அன்றாடம் நாம் உண்ணும் உணவில் கீரைகளை சேர்த்து உண்பது மிக சிறந்தது. கீரைகளை சுவையாகவும், சத்துக்கள் குறையாமலும் உண்ண ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்கலாம். கீரைகளை உண்ணும் முன் கவனிக்க வேண்டியவை சிலவற்றை இனி பார்ப்போம்.
முளைக்கீரை
சுடு சாதத்தில் முளைக்கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது. சுட சுட இருக்கக்கூடிய சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் சத்து குறைவு ஏற்படும். அதே போல் தலைவலி இருக்கும் பொழுது முளைக் கீரையை உணவில் பயன்படுத்த கூடாது.
பருப்பு கீரை
உடலுக்கு குளிர்ச்சியை அதிகமாக அளிக்கக்கூடிய கீரை பருப்பு கீரை. அதனால் உடல் குளிர்ச்சி உள்ளவர்கள், சீதளம் உள்ளவர்கள் இந்த பருப்பு கீரையை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி சாப்பிடுவதால் வயிற்றில் கிருமி தொந்தரவுகள் ஏற்படும் அல்லது சரும பிரச்சனைகள் ஏற்படும்.
வள்ளிக் கீரை
வெள்ளைக்கீரை / வள்ளிக் கீரைத் தண்டை வாதம் சார்ந்த தொந்தரவுகள், வாதவலி, வாத குடைச்சல் உள்ளவர்கள் கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. இதனால் வலி அதிகரிக்கும்.
புளிச்ச கீரை மற்றும் அரைக்கீரை
பித்தம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் புளிச்ச கீரையை சாப்பிடக்கூடாது. பித்தத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு கீரை. மூல நோய் உள்ளவர்கள் புளிச்ச கீரையை அறவே தவிர்க்க வேண்டும்.
மூல நோய் உள்ளவர்கள் அரைக்கீரையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
புண்ணாக்குக் கீரை
பிண்ணாக்குக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. புண்ணாக்குக் கீரை சொறி, சிரங்கு போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய கீரை. வாத நோய் உள்ளவர்கள் பிண்ணாக்கு / புண்ணாக்கு கீரையை கண்டிப்பாக சாப்பிடவே கூடாது.
துத்திக் கீரை
உடல் உஷ்ணத்தில் மாறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய கீரை துத்திக் கீரை. அதனால் இதனை தொடர்ந்து சாப்பிடாமல் இடைவெளி விட்டு சாப்பிடுவது நல்லது. மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த கீரை. நோயின் தாக்கத்திலிருந்தும் வலி வீக்கத்திலிருந்தும் நிவாரணத்தை அளிக்கும் கீரை.
முருங்கைக்கீரை
நம்மை சுற்றி இருக்கும் முருங்கைக் கீரையை அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்க வேண்டும். முருங்கைக்கீரை அளவுக்கு அதிகமாகும் போது பேதி ஆகக் கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதிலும் முருங்கை கீரையை இரவு நேரத்தில் உட்கொள்ளவே கூடாது. பகல் நேரத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அகத்திக் கீரை மற்றும் சிறுகுறிஞ்சான் கீரை
இந்த அகத்திக் கீரையை நன்கு மென்று சாப்பிட வேண்டும். நன்கு மெல்லாமல் அரைகுறையாக மென்று சாப்பிட்டால், பல நேரங்களில் பேதியை ஏற்படுத்தும்.
அகத்திக் கீரையுடன் தேங்காய் பால், சீரகம், வெங்காயம் சேர்த்து சமைக்கும் பொழுது அதனுடைய சத்துக்கள் பல மடங்கு அதிகரிக்கும். அதனால் தேங்காய் பால், சீரகம், வெங்காயம் சேர்த்து அகத்திக் கீரையை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
அகத்தி கீரை, சிறுகுறிஞ்சான் கீரையை எண்ணெயில் வதக்க கூடாது. இவற்றை எண்ணெய் விட்டு வதக்கினால் இந்த கீரையின் மருத்துவ குணங்கள் அகன்றுவிடும். எண்ணெய் இல்லாமல் கூட்டுப் போல் செய்து சாப்பிட வேண்டும்.
சிறுகுறிஞ்சான் கீரையை அரிசி கழுவிய நீரில் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து சமைக்கும் பொழுது அதனுடைய பயன்கள் அதிகமாகும். செட்டிநாட்டுப் பகுதிகளில் இதனை மண்டி என்று கூறுவதுண்டு. அரிசி களைந்த நீருடன் கீரைகளை சேர்த்து சமையல் செய்யும் பொழுது அது கீரை மண்டி எனப்படும்.
லச்சக்கொட்டைக் கீரை
லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒரு நாள் நான்கைந்து இலைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இந்த லட்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.
சிறுகீரை
சிறு கீரை, அகத்திக் கீரை போன்ற கீரைகளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாது. காரணம் இந்த கீரைகளில் வீரியம் அதிகம் உள்ளது. வீரியம் அதிகமாக இருக்கக்கூடிய மருந்துகளின் தன்மையை முறிக்கக் கூடிய தன்மை கொண்டது. அதனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து உண்ண கூடிய காலங்களில் சிறுகீரை, அகத்திக் கீரை ஆகிய கீரைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சிறுகீரையை சமையல் செய்யும் போது அதனுடன் மசாலா பொருட்கள், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் போன்ற பொருட்களை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை சேர்க்காமல் இருக்கும் போது தான் அதிக சத்துக்களையும் அதனுடைய முழு பயனையும் நாம் பெற முடியும்.