அடி வயிற்றுவலி, மாதவிடாய் தொந்தரவு, மூலம், மலச்சிக்கல், இடுப்பு வலி, உடல் உஷ்ணம், குடல் புண் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த ஒரு தீர்வு இடுப்புக் குளியல்.
இடுப்பு வலி என்பது பெரும்பாலும் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய ஒரு தொந்தரவு. 40 வயதை கடந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இடுப்பு வலியால் அதிகம் அவதிப்படுவதை பார்க்க முடியும்.
அதிக தூரம் வாகனத்தில் பயணிப்பவர்கள், வீட்டில் வேலை சுமை அதிகமாக இருக்கக்கூடிய பெண்களுக்கும், உடல் உஷ்ணம், அடிவயிற்று வலி, வயிற்றுவலி, குடல்புண் போன்ற பிரச்சனைகளுக்கு எளிதான ஒரு தீர்வு என்றால் அது இந்த இடுப்புக் குளியல் தான்.
இவ்வாறு இடுப்புக் குளியல் செய்வதால் இடுப்பில் ரத்த ஓட்டம் சீராகும். அதேபோல் இடுப்பில் வரக்கூடிய வலி நீங்கும்.
இடுப்புக் குளியல் எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.
மேற்கூறிய தொந்தரவுகள் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் இடுப்புக் குளியல் செய்ய வேண்டும். நல்ல ஆழமான, அகலமான பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கொண்டு மெல்லிய உள்ளாடை அணிந்து கொண்டு இடுப்பு, வயிறு, தொடைப் பகுதிகள் மட்டும் தண்ணீரில் மூழ்கியிருக்கும் படி சுமார் இருபது நிமிடம் தண்ணீரில் படத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்.
உடலின் மற்ற பகுதிகள் தண்ணீரில் இருக்கக் கூடாது. இதேபோல் வெந்நீர் ஊற்றி இடுப்பு குளியல் செய்ய வேண்டும். ஒரு நாள் வெந்நீர் ஒருநாள் குளிர் நீரும் என மாற்றி மாற்றி இடுப்புக் குளியல் செய்யலாம்.
இதனை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன் செய்தல் வேண்டும். இடுப்பு பகுதியில் வரக்கூடிய தொந்தரவுகள், வலிகள், அடிவயிற்று வலி, கருப்பை சார்ந்த தொந்தரவுகள், மாதவிடாயில் வளரக்கூடிய கோளாறுகள், உடல் உஷ்ணம் போன்ற பல பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை இந்த இடுப்புக் குளியல் அளிக்கும்.