Hibiscus Rosa sinensis; Shoe Flower; செம்பருத்தி
தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் பூக்களில் மிக முக்கியமான பூ செம்பரத்தை என்னும் செம்பருத்தி பூ செடி. செம்பரத்தை, சப்பாத்து என்றும் இதற்கு பெயர்களுண்டு. பொதுவாக செம்பருத்தி என்பது ஐந்து இதழ் கொண்ட நாட்டு செம்பருத்தி வகையைப் பற்றிதான். இதற்கு தான் பல மருத்துவ குணங்கள் உள்ளது. வீடுகளில் மிக சுலபமாக செம்பருத்தி செடியை வளர்க்க முடியும். இது ஒரு பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது செடி.
இந்த செம்பருத்தி செடியின் தனித்தன்மையே இதன் குழகுழப்பு, வழுவழுப்புதான். செம்பருத்தியின் இலை, தண்டு, பூ என அனைத்திலுமே வழுவழுப்பான திரவம் உள்ளது. இதன் இலைகள் தனி இலைகளாகவும் பற்கள் போன்ற விளிம்புகளும், கூர்மையான துனியும் உடையதாக இருக்கும். இதன் நாட்டு ரக மருத்துவ குணம் நிறைந்த பூ சிவப்பு நிறத்திலிருக்கும். இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவபயனுடையவை. பெண்களுக்கும் ஆண்களுக்கும் சிறந்த ஒரு மூலிகை இந்த செம்பருத்தி. இருதயத்தை பாதுகாக்கவும், ஆண்மைப் பெருக்கியாகவும், ருதுவுண்டாக்கியாகவும் இருக்கும் இந்த செம்பருத்தி உடல் வெப்பத்தை நீக்கும் ஆற்றல் கொண்டதாகவும் மலச்சிக்கல், உடல் பருமன், நீர் எரிச்சல், காய்ச்சல், பெரும்பாடு, மேகவெள்ளை, இருமல் போன்றவற்றிற்கும் சிறந்த பலனை அளிக்கும்.
செம்பருத்தி தேநீர்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொந்தரவுகள், வெள்ளைப்படுதல், நீர்க்கட்டி, அதிக உதிரப்போக்கு போன்ற தொந்தரவுகளுக்கு செம்பருத்தி தேநீர் சிறந்தது. தொடர்ந்து பருக சருமம் பளபளக்கும்.
செம்பருத்தி பால்
சிவப்பு நிற ஐந்து இதழ் செம்பருத்திப் பூவை எடுத்து அதனிளிருக்கும் மகரந்தக் காம்புகளை நீக்கிவிட்டு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரை சேர்த்து கலந்து காலை, மாலை என இரண்டு வேலை பருகி வர வெள்ளை, வெட்டை, இருதய பலவீனம், மார்பு வலி போன்ற தொந்தரவுகள் தீரும். ஆண்மை பெருகும். காபி, டீ, புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
செம்பருத்தி தைலம்
செம்பரத்தைப் பூவை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தைலமாகத் தயாரித்து வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்துவர கண் எரிச்சல் நீங்கும், முடி உதிர்வு நீங்கும், முடி கருமையுடன் செழித்து வளரும்.
இருதய பலவீனம் நீங்க
செம்பரத்தைப் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு அதனுடன் சம அளவு மருதம்பட்டைத் தூள் கலந்து தினமும் இரண்டு வேளை பாலுடன் பருகி வர உட்சூடு, இருதய பலவீனம் நீங்கும்.
இருமலுக்கு
செம்பரத்தை வேருடன் ஆடாதொடை இலையைச் சேர்த்து குடிநீரிட்டு தினமும் அருந்திவர தொடர் இருமல், வறட்டு இருமல் மறையும்.
ஈரல் வீக்கம், உட்சூடு மறைய
இந்த செம்பருத்தி பூவைக்கொண்டு சிரப் தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் பருக ஈரல் வீக்கம், உள்ளுறுப்புகளில் உள்ள புண், உட்சூடு, நீர் எரிச்சல், பெரும்பாடு, இருமல், ஜூரம் நீங்கும்.