ப்பது, வீட்டுத்தோட்டத்தில் காய்களை பெறுவது போன்றவை சிலநேரங்களில் எட்டாக்கனியாக பலருக்கு தோன்றும்.. காரணம் அதற்கான சரியான பட்டத்தினையும், விதைகளையும் தேர்ந்தெடுக்காததும், இயற்கையின் அறிவியலை புரிந்துகொள்ளாததும் தான்.
காலத்தையும் நேரத்தையும் இயற்கையின் துணையோடு புரிந்து கொண்டால் செடிவளர்ப்பு மட்டுமல்ல உலகை வெல்வதே எளிதுதான். மனித இனம் தோன்றுவதற்கு பலகோடி ஆண்டுகளுக்கு முன்னே இலைதழை மரம் செடிகள் தோன்றியது. அவைகள் இந்த பிரபஞ்சத்தின் உயிர்நாடிகள். யாரும் விதைக்காமல் நீரூற்றாமல் தட்சிணாயன காலத்தில் (ஆடி முதல் மார்கழி வரை) சாலையோரங்களில் பலப்பல செடிகள் முளைத்து செழித்து வளர்வதை ஆண்டுக்காண்டு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
செடிகள் நன்கு செழித்து வளர அவைகளுக்கு தேவை தரமான விதைகளும் சரியான காலமும் தான். அவ்வாறு காலத்தையும் நேரத்தையும் துல்லியமாக கணித்து வளரும் செடிகளின் பட்டியலின் வரும் அவரை செடி வளர தேவையானவற்றை பார்ப்போம்.
பட்டை அவரை, கோலி அவரை, செடி அவரை இப்படி ஏராளமான நாட்டு அவரை வகைகள் உள்ளது. சுவையிலும் சத்திலும் பட்டை அவரைக்கும், கோலி அவரைக்கும் ஈடு இணையே இல்லை. பொதுவாக கார்த்திகையில் பூத்து மார்கழி தையில் பார்க்குமிடமெல்லாம் எளிதாக கிடைக்கும் அவரைவகைகளில் இவையும் சில.
சத்துக்கள் அதிகமிருக்கும் இவ்வகை அவரைகள் நமது தமிழகத்தில் செழித்து வளரக்கூடியது. இவற்றுள் நேரடி விதைப்பு முறைக்கு அனைத்து அவரையும் ஏற்றது தான் என்றாலும் செடி அவரையினை சுலபமாக விதைத்து பராமரிக்கலாம். இந்த ராக அவரை எல்லா காலமும் ஏற்றது தான் என்றாலும் ஆடிப்பட்டம் சிறந்தது. மற்ற அவரை இரகங்களுக்கும் ஆடிப்பட்டமே சிறந்தது.
தேவையான அவரை விதைகளை எடுத்துக்கொண்டு அவற்றை பஞ்சகவ்யா அல்லது சோற்றுக் கஞ்சியில் விதை நேர்த்தி செய்யலாம். அவரை விதைகளை நான்கு முதல் ஆறுமணிநேரம் ஊறவைத்து பின் சிறிது நேரம் நிழலில் உலர்த்தி பின் விதைக்க எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஏழு தொட்டிகளில் அவரைச்செடியினை வைக்க அவை ஒரு சிறு குடும்பத்திற்கு போதுமான அவரைக்காயினை அளிக்கும். இதற்கு பதினைந்து விதைகளே போதுமானது.
வீட்டில் தேவையில்லாத உடைந்த பக்கெட்டுகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவரை வளர்க்க சற்று ஆழமாகவும், அகலம் குறைவாகவும் இருக்குமாறு தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.
மண், மணல், தேங்காய் நார், மண்புழு உரம், இயற்கை உரம், சாம்பல், வேப்பம் புண்ணாக்கு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும்.
பின் சிறிது நீர் தெளித்து அந்த மண்ணில் ஒரு இஞ்சு ஆழத்திற்கு துளையிட்டு ஒவ்வொரு தொட்டியிலும் விதைநேர்த்தி செய்துவைத்திருக்கும் விதைகளில் இரண்டினை ஒவ்வொரு தொட்டியிலும் போட்டு மண்ணால் மீண்டும் மூடிவிடவேண்டும். மூன்று நாட்களுக்குப் பின் நீரூற்றவேண்டும்.
இந்த இரண்டு விதைகள் முளைத்து வந்த பின் அவற்றில் எது நன்கு முளைத்துவந்திருக்கிறதோ அதனை வைத்துக்கொண்டு மற்றொன்றை எடுத்துவிடலாம். ஒரு விதை மட்டுமே முளைத்திருந்தால் அதனை அப்படியே வைத்துக்கொள்ளலாம். ஓரிரு வாரத்தில் விதை முளைத்து இரண்டு இலைகள் வந்த பின் வாரம் ஒருமுறை சிறிது மண்புழு உரம் இடவேண்டும். அதேபோல் பத்துநாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா, அமிர்தக்கரைசல் ஆகியவற்றையும் ஒன்றிற்கு பத்து சதவீதம் தண்ணீர் கலந்து தெளிப்பது நல்ல வளர்ச்சியையும், காய்ப்பையும் மட்டுமல்லாமல் பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து செடிகளைப் பாதுகாக்கும். இவ்வாறு தொடர்ந்து செய்ய (உரம் அளிப்பது, நீரூற்றுவது) இரண்டுமாதங்களில் அவரைக்காய் காய்த்துக்குலுங்கும்.
பூச்சி தாக்குதல்
பொதுவாகவே அவரைக்காய்க்கு அதிகளவில் பூச்சித்தாக்குதல் இருக்கும். இதனை எதிர்கொள்ள வளமான மண் அவசியம். சுழற்சி முறையில் தொட்டிமண்ணை மீண்டும் பயன்படுத்துவதாக இருந்தான் அவற்றை இரண்டு மூன்று நாட்கள் பரப்பி காயவைத்து பின் பஞ்சகவ்யா சேர்த்து ஒருவாரம் மூடக்கம் போட்டு வைக்க வேண்டும். இதனால் அந்த மண்ணில் ஏதேனும் நோய்க் கிருமிகள் அல்லது பூச்சிகள் இருந்தால் அவை அழிந்துவிடும். மேலும் பஞ்சகவ்யா தெளிப்பதால் மண்ணிற்கு தேவையான நன்மை செய்யும் நுண்ணயிர்கள் பெருகும். இவை செடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல செழிப்பான மண்வளத்தையும் அளிக்கும். இதனால் பெருமளவு பூச்சி மற்றும் நோயின் தாக்குதலை குறைக்கலாம். அதோடு விதைநேர்த்தியும் அவ்வப்பொழுது நாட்டு மாட்டின் கோமூத்திரத்தினை நீருடன் கலந்து வரம் ஒருமுறை செடிகளுக்கு தெளிப்பதால் பூச்சி தாக்குதலிலிருந்து அவரை செடியை பாதுகாக்கலாம். தேவைப்பட்டால் சிறிது வேப்பம் புண்ணாக்கும் சேர்க்கலாம்.
அவரைக்கு அசுவினி போன்று சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகளவில் தாக்கும். இவை செடியின் தளிர்கள், பூக்கள் போன்றவற்றிலிருந்து சாறுகளை உறிஞ்சி செடியின் வளர்ச்சியினை பாதிப்பதோடு செடியினை வாடி வதங்கவும் செய்யும்.
மேலும் அவரையில் காய்த்துளைப்பான் தொந்தரவும் அதிகமாக இருக்கும். பொதுவாகவே நாட்டு அவரை வகையைச் சேர்ந்த பட்டையவரையில் அதிகமாக இந்த தொந்தரவை பார்க்க முடியும். அவரையில் இருக்கும் விதைகளை இந்த காய் துளைப்பான் துளையிட்டு நுழைந்து தின்றிருக்கும். இதனால் இந்த அவரைக்காயினை பயன்படுத்த முடியாது.
பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த அவ்வப்பொழுது வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கலாம்.
நமது கிராமங்களில் அவரை செடி நன்கு முளைக்கவும் பூச்சி தாக்குதல் இன்றி வளர அவ்வப்பொழுது சாம்பலை தூவுவார்கள். இதுவே பூச்சி தாக்குதலை குறைக்கவும், செடி, காய் வளர்ச்சிக்கும் சிறந்த வழி. தரமான மண், விதை, காலம் போன்றவை செழிப்பான காய்களை சுவையுடனும், சத்தானதாகவும் அளிக்கும். அந்த வரிசையில் பல உடல் உபாதைகளுக்கு மருந்தாக இந்த இயற்கையில் எளிமையான முறையில் விளர்ந்த அவரை செடி இருக்கும்.