“காபி, டீ இல்லாட்டா முடியாது” என்று என்னமோ பைத்தியம் பிடித்த மாதிரி, எந்த வேலையுமே ஓடாமல், இந்த நினைப்பிலேயே தலைவலி, அஜீரணம் என்றெல்லாம் இந்த மேலைநாட்டு பானங்கள் உண்டாக்குகின்றன. ஏதோ ஒரு அளவு என்று நிறுத்திக் கொள்ள முடியாமல் எப்போது பார்த்தாலும் சூடாக காபி குடித்தால் தான் எனக்கு வேலையே ஓடும் என்ற நிலையில் இன்று பலர் இந்த டீ, காபி குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி (Addict) இருக்கின்றனர்.
இந்த டீ, காபி என்ற லாஹிரி வஸ்துக்கள் புத்தியைப் பிடித்து வசப்படுத்தி வைத்துக் கொள்கிற சக்தி பெற்றிருக்கிறது. குடிப் பழக்கம் உள்ளவன், புகையிலை மெல்லுகிறவன், அதையே ‘ஊதுகிறவன்’ எல்லாரும் இப்படித்தான். அபின், கஞ்சா முதலான லாஹிரி வஸ்துக்கள் எல்லாம் இப்படி மனிதர்களை அதன் நினைப்பிலேயே வைக்கிறது.
புத்தியைக் கெடுப்பதில் கள்ளு கஞ்சா அளவுக்கு போகாவிட்டாலும், ‘அடிக்ட்’-ஆக அடிமைப்படுத்துகிற சக்தி காபி, டீக்கும் உள்ளது. போதையை உண்டுபண்ணுவது – intoxicant – என்று இவற்றைச் சொல்ல முடியாவிட்டாலும், நரம்பை ஊக்குவிக்கிறவை – stimulant – என்பதால் இவற்றில் இருந்து விடுபடுவது அவசியமானது.
‘ஸ்டிமுலேட்’பண்ணுவது அப்போதைக்கு புத்துணர்வையும், சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் கொடுத்தாலும், முடிவிலே இப்படி செயற்கையாகத் தூண்டப்பட்ட நரம்பு மண்டலம் நாளடைவில் பலவீனம் அடைகிறது.
காபியில் இருக்கும் ‘கஃபைன்’ ஒரு நச்சு, நம் உடலை மேலும் பாதிப்படையச் செய்கிறது. இது உடலில் சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும். காஃபின், தேநீரில் குறைவாகவும் காபியில் அதிகமாகவும் இருக்கிறது. இது உடலில் இருக்கும் ஊட்டச் சத்துக்களை அழித்துவிடும் தன்மை கொண்டது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி, தேநீரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
டீ, காபி போன்றவற்றை அளவுக்கு அதிகமாக அடிக்கடிக் குடிப்பவர்களுக்கு செரிமான மண்டலம் பாதிக்கப்படும். அஜீரணக் கோளாறு, வாயு, நரம்பு மண்டலப் பிரச்சனை ஏற்படும். மூளை மந்தமாகும். பசியே எடுக்காது. தாமதமாக சாப்பிட நேரிடும்.
காஃபின் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல் டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லி தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும் போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்சனை வரலாம்.
உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம். அதிலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கண்டிப்பாக டீ, காபி அருந்தக் கூடாது.
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டீ எல்லாமே டஸ்ட் டீ தான். முதல் தரம், இரண்டாம் தரம் என நான்கு வகைகளில் தேயிலை கிடைக்கும். மூன்றாம் தரமான டஸ்ட் தேயிலை மட்டுமே, நம் வீடுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் டீ. நான்காம் தரத் தேயிலைத் தூள்கள் தெருக்களில் உள்ள தேநீர் கடைகளுக்கு செல்கிறது. டஸ்ட் தேயிலையில் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், கலப்படங்கள் சேர்க்க வாய்ப்புகள் அதிகம். தரமான டீயை குடித்தால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் குறைவு.
தரம் குறைந்த ரசாயனம் உள்ள டீ டஸ்ட்டையும், காபியையும் குடிப்பதை தவிர்த்து விட்டு உடலுக்கு நன்மை பயக்கும் சூடான சுக்கு மல்லி கருப்பட்டி காபி, மூலிகை தேநீர், செம்பருத்தி டீ போன்றவற்றை குடிப்பது சிறந்தது. இவற்றை குடிப்பதினால் உடல் ஆரோக்கியமாகவும், நல்ல எதிர்ப்பு சக்தியுடனும் இருக்கும்.
சுக்கைத் தட்டிப் போட்டு அதனுடன் மல்லி விதைகள் பொடித்து நீருடன் சேர்த்து கஷாயம் போல் கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்த மல்லி காபி என்று பரவலாக கூறப்படுவது. பழக்கத்திற்கும், வழக்கத்திற்கும், விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானதும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பதும் இந்த சுக்கு காபி.
இதனை பொடித்து வைத்துக்கொண்டு தேவையானபோது ருசிக்கேற்றாற்போல் தயாரித்து கொள்ளலாம். பொடிக்க தேவையானவை. சுக்கு, கொத்தமல்லி, மிளகு மூன்றும் முக்கிய பொருட்கள். அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருட்கள் என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.
அதாவது கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏலக்காய், ஜாதிக்காய், சீரகம், குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் என எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம். இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.
ஒரு டம்ளர் தயாரிக்க
ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பனங் கற்கண்டு/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி சூடாகவும் அருந்தலாம் அல்லது மூடி வைத்து இளஞ்சூடாகவும் வடி கட்டியும் சாப்பிடலாம். சிறிது நாட்டுப் பசும் பால் அல்லது தேங்காய் பால் கலந்தும் சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம்.
டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. செரிமானத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும். இவை அற்புத முதலுதவி மருந்து. நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயு தொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.
மேலும் மூலிகை தேநீர்/குடிநீர் தயாரிக்க இந்த பக்கத்தை பார்க்கவும் – மூலிகை தேநீர்/குடிநீர்