உடலுக்கு தேவையான பல சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும் ஒரு சிறுவகை தானியமே சிறுதானியங்கள். தமிழகத்தின் பூர்விகமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்த தானியங்கள். நவீன மயமாக்கலும், பசுமைப் புரட்சியும் நமது பாரம்பரியத்தை சற்று மறக்கச் செய்திருந்தாலும், தொற்றாத நோய்களான நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய்கள், இரத்தக் கொழுப்பு போன்ற வாழ்வியல் நோய்களும், சத்தற்ற நவீன உணவுகளாலும் மீண்டும் நமது சிறுதானியங்களின் பயன்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்த சிறுதானியங்கள் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடிய தானியங்கள். Millets in other languages.
சிறுதானியங்களில் முழுதானியமாக கேழ்வரகு, கம்பு, சிறுசோளம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இந்த தானியங்களை நீரில் ஆறு மணி நேரம் முதல் பத்துமணி நேரம் வரை ஊறவைத்து முளைகட்டியோ அல்லது ஒன்றிரண்டாக உடைத்தோ பயன்படுத்தலாம். மேலும் இந்த தானியங்களை மாவாக்கி பலவகை உணவுகளை செய்யலாம்.
அதேப்போல் சிறுதானிய வகையில் உமியை நீக்கி சிறுதானிய அரிசியாக பயன்படுத்தப்படும் தானியங்களான வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனிவரகு போன்ற சிறுதானிய அரிசிகளை சாதாரணமாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் வெள்ளை அரிசிகளைப் போல் சமைத்து உண்ணலாம்.
வரகு அரிசியை எவ்வாறு சமைப்பது?
சிறுதானிய அரிசி வகையில் சற்று பெரிய தானியம் இந்த வரகு. இதனை மிகவும் எளிதாக சமைக்கலாம். பலவிதமான ஊட்டச்சத்துக்களையும், உயிர் சத்துக்களையும் கொண்ட தானியம். நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் தாது சத்துக்கள் என பல சத்துக்களை கொண்ட தானியம். சத்துக்கள் மட்டுமல்லாமல் பலவிதமான பயன்களையும் கொண்டது வரகு அரிசி. சாதம், இட்லி, தோசை, புட்டு என பல உணவுகளை வரகரிசி சொண்டு சமைத்து உண்ணலாம்.
வரகரிசியை வெள்ளை அரிசிக்கு மாற்றாக மதிய உணவில் சாதமாக சமைத்து குழம்பு, ரசம், மோர், கூட்டு சேர்த்தும் உண்ணலாம். இரண்டு நபர்கள் மதிய உணவில் வரகரிசி சோறு செய்து சாப்பிட ஒரு ஆழாக்கு (200 gm) வரகு அரிசி தேவைப்படும்.
முதலில் வரகரிசியை தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டு அதனை ஓரிருமுறை அல்லது தண்ணீரின் நிறம் வெள்ளையாகும் வரை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய வரகரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். சமையல் தொடங்கும் முன் அரிசியை ஊற வைத்துக் கொண்டு குழம்பு, பொரியல் போன்றவற்றை செய்ய வரகு அரிசி ஊறிவிடும். பின் அதனை சமைத்து சுட சுட பரிமாறி உண்ணலாம்..
வரகரிசி திறந்த பாத்திரத்தில் ஏழு முதல் பத்து நிமிடத்தில் வெந்துவிடும். குக்கரை விட வேகமாகவும் மிருதுவாகவும் பாத்திரத்தில் வேக வைக்கலாம். அதனால் ஒரு பாத்திரத்தில் ஐந்து பங்கு (ஒரு பங்கு வரகரிசிக்கு ஐந்து பங்கு) தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். தண்ணீர் சற்று சூடாகும் பொழுது ஊற வைத்திருக்கும் வரகரிசியை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஓரிரு நிமிடங்கள் கொதித்து வந்த பின் அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். இல்லையென்றால் அரிசி பொங்கி வெளியில் வந்துவிடும். சிறு தீயில் வைக்கக் கூடாது, சிறு தீயில் வைத்தால் கஞ்சி சுற்றிக்கொண்டு கஞ்சி போல் ஆகிவிடும், அதனால் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஏழு முதல் பத்து நிமிடங்களில் வரகரிசி நன்கு வெந்து விடும். கைகளால் சற்று அழுத்தி பார்த்து அடுப்பை அணைத்து விட்டு மீதமிருக்கும் நீரை ஒரு மூடி போட்டு உடனே வடித்து விட வேண்டும். அவ்வளவுதான் உதிரியான நல்ல சூடான வரகரிசி சோறு தயார். இதனுடன் நெய், குழம்பு, ரசம், மோர் என அனைத்தையும் ஊற்றி சாப்பிடலாம்.
குறிப்பு:
- வரகரிசியை வடிக்காமல் வேகவைக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்தது மண் பாத்திரங்கள். ஊறவைத்த வரகு அரிசியை இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து ஏழு முதல் பத்து நிமிடங்கள் சிறு தீயில் வேக வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அணைத்து பத்து நிமிடங்கள் மூடிவைத்து பின் பரிமாறலாம்.
- குக்கரில் வேகவைக்க வரகரிசியை ஊற வைத்து பின் இரண்டரை பங்கு தண்ணீரை குக்கரில் சேர்த்து, தண்ணீர் சூடானதும் வரகு அரிசியை சேர்த்து ஒரு கொதி வந்த பின் அடுப்பை சிறுதீயில் வேக வைக்க வேண்டும். குக்கரில் விசில் விட வேண்டாம். ஏழு நிமிடங்களில் அடுப்பை அணைத்து விட்டு பத்து நிமிடங்களில் குக்கரை திறந்து ஒரு கிளறு கிளறி மீண்டும் குக்கரை மூடிவிட்டு ஒரு ஐந்து நிமிடங்களில் எடுத்து பயன்படுத்தலாம்.