வேலைக்கு செல்லும் பெண்களுக்கான செடிகள்

வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் இருக்க வேண்டிய செடிகள்

இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீடுகளில் அனைத்திற்கும் இடமிருந்தது. ஆரோக்கியம் ஒவ்வொருவரிடமும் இயற்கையான ஒன்றாக இருந்தது. அன்றைய வீடுகள் தங்களுக்கு தேவையான இடத்தில் கட்டிடத்தை அமைப்பதுடன் தங்களுக்கு தேவையான மரங்கள், செடிகள், மூலிகைகள் என அனைத்திற்கும் சேர்த்தே இடத்தை திட்டமிட்டு அமைத்தனர்.

இன்றையவர்களோ வீட்டினை எவ்வளவு பெரியதாக கட்டமுடியுமா அவ்வளவு பெரியதாகவும், ஒரு சதுரடியைக்கூட வீணாக்காமல் என்ற எண்ணத்தோடு சிமிண்டைக்கொண்டு சுற்றி பூசியும் விடுகின்றனர். மழைநீரும் இதனால் நிலத்தில் இறங்குவதில்லை, சுற்றி எந்த இடமும் மண்தரையுடனும் இல்லை. இன்னும் பலர் அப்பாடா சுற்றி கொஞ்சம் கூட மண் தரை இல்லை.. பூச்சி, புழு, கொசு என எதுவும் நம்மை அண்டாது என்ற பெருமிதத்தில் இருக்க, ஒன்றை மறக்கக் கூடாது, மழை வந்தால் மழைநீர் கூட மண்ணில் இறங்காமல் அங்கங்கே தேங்கிநிற்க விஷத்தன்மையுள்ள ஊர்வனவும், உயிர்கொல்லிகளாக கொசுக்களும் அதில் எளிதில் உருவாகி பெருக்கமைடைகிறது.

வீட்டைச்சுற்றி இடம் தேவையா? என்று பலர் எண்ணுகின்றனர். இருந்தால் அவற்றை சுத்தம் செய்யவும், அவற்றைப் பராமரிக்கவும் போதுமான நேரம் இல்லை என்றும் பலர் நினைக்கின்றனர்.

அதிலும் வேலைக்கு செல்லும் பெண்கள் இதெல்லாம் சாத்தியமா? கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று அலறுகின்றனர்.. வீட்டைச்சுற்றி தோட்டமும், மாடிகளில் தோட்டமும் அவசியமா? ஒவ்வொருநாளும் விடிவதும், இருட்டுவதும் தான் கண்ணுக்கு தெரிகிறது. காலை எழுந்தோமோ இல்லையோ குழந்தைகள், கணவன் என ஒவ்வொருவருக்கும் தேவையானவற்றை செய்து முடிக்க காலை உணவைக்கூட உண்ண நேரமில்லாமல் தாங்களும் வேலைக்கு செல்வது வாடிக்கையாகவே மாறிய நிலையில் வீட்டுத்தோட்டம் அவசியமா?

எது இருக்கிறதோ இல்லையோ வேலைக்கு செல்லும் பெண்மணிகள் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய ஒன்று வீட்டுதோட்டம். பெரிய தோட்டமாக இல்லையானாலும் சிறிய அளவில் சில செடிகள் அவசியம். அன்றாடம் நேரமில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தேவையான சில மூலிகைகளை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டும்.

சாதாரண தலைவலி தொடங்கி மூட்டுவலி வரை இருக்கும் அனைத்து தொந்தரவுகளுக்கும் வீட்டிலேயே நிவாரணத்தை ஏற்படுத்துவது சிறந்தது. தொட்டதுக்கெல்லாம் மருந்து மாத்திரை என்றால் உடல் சோர்வடைவது மட்டுமல்ல விரைவில் உறுப்பு கோளாறு, உறுப்பை அகற்றுவது என்றெல்லாம் நம்மையே நாம் துன்புறுத்தும் நிலை ஏற்படும். இன்று நாற்பது, நாற்பந்தைந்து வயதைக் கடந்த பெண்மணிகள் பலர் பித்தப்பை, கருப்பை இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது, இதனால் ஐம்பதைத் தாண்டும்பொழுது பலப்பல நோய்கள் அவர்களைத் தாக்குகிறது.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழைப்பதே குடும்பத்தையும், குழந்தைகளையும் நல்ல நிலைக்கு உயர்த்தத்தான், அப்படி இருக்க அயராது பாடுபடும் பெண்களுக்கு தேவையான சிலசெடிகளை எங்கும் பெறமுடியாது, அவை அவரவர் வீடுகளிலேயே இருப்பது அவசியம்.

பெரிய பராமரிப்பு என்று எதுவும் இல்லாத கற்றாழையும், துளசியும் கட்டாயம் வேலைக்கு போகும் பெண்களின் வீடுகளில் இருக்கவேண்டிய செடிகள். இதைத்தவிர முடக்கறுத்தான், திருநீற்றுப்பச்சிலை, தூதுவளை, கற்பூரவல்லி, வெற்றிலை போன்றவை உடல் நலத்துக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை.

வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கு ஏற்றவாரும், தேவையானவாரும் இந்த செடிகள், மூலிகளைகளை வீட்டுத்தோட்டத்தின் மூலம் வளர்ப்பதால் நேரம் செலவில்லாமல் வீட்டுத்தோட்டமும் சாத்தியமாகும், ஆரோக்கியமும், அமைதியும், மனநிம்மதியும் கிடைக்கும்.

(2 votes)