வீட்டுத் தோட்டத்தின் அவசியம் / நன்மைகள்

ஆங்கிலத்தில் Home என்பதற்கும், House என்பதற்கும் உள்ளவேறுபாடுகளை கட்டாயம் நாமனைவரும் அறிந்திருக்க வேண்டும். வீடு என்பது வெறுமனே கட்டிடம் மட்டுமல்ல. ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும். ஆரோக்கியம் என்றாலே அதற்கு செடிகொடிகள் மரங்கள் போன்றவை அவசியம் தானே. நமது ஒரு தலைமுறையினர் முன் வரை வீடு என்பது மனிதர்கள், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் அதனுடன் அவசியம் வீட்டைச்சுற்றி வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான செடிகளும் காட்டாயம் இருந்தது. 

இன்றோ இந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. மண்தரைகளே இல்லாது அடுக்கிவைத்த வத்திப்பெட்டி போன்ற நவநாகரீக வீடுகள்.. செருப்பைக்கூட சுதந்திரமாக கழட்ட முடியாத நிலைக்கு வாசல்.. பின் ஆரோக்கியம் எங்கிருக்கும். வீட்டிற்கே மருந்துமாத்திரைகள் வரவழைக்கும் நிலைதான் ஏற்படும். 

ஆரோக்கியமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது. உணவிற்கு ஆதாரமே செடி கொடிகளும் மரங்களும் தான். இவைகள் இல்லாத வீடு உயிரோட்டமில்லாத வாழ்க்கைக்கு சமமே. 

பல வெளிநாடுகளில் சமையலறையே இல்லாத வீடுகள் தான் இன்று பிரபலம். யாரும் சமைப்பதில்லை, பொத்தானை தட்டினால் வீட்டிற்கே வரும் உணவு பின் எதற்கு வீணாக சமையலறை.. நமது நிலையும் அதுதான்.. அவையெல்லாம் வீடுகளாகுமா?

உணவே வீட்டிற்கு வரும்பொழுது செடிவளர்ப்பதும், அதற்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து சில மாதத்திற்குப் பின் கிடைக்கும் சொற்ப விஷயங்களுக்காக வீணாக நேரத்தையும், நிலத்தையும் விரையம் செய்யமுடியுமா? இதெல்லாம் இன்று சாத்தியமா? கைபேசியும் கையும் இணைந்தே இருக்கும் இந்த காலத்தில் மண்ணும் செடியும் நினைக்கவே வேடிக்கையாகவும், புதிதாகவும் தான் இருக்கும். 

ஆத்திர அவசரத்திற்கு நமக்கு தேவையான வீட்டுவைத்தியம் செய்வதற்கும் சிலவகை செடிகள் அவசியமல்லவா.. உதாரணத்திற்கு இருமல், சளி, காய்ச்சலுக்கு உடனடி தீர்வைத்தரும் துளசி, தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவைகளும், உலகவெப்பமயமாக்கல், தண்ணீர் பற்றாக்குறை என எந்த பூகம்பம் வந்தாலும் உடலை குளிர்விக்க வெந்தயக்கீரை, சோற்றுக்கற்றாழை போன்றவைகளும், இரத்தசோகையிலிருந்து நம்மைக்காக்க சிலவகை கீரைகளும் அன்றாடம் அவசியமாகிறதே.. இவைகூட இல்லாத வீடு எவ்வாறு வீட்டிற்கு சமமாகும். 

ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக்கொண்டிருக்கிறது.

சந்தையில் கிடைக்கும் உணவுகளும், அதன் மூலப்பொருட்களான காய்கள், கீரைகள், பழங்கள் மற்ற பொருட்கள் எல்லாமே இன்று அதிகப்படியான இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், மாறுபட்ட விதைகளால் உருவானவைகளாக வலம்வருகிறது. இவற்றை அன்றாடம் உட்கொள்வதால் மனதாலும், உடலாலும் ஆரோக்கியக்கேடு ஏற்படுகிறது. இவற்றலிருந்து நம்மையும் நமது குழந்தைகளையும் தற்காத்துக்கொள்ள அவசியமாகிறது வீட்டுத்தோட்டம்

இந்தியாவில் மழை பொய்த்தது, நிலம் நஞ்சானது, விவசாயிகள் தற்கொலை என பலகாரணங்களால் விவசாயம் பொய்க்க பல நாடுகளில் இருந்து நமக்கு உணவுப்பொருட்கள் இறக்குமதியாகிறது.. உதாரணத்திற்கு தக்காளி பல நாடுகளில் இருந்து இறக்குமதியானாலும் அவை எந்த வித பாதிப்பும் இல்லாமல் உடையாமல், அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் பளபளப்பாக நுகர்வோரை சென்றடைய வேண்டும் என்பதற்காக அதில் சேர்க்கப்படும் நச்சுக்கள் ஒன்றிரண்டல்ல.. பார்க்க தக்காளியை போல இருக்கும் ஆனால் தக்காளிக்கு இருக்கும் மருத்துவ குணங்கள் எதுவும் இல்லாமல் மாறாக பலவித நச்சுக்களை கொண்டிருக்கும் இந்த நவீன தக்காளி. இதனை உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் உட்பட பல நோய்கள் எளிதில் தாக்குகிறது. இவ்வாறு தக்காளிகள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள், கீரைகள், பயறுகள் என்ற பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.. இனி பளபளப்பாக இருக்கும் பழங்களையும் பளிச்சென்று இருக்கும் கீரைகளையும் பார்த்தாலே விழித்துக் கொள்ளவேண்டும். 

வீட்டுதோட்டத்தால் ஏற்படும் சில நன்மைகள், பயன்கள் 

  • உணவு தட்டுப்பாடையும், விலைவாசி உயர்வையும் எளிதில் எதிர்கொள்ளலாம்.
    குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். 
  • இயற்கையாகவும், புதிதாகவும் பெறலாம்.
  • சுவை, சத்து, மணம் இவை மூன்றும் ஒருங்கே கிடைக்கும்.
  • வீட்டு செலவை குறைக்கலாம். மருத்துவர் செலவை அகற்றலாம். 
  • ஆர்கானிக் காய்களுக்கும், கீரைகளுக்கும் அலையவேண்டாம். அதிக விலை என்று புலம்ப வேண்டாம்.
  • புதிதாக தேவைக்கேற்ப அறுவடை செய்து பயன்படுத்துவதால் அதிக உயிர்சத்துக்கள்  நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள் கிடைக்கும்.
  • நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்கள். (களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி, இரசாயன உரமற்றவை). அதுமட்டுமல்லாது சாக்கடை கீரைகள், விஷம் ஊடுருவிய காய்கறிகள், விதையில்லா பழங்களிலிருந்து நம்மை காக்கலாம்.
  • சரியான விதைகளை தேர்ந்தெடுத்து வீட்டுதோட்டத்தில் விதைக்க மரபியல் நோய்களும், வளர்சிதை சீர்கேடு போன்ற மரபணு சம்மந்தமான நோய்களிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காக்கலாம். 

  • காய்கள், கீரைகள், பழங்கள் போன்றவை வாடாமலும், வதங்காமலும் பளபளப்பாக இருக்க தெளிக்கும் விஷங்கள், பதப்படுத்திகளில் இருந்து நம்மை காக்கலாம். 
  • வீட்டுக்கழிவுகளை உரமாகவும், மறுசுழற்சி முறையில் தண்ணீரையும் பயனுள்ளதாக்கலாம்.
  • வீட்டிலேயே ரூப் டாப் கார்டன் ரெடி செய்யலாம். குளுமையான  இயற்கை பசுமைகுடிலை ஒரு கம்பியைக் கொண்டு அங்கங்கே குறுக்காகவும் நேராகவும் கட்டி அதில் கொடிவகை காய்களை படரவிட இரவு உணவையும், அதிகாலை யோகா, தியானம், உடற்பயிற்சியையும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் உருவாக்கலாம்.
  • சுத்தமான குளுமையான கற்று, மற்றும் ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை நகரத்திலும் சுவாசிக்கலாம். 
  • பல நோய்களுக்கு காரணமாகும் செயற்கை குளுகுளு அறையிலிருந்து இயற்கை குளுமையை சுவாசிக்கலாம்.
  • மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவையே பல தொந்தரவுகளுக்கு, நோய்களுக்கும் காரணமாகிறது. இவற்றிற்கு நமது தோட்டத்தில் மலரும் சிறு பூக்களே முற்றுப்புள்ளி வைக்கும்.
    உடல் அழகை மெருகேற்றவும் வீட்டுத் தோட்டம் உதவும்.
    என்றும் இளமையாக இருக்க உதவும். புத்தி கூர்மையை அதிகரிக்கும்.
  • தேவைக்கேற்ப பசுமைக் காய்களை பறித்து பயன்படுத்தலாம்.
    மூலிகை செடிகளை வளர்ப்பதால் தேவைக்கேற்ப எங்கும் அலையாமல் பயன்படுத்தலாம்.

  • வீட்டில் வெயிலால் இறங்கும் சூட்டினை ஆறு முதல் எட்டு டிகிரி வரை குறைக்கும்,
  • தினமும் பசுமையான கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, துளசி, கற்றாழை, கீரைகள் போன்றவற்றை பறித்து நேரடியாகவும் உண்ணலாம்.
  • உலக வெப்பமயமாக்கலை தடுக்க நம்மால் இயன்ற முயற்சியும் இந்த வீட்டுத் தோட்டமாக அமையும். சுற்றுசூழலையும் பாதுகாக்கலாம். 
  •  lifestyle diseases எனப்படும் உடல்பருமன், இரத்தக்கொதிப்பு, நீரழிவு நோய், மூட்டு வலி, இருதய நோய், பக்கவாதம், சிலவகை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மை காக்கலாம். 
    தூக்கமின்மைக்கு சிறந்த நிவாரணம். மனதிற்கு சாந்தத்தையும், அமைதியையும் அளிக்கும்.
  • ஒவ்வொரு நாளும் தனியாக உடற்பயிற்சி என்று கூட செய்யாமல் தோட்ட வேலைகளை பத்து நிமிடம் பார்த்தால் உடலும் மனதும் அமைதியாகும். இதுவே சிறந்த உடற்பயிற்சியாகவும் அமையும்.
    குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த வாழ்வியல் பாடத்தையும், அனைத்து சூழலையும் சமாளிக்கும் கலையை எளிதில் கற்றுக்கொடுக்கலாம். குழந்தைகள் மண்ணை தொடுவதால் உடலின் நோய்எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.

  • மீதமிருக்கும் காய்களை மற்றவர்களுக்கும் கொடுத்ததும் மகிழலாம். விற்பனை செய்தும் பணமீட்டலாம். அதிலும் ஆர்கானிக் உணவுக்கு ஒரு தனி மௌசே இன்று உள்ளது. உங்கள் வீட்டிற்கே வந்து வாங்குவார்கள்.
  • குழந்தைகளுக்கு தோட்டம் அமைப்பதனையும், அதன் முக்கியத்துவத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது அவசியம் மட்டுமல்ல அது நமது கடமையுமாகும். 
  • புவி வெப்பமயம், மழையின்மை, விவசாயம் பொய்க்க இருக்கும் காலத்திலும் உணவின் தேவை அதிகம்.. அதனை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் வருங்காலத்தினருக்கு ஏற்றவகையில் இயற்கை தோட்டத்தினை அமைக்கும் கலையை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • இதுமட்டுமல்ல, மேலும் பலப்பல நன்மைகளை உடலாலும் மனதாலும் நமது சின்னங்சிறு வீட்டுதோட்டத்தின் மூலம் பெறலாம். இருக்கும் இடங்களிலும் செலவின்றி வீட்டிலிருக்கும் பழைய பொருட்களையும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழட்சி செய்யும் வகையிலும் எளிதாக அடுத்தடுத்த இதழ்களில் தோட்டத்தை அமைக்கும் முறை தொடங்கி செடிகளை வளர்ப்பது, பராமரிப்பது மட்டுமல்லாமல் தரமான, செழிப்பான காய்களையும் கீரைகளை பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் எவ்வாறு பெறுவது வரை அனைத்தையும் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அதனோடு இயற்கை பூச்சிவிரட்டி, செடிவளர்ச்சிக்கு தேவையான பஞ்சகவ்யா, மண்புழு உரம் ஆகியவற்றை தயாரிக்கும் முறைகளையும் தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.
(2 votes)

Do check our New English Recipe Website

-->