தமிழகத்தின் உயிர் நாடி அரிசி என்று சொல்லலாம். அரிசியை விட மற்ற கோதுமை, ஓட்ஸ் போன்றவை சத்துக்கள் அதிகம் கொண்டது என அரிசியை தவிர்த்தவர்கள் கூட பத்து நாட்கள் அரிசியே இல்லாத உணவை தொடர்ந்து உண்ணமுடியாது.
அந்தளவிற்கு அரிசி நமது மரபிலும், மரபணுவிலும் இடம் பிடித்த ஒன்று. ஆரோக்கியமாக, காலம் காலமாக நமது முன்னோர்கள் உண்ட அரிசி இன்று நமக்கு மட்டும் எவ்வாறு சத்தற்று போனது?
தமிழர்களுக்கு, நமது உடலுக்கான சிறந்த உணவு அரிசியே. சரியான அரிசியை தேர்ந்தெடுத்து, சரியான முறையில் உண்டால் அரிசிக்கு இணையான உணவே கிடையாது. அரிசியில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது.
அரிசியில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆனால் நாம் எந்த அரிசியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொருத்து அரிசியின் சத்துக்கள், மருத்துவகுணங்கள் வேறுபாடும்.
இன்று பொதுவாக கிடைக்கும் வெள்ளைவெளேரென்று இருக்கும் ஒட்டு ரக அரிசிகளில் மாவு சத்தை தவிர வேறு சத்துக்கள் கூறும்படி இல்லை. அதுவே பாரம்பரிய அரிசிகளில் பல சத்துக்கள் உள்ளது.
அரிசியில் அதாவதும் பாரம்பரிய அரிசியில் நார் சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் பி சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், மக்னிசியம் சத்துக்கள், இரும்பு சத்து என பல சத்துக்கள் நிரம்பி உள்ளது.
பாரம்பரிய அரிசிகளை மிக சுலபமாக அன்றாடம் நாள் சமைக்கும் அரிசியைப் போலவே சமைக்கலாம். முடிந்தவரை குக்கரை பயன்படுத்துவதை தவிர்த்து அரிசியை திறந்த பத்திரத்தில் அல்லது மண் பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது.
அரிசி இன்று சத்தற்று போனதற்கு காரணம் அன்று நம் முன்னோர்கள் உண்ட அரிசியை இன்று நாம் உண்பதில்லை என்பதே. அதனால் அந்த ரக அரிசிகளை மீண்டும் நாம் பயன்படுத்தத் தொடங்கினால் ஆரோக்கியம் பெருகும். உடலில் ஏற்படும் பல நோய்கள் மறையும்.
குறிப்பாக (Lifestyle Disease) வாழ்வியல் நோய்கள் என்று சொல்லக் கூடிய உடல் பருமன், நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக பாதிப்புகள், கல்லீரல் நோய்கள், மனஉளைச்சல் போன்றவை காணாமல் போகும்.
தூயமல்லி, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, ஆத்தூர் கிச்சடி, சொர்ண மசூரி, மிளகு சம்பா, மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம், கருங்குறுவை, கவுணி போன்ற அரிசிகள் நமது பாரம்பரிய அரிசிகள். இவற்றை அன்றாடம் உணவுகளில் பயன்படுத்த நல்ல பலனை பெறலாம், நோயிலிருந்து விடுபடலாம்.
இந்த அரிசிகளை எவ்வாறு சமைப்பது? என்று பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அன்றாடம் நாம் சமைக்கும் முறையிலேயே சில சிறு மாறுபாடுகளுடன் எளிமையாக சமைக்கலாம்.
இந்த பதிவில் பலருக்கும் விருப்பமான தூயமல்லி அரிசி, வெள்ளை நிற அரிசியை எவ்வாறு பாத்திரத்தில் வடித்து பயன்படுத்தலாம் என பார்போம். மேலும் சிவப்பரிசிகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம் ஆகியவற்றை எளிமையாக சமைத்து அவ்வப்பொழுது பயன்படுத்துவது சிறந்தது.
தூயமல்லி அரிசியை சமைக்க
- 1 கப் தூயமல்லி அரிசி
- தண்ணீர்
தூயமல்லி அரிசியை முதலில் ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரம் (எந்த பாத்திரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், பானைப் போல் இருந்தால் சிறந்தது) அல்லது மண் சட்டியில் ஒரு பங்கிற்கு நான்கு முதல் ஐந்து பங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதிவந்தபின் ஊறவைத்த அரிசியை அதனுடன் சேர்க்க வேண்டும். நன்கு கொதிவந்தபின் அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
பத்து பதினைந்து நிமிடங்களில் அரிசி நன்கு வெந்து தயராக இருக்கும். அடுப்பை அணைத்து மீதமிருக்கும் நீரினை வடித்து விட வேண்டும். அவ்வளவுதான் சூடான சத்தான தூயமல்லி அரிசி சாதம் தயார். நெய், பருப்பு, குழம்பு, ரசம், மோர் என அனைத்துடனும் உண்ண சுவையான சாதம்.
குக்கரில் பயன்படுத்த நினைப்பவர்கள் தூயமல்லி புழுங்கல் அரிசியை ஊறவைத்து ஒரு பங்கிற்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து மற்ற அரிசிகளை வேகவைப்பதுப் போல் வேகவைக்க வேண்டும். குக்கரை விட திறந்த முறையில் சமைப்பது பாரம்பரிய அரிசியின் சத்துக்களை சிதைக்காமல் அளிக்கும்.