தேன்

தேன் – பயன்கள், வகைகள், மருத்துவகுணங்கள்…

“திருவாசகம் என்னும் தேன்”
“செந்தமிழ் நாடெனும் போதினிலே —

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”

உயர்ந்த பொருளாகக் கருதப்படும் ஒன்று … தேன். தேவகலாம், சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஏதேனும் பொருளினை உயர்வாகக்  காட்டவேண்டுமானால் அதற்கு தேன் தான் முதல் வரிசையில் இருப்பது. மாணிக்கவாசகர் அருள சாட்ஷாத் சிவபெருமானே வடிவமளித்த திருவாசகமும், செந்தமிழ், செந்தமிழ் நாடு போன்றவை அந்த வரிசையில் வருபவை. இவற்றைவிட உயர்வானது தேன் என்பதினை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 

தேன்- கெடாது

தேன்.. தானும் கெடாது, தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தன்மையினைக் கொண்டது. மனிதர்களுக்கு மருந்தாகவும், உணவாகவும் இருக்கிறது. தன்னைச் சேர்ந்தவரையும் கெடவிடாத தேனினை தொடர்ந்து உணவாகவும் மருந்தாகவும் உட்கொள்ள மனித உடலினைப் பேணிக்காக்கும். இயற்கை உணவான தேன் மனிதர்களை பல பல நோய்கள் மற்றும்  தொந்தரவுகளில் இருந்து காத்து உயர்ந்த நிலைக்கு உயர்த்த உதவுகிறது. 

தேன் என்றால் நாக்கில் வைத்தால் இனிக்கும் என்பதினை மட்டுமே அறியும் சமுதாயமாக இன்றைய சமுதாயம் உள்ளது. அதிலும் நவீன குழந்தைகள் பால் எங்கிருந்து வரும் என்றால் பாக்கெட்டிலிருந்து வரும்.. என்பதினைப்போல் தேன் எங்கிருந்து கிடைக்கும் என்றால் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு கடைகளில் இருந்து கிடைக்கும் என்னும் நிலையே உள்ளது.  

தேன் நமது இரத்தத்தின் மூலக்கூறினை ஒத்த அமைப்பினைக் கொண்டது. அதன் வேதியல் அமைப்புகள் மனிதனுக்கு மிகநெருக்கமாக அமையப்பெற்றுள்ளது. அதனால் உடலில்  ஜீரண சக்தி குறைந்தவர்கள் கூட இதனை உட்கொள்ளலாம். எந்த வித பிரத்தியேக ஜீரணமும் தேனினை மனிதன் உட்கொள்ள தேவைப்படாது. நேரடியாக மிதமிஞ்சிய இனிப்பு சுவையினை தேன் தந்தாலும், உடலுக்கு அது கசப்பு சுவையின் பலனைத் தருகிறது.

தேனீக்கள்

உலக உயிரினத்தின் பெரும் பகுதி பூச்சிக்களால் ஆனது. பூச்சி இனத்தை சார்ந்தது தேனீக்கள்.  இந்த தேனீக்களால் தயாரிக்கப்படும் ஒரு வித திரவமே தேன். ஒவ்வொருநாளும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மலர்களில் இருக்கும் இனிப்பு துளியினை ஒவ்வொரு தேனீக்களும் சேகரித்து அதனை தேனாக மாற்றி பின் தனது தேவைக்காகx சேமித்து வைக்கிறது, இதனையே மனிதர்கள் நமது ஆரோக்கிய தேவைக்காகவும், நமது உடல் உயிருக்கான ஊட்டமாகவும் எடுத்து உண்கிறோம்.  

தேனீக்கள் ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள தனது சுற்றுவட்டத்தில் இருக்கும் பழங்கள், மரம், செடி, கொடிகளில் இருக்கும் பூக்களின் இனிப்பு துளிகளை சேகரித்து தனது வயிற்றில் அவற்றை செலுத்தி சிலவேதியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. தேனீக்கள் வயிற்றில் இனிப்பு துளிகள் இவ்வாறான வேதியல் மாற்றங்களை நிகழ்த்த அதுவே தேனாகிறது.


இவ்வாறு காடுகள், மலைகள் என்று பல இடங்களில் அலைந்து திரிந்து தேனீக்கள் பல பல பூக்களைக் கொண்டு தேனை தயாரிக்கிறது. இவ்வாறு மனிதர்கள் தோற்றத்திற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தேனீக்கள் மனிதர்களுக்கு பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. லட்சங்களைக் கொட்டி பள்ளி கல்லூரியில் படிக்காத தேனீக்களின் தகவல் பரிமாற்றமும், கட்டுமான அமைப்பும் அதில் குறிப்பிடத்தக்கது. 

மேனேஜ்மென்ட் என்று சொல்லக்கூடிய மேலாண்மை, கணிதம், ஒற்றுமை, தலைமைக்கு கீழ்ப்படிதல், திட்டமிடல், அறிவுத்திறன், தற்காப்பு, உழைப்பு, நேர்த்தி, சுறுசுறுப்பு, வானிலை மாற்றங்கள், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றைக் கண்டு அறிவியல் உலகமே வியக்கிறது. 

தேன் சிறந்த மருந்து

சிறுசிறு தொந்தரவுகள் முதல் புற்றுநோய் வரை மனிதனுக்கு  தேன் சிறந்த மருந்தாக அமைகிறது. உடலுக்கு மட்டுமல்ல உள்ளத்திற்கும், மனதிற்கும் கூட தேனும் தேனீயும் உறுதுணையாய் உள்ளது. இதனைக் கண்டு உலகமும்,  ஆராய்ச்சியாளர்களும் வியக்கின்றனர். 

எல்லா வற்றிற்கும் மேல் தேனீக்கள் நமக்கு ஒரு அற்புதமான செய்தியை அளிக்கிறது. தேனீக்களின் கடுமையான உழைப்பில் கிடைக்கும் தேனினை மனிதர்கள் திருடினாலும், இனிப்பு துளியினை தேனாக மாற்றும் தொழில்நுட்பத்தை இன்றுவரை மனிதர்களால் திருடமுடியவில்லை. 

தேனீக்களில் இராணி தேனீ, வேலைக்கார தேனீ, ஆண் தேனீ என்ற மூன்று வகை தேனீக்களில் வேலைக்கார தேனீக்களே இனிப்பினை தேனாக மாற்றி கொண்டு வந்து சேமித்து வைக்கிறது. தேன் என்பதே தேனீக்களின் வயிற்றில் சென்று வருவது தான்.

பூச்சிக்கொல்லிகளால் இன்று அழிந்து வரும் இனமான தேனீக்கள், நமது உணவு உற்பத்திக்கு பெரும் துணையாக உள்ளது. தேனீக்கள் பூக்களின் மீது அமர்ந்த இனிப்பினை  சேகரிக்கும்பொழுது அதனுடன் மகரந்தத்தை செடிகள், கொடிகள், மரங்களிடம் பரிமாறுகிறது. மகரந்தம் விவசாயத்திற்கும், உணவு உற்பத்திக்கும் அவசியமாகிறது.  இந்த மகரந்தத்தைக் கொண்டு பூக்கள் அடுத்த நிலையான கனிகளாகவும், காய்களாகவும் செழிக்கிறது.

தேனீக்களில் மலைத்தேனீ, கொம்புத்தேனீ, கொசுத்தேனீ, இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என பல வகைகள் உள்ளது. இதில் மலைத்தேனீ என்பது மலைப் பகுதிகளில் தேனை சேகரிப்பது. இத்தாலியன் தேனீயும், இந்தியன் தேனீயும் இன்று பெருமளவில் தேனீ பேட்டிகள் மூலம் தேனை சேகரிக்கும் முறையாக உள்ளது. 

மலைத்தேன்

இதில் மலைத்தேன் அதிக மருத்துவகுணங்களை பெற்றது. மற்றவை அவை தேனெடுக்கும் மலர்கள், மரங்களில் மருத்துவகுணங்கள், அந்த நிலத்தின் தன்மை போன்றவற்றை சார்ந்தது. 

பலமலர் தேன்

பொதுவாக பலமலர் தேன் அதிகளவில் விற்பனையாகும் ஒன்று. பலமலர் தேன் என்பது தேனீக்கள் பல மலர்களையும், கனிகளையும் நுகர்ந்து இனிப்பினை சேகரித்து தேனாக கொள்வது. 

நாவல் தேன், வேம்புத்தேன்

அதேபோல் ஒருமலர் தேனும் உள்ளது. குறைந்தது சுற்றுவட்டாரத்தில் ஐந்து கிலோமீட்டர் வரை எதோ ஒரே ஒரு வகையான மலர்கள் இருக்க அது ஒருமலர் தேன். அதாவது பத்து கிலோமீட்டர் வரை வெறும் நாவல் மரங்களோ அல்லது வேப்ப மரங்களோ இருக்க அதிலுள்ள பூக்களை மட்டும் தேனீக்கள் சேகரிப்பது நாவல் தேன், வேம்புத்தேன்  என்றெல்லாம் வகைப்படும். இவற்றின் மருத்துவகுணங்கள், நிறம், அடர்த்தி, சுவை போன்றவை அந்த மரத்தின் பூக்களைக் கொண்டு மாறுபடும். 

முருங்கைத்தேன்

முருங்கைத்தேன் என்பது முருங்கை மரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்து எடுக்கப்படுவது. அதாவது இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் அறுபது சதவீதம் ஒரே மரங்கள் இருக்க அவற்றிலிருந்து தேனிபெட்டிக்களை வைத்து தேனினை எடுத்தால் அதற்கு அந்த குறிப்பிட்ட மலரின் தேன் என்று பெயர்.

தேன் வகைகள்

இந்த தேன்களுக்கு சுவை, நிறம், மணம், குணம் (குறிப்பாக மருத்துவகுணம்) என அனைத்தும் வேறுபட்டிருக்கும். இப்படி நாவல்தேன், தும்பைத்தேன், வேம்புத்தேன், குங்குமப்பூ தேன், துளசி தேன் என பல வித தேன்களும் உள்ளது.

உலகில் பலவகையான தேனீக்கள் உள்ளது. இடம், தட்பவெப்பம், மண், மலர்கள் சார்ந்து தேனீக்களின் உடலமைப்பு அமையும். இந்த அமைப்புகளுடன் அவை வாழும் இடத்தையும் பொறுத்து தேனீக்களின் பெயர்கள் அமையப்பெற்றுள்ளது. தேனீக்கள் மட்டுமல்லாது தேனீக்கள் சேகரிக்கும் தேனினை பக்குவப்படுத்தும் முறைகளுக்கும் அவற்றை சேமித்து வைக்கும் முறைகளுக்கும் ஏகப்பட்ட பெயர்கள் உள்ளது. உதாரணத்திற்கு  இஞ்சி தேன், நெல்லி தேன் என பல வித தேன்களும் உள்ளது.

தேன் சத்துக்கள்

சுத்தமான தேனில் 38 சதவிகிதம் குளுக்கோஸ் உள்ளது. தேன் தானும் கெடாது தன்னை சார்ந்ததையும் கெடுக்காது. தேனிற்கு காலாவதி கிடையாது என்றாலும் இந்த குளுக்கோஸின் காரணமாக ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் உறைந்து போவதும் அதன் நிறம் மாறுவதும் இயற்கையாக நிகழும். அதேபோல் அவை தேனினை எடுக்கும் மலர்களைக்கொண்டும் நிறங்களில் வித்தியாசங்கள் இருக்கும். (இன்று வெளிச்சந்தையில் கிடைக்கும் தேனின் இந்த மாற்றங்கள் இருக்காது காரணம் அவற்றில் சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.) 

எந்த தேன் சிறந்தது

ரப்பர் தோட்டத்து தேனிற்கும் நாவல் மர தேனிற்கும் பல வேறுபாடுகள் உள்ளது குறிப்பாக அதன் மருத்துவகுணத்தில். இவ்வாறு தேன் பெறப்பட்ட தோட்டம், அதனைப் பக்குவப்படுத்தப்பட்ட முறையைக்கொண்டும் தேனின் தரத்தை பிரிக்கலாம். 

எந்த கலப்படமும் இல்லாத தூய்மையான தேனில் பல பல உயிர்காக்கும் நன்மைகள் உள்ளது. பாலிஃபீனால், ஃப்லவனாய்டுகல், புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை நிறைந்துள்ளது. எல்லா இயற்கை உணவுகளுடனும் இயற்கையாக சேரும் தேன் பல நோய்களில் இருந்து நம்மை காக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது, வயிறு சம்மந்தமான பல தொந்தரவுகளை தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. சுரப்பிகளை சீராக்குகிறது, கல்லீரலை காக்கிறது, மலச்சிக்கல், உடல் சூட்டிற்கு நல்லது. சுவாச கோளாறுகளுக்கும், உடலில் ஏற்படும் புண்களுக்கும், சரும நோய்களுக்கும் நல்லது. இரத்த சோகையையும், உடல் பருமனையும் போக்குகிறது. 

எவ்வாறு தேனை உண்பது?

தேனினை வாயில் ஊற்றுவதோ அல்லது பருகுவது கூடாது. கைகளில் ஊற்றி நாவினால் நக்கியே உண்ண வேண்டும். இதுவே நேரடியாகவும், சீராகவும் இரத்தத்தில் கலக்க துணை புரிகிறது.

கலப்படமான தேன் எது?

பல இடங்களில் வணிகரீதியாக தேனில் பல கலப்படங்கள் செய்யப்படுகிறது. பலவகையான இனிப்பு சிரப்புகளையும், பாகுகளையும் (சர்க்கரை பாகு, வெல்லப் பாகு, சோளப்பாகு, டெக்ஸ்ட்ரோஸ் போன்றவை) இதனுடன் கலக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது பலவகையான செயற்கை காரணிகளையும், சுவையூட்டிகள், மணமூட்டிகள் போன்றவற்றையும் அதனுடன் கலக்கின்றன. இவை உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வீட்டிலேயே எளிமையாக நன்கு வழிகளில் உண்மையான தேனினை பரிசோதிக்க முடியும். கட்டைவிரல் சோதனை, நீர் சோதனை,  தீப்பெட்டி சோதனை மற்றும் வினிகர் சோதனை ஆகிய முறைகளில் தேனை பரிசோதிக்கலாம்.

கட்டைவிரல் சோதனை :

ஒரு துளி தேனினை கட்டைவிரலில் இட அது சிந்தினாலோ அல்லது பரவினாலோ உண்மையான தேன் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

நீர்சோதனை

ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீரை நிரப்பி அதில் தேனினை ஊற்றவும். ஊற்றிய தேன் தண்ணீரில் பரவினால் அது கலப்பட தேன், நேரடியாக அடியில் சேர்ந்தால் உண்மையான தேன்.  

தீப்பெட்டி சோதனை :

ஒரு தீக்குச்சியினை எடுத்து அதில் தேனினை தொட்டு பற்றவைத்தால் உடனே பற்றிக்கொள்ளும், நன்கு ஜுவாலை விட்டு எரியும். கலப்பட தேன் என்றால் எரியாது. காரணம் கட்டப்பட தேனில் இருக்கும் ஈரப்பதம்.

வினிகர் சோதனை :

ஒரு ஸ்பூன் தேனுடன் சிறிது நீர் கலந்து அதில் இரண்டு மூன்று சொட்டு வினிகரை சேர்க்க அந்த கலவை நுரைத்தால்  கலப்பட தேன் என்று தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான தேனினை உண்ண உடனடியாக உடலில் உள்ள நரம்பு மண்டலம் புத்துயிர் பெறுகிறது. உண்மையான தேன் உடலில் இருக்கும் புண், வடு போன்றவற்றை போக்குகிறது. தொடர்ந்து தேனினை உண்பதால் எளிதில் அதிலுள்ள கலப்படங்களை அறியலாம்.

அதுமட்டுமல்லாது இதற்கு பல ஆய்வக சோதனைகளும் உள்ளது. 
தேனினை மேலிருந்து கீழ் ஊற்ற அவை அடியில் அப்படியே நிற்கும், உடையாமல் ஒரே நேர்கோட்டில் வரும் என்பதெல்லாம் உண்மைதான் ஆனால் அதைவிட போலிதேனிலும் இவ்வாறான தன்மைகள் உள்ளவாறே இன்று தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால் எளிதில் அறிந்துகொள்ள முடியாது.

பல மரங்கள், பூக்கள் போன்றவற்றிலிருந்து தேனை எடுக்கும்  தேனீக்கள் நச்சு மலர்களில் இருந்து தேனினை எடுக்காது என்பது ஆச்சரியமான ஒன்று. அரளி போன்ற மலர்களில் தேனீக்கள்  தேனை எடுக்காது, அதனால் தேனின் இந்த நச்சுக்கள் இருக்குமோ அவை உடல் உபாதைகளை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் தேவையில்லை.

தேன் கெட்டுப்போகாத ஒரு பொருள். அதிக வெப்பமோ, குளிரோ இல்லாத இடத்தில் பாதுகாப்பாக வைக்க பல வருடங்களுக்கு தேனினை பாதுகாக்கலாம். அதேபோல் தேனினை பயன்படுத்தும் பொழுது ஈரம் இல்லாது சுத்தமான முறையில் எடுக்கவேண்டும். தேனினை ஒரு கரண்டியால் எடுத்து உள்ளங்கையில் ஊற்றி நக்கி மட்டுமே சாப்பிட வேண்டும். நேரடியாக வாயில் சாப்பிடக்கூடாது.

தேன் இன்றைய நிலை

சமீபத்தில் வெளிவந்த ஓர் ஆய்வு, உலகில் கிடைக்கும் நான்கில் மூன்று பங்கு தேனில் பூச்சிக்கொல்லிகள் உள்ளது என்று வெளியிட்டிருந்தது.  தேனில் எவ்வாறு பூச்சிக்கொல்லிகள் என்கிறீர்களா? தேனீக்கள் பூக்களில் இருந்து மகரந்தத்தையும், இனிப்புத்துளிகளையும் சேகரிக்கையில் அதனுடன் அந்த செடியில் தெளிக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லிகளையும் சேர்த்து எடுத்து வருகிறது. இன்று தான் உணவுக்காக பயிரிடும் அனைத்து பயிர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படுகிறதே. அதைத்தானே அன்றாடம் நம்மவர்கள் உண்டு பலப்பல உயிர்கொல்லி நோய்களுக்கு காரணமாகிறோம்.

பூச்சிக்கொல்லிகளைக் கொண்ட தேனினை உண்பதால் எந்த நோயும் உடலைவிட்டு போகப்போவதில்லை மாற்றாக மேலும் புதிய புதிய நோய்களும், உபாதைகளும் தான் வரப்போகிறது. கலப்படம் மட்டுமா தேனிற்கு ஒரு அச்சுறுத்தல்.. நிச்சயம் இல்லை அதைவிட பலமடங்கு பாதிப்பை இன்றைய தேன் அளிக்கிறது. இதற்கெல்லால் என்னதான் தீர்வு? எவ்வாறு தேனை பெற்று உண்பது என்கிறீர்களா?

சற்று விலை அதிகமானாலும் மலைவாழ் மக்களிடம் இருந்து கண்டிப்பாக உண்மையான தேனினை அதுவும் மருத்துவகுணங்கள் மிக்க மலைத்தேனினை பெறமுடியும். இதனை தொடர்ந்து உண்டுவர அதன் உண்மையான சுவையினையும் தன்மையினையும் அறிந்துகொள்ளமுடியும். இதன் மூலம் தேனை கண்டறியும் அனுபவத்தைப் பெற்று பின் மற்ற தேன்களைப் பெற்று சோதனை செய்து உண்ணவும். 

தேனீப்பெட்டிகள்

அல்லது நாமே நமக்கான தேனினைப் பெறுவதுதான். தேனீப்பெட்டிகள் மூலம் நமக்கு தேவையான தேனினை நமது வீட்டிலேயே வளர்த்து சுலபமாகப் பெறலாம். நகரங்களில் நிச்சயம் பூச்சிக்கொல்லிகள் அற்ற தேனினை எளிதில் பெறலாம். காரணம் நகரங்களை சுற்றி மரங்களும், பூக்களும் மற்ற செடிகள் தான் உள்ளது. இவற்றிற்கு யாரும் பூச்சிக்கொல்லிகளை அடிப்பதில்லை. தேனீக்கள் பூச்சிக்கொல்லிகள் அடிக்காத இவற்றிலிருந்து, பழங்களில் இருந்தும் இனிப்பு துளிகளை சேகரித்து தேனினை உருவாக்கிறது. அன்றாடம் தமது உழைப்பால் தேனினை உருவாக்கி தேனீக்கள் சேகரிக்க மாதம் ஒருமுறை அவற்றை நாம் எடுத்து நமது குடும்பத்தினருடன் சுவைத்து மகிழலாம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், வேளாண்மை அறிவியல் நிலையங்களிலும் குறைந்த விலையில் தேனீப்பெட்டிகளை பெறலாம். அவற்றை எறும்புகள், பல்லிகள் போன்றவை நுழையாத வண்ணம் வீட்டைச்சுற்றி நிழலில் வைக்க வேண்டும். வெயில்காலங்களில் வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை. மழைக்காலங்களில் அவற்றிற்கு வெல்லப்பாகு வைக்கவேண்டும். மற்றபடி மாதம் ஒருமுறை தேனினை நாமே நமது வீட்டில் எடுத்துக்கொள்ளலாம்.

(1 vote)

1 thought on “தேன் – பயன்கள், வகைகள், மருத்துவகுணங்கள்…

  1. Najma

    Super. Mam

Comments are closed.