நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான சில வழிகள்

இன்றைய காலமும் நேரமும் நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட பல நல்ல பழக்கவழக்கங்களை நம்மிடமிருந்து மறக்கச்செய்துவிட்டது. அவசர வாழ்க்கை, மனஉளைச்சலை அதிகரிக்கும் வேலை, கிடைக்கும் சத்தற்ற உணவு இப்படி சுழலும் நமக்கு முப்பதுவயதைத் தாண்டும் போதே பலப்பல உடல் உபாதைகள், தொந்தரவுகள் அதிகரித்துவருகிறது.. 

இதில் இன்னும் வேதனையை அளிக்கக்கூடியது இன்றைய பிள்ளைப்பருவத்திலிருக்கும் குழந்தைகளும் பலவகையான குணப்படுத்தமுடியாத உடல் உபாதைகளுக்கு ஆளாவது.
பொதுவாக நவீன மருத்துவம் இதற்கெல்லாம் (இன்றைய நவீன நோய்களுக்கெல்லாம்) காரணம் என்ன கூறுகிறது என்றால் இவை அனைத்தும் நவீன வாழ்வியல் நோய்கள். அதாவது தொற்றுகளாலும், நோய்கிருமிகளாலும் அல்லாது இன்றைய வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றத்தால் உண்டான நோய்கள் என்கிறது. அதனால் இவற்றை குணப்படுத்த முடியாது. அதாவது இவை நோய்கள் அல்ல ஒருவித பிணிகள். இவற்றை கட்டுப்படுத்தலாமே தவிர குணமாக்கமுடியாது. உண்மையிலேயே தூங்குபவனைத்தான் எழுப்பமுடியும்.. நோயைத்தான் குணப்படுத்த முடியும்.. நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாறுதல்களின் பின்விளைவினால் ஏற்பட்ட மாற்றத்தை எவ்வாறு குணப்படுத்துவது. அவற்றை சரிசெய்தால் தானாகவே அவை சரியாகிவிடும். இல்லையானால் இதுவே  அடுத்ததலைமுறையினருக்கு நோயாக உருமாறும். 

நவீன வாழ்வியல் முறைகளில் ஏற்படும் நோய்களின் பட்டியல் என்ன தெரியுமா? பக்கவாதம், இதயநோய் ஆஸ்துமா, உடல் பருமன், மன உளைச்சல், முடக்குவாதம், சர்க்கரை நோய் போன்றவை.

சரி, இந்த நவீன வாழ்வியல் முறைகளில் ஏற்படும் நோய்களின் பட்டியல் என்ன தெரியுமா? பக்கவாதம், இதயநோய் ஆஸ்துமா, உடல் பருமன், மன உளைச்சல், முடக்குவாதம், சர்க்கரை நோய் போன்றவை. இன்று பலரின் மத்தியில் எதார்த்தமாக இருக்கக்கூடிய நோய்கள் இவை. அனைத்துமே வாழ்வியல் முறைகளில் ஏற்படும் நோய்கள் தான். இவற்றிற்கு மருத்துவம் கிடையாது. நமது வாழ்வியல் முறைகளில் மாற்றம் செய்தாலே போதும் இவற்றிலிருந்து வெளிவரலாம் என்பது தான் உண்மையில் ஆங்கில மருத்துவம் கூறுவது.

அதுவே ஆரம்பத்தில் இவற்றை கவனிக்காமல் மேலோட்டமாக மருத்துவம் செய்வதால் பல விதங்களில் தீராத நோயாகவும், உயிர்கொல்லிநோயாகவும் உருமாறும் ஆபத்து உள்ளது என்கிறது. மேலும் இதனால் நமது அடுத்த தலைமுறையினருக்கு வீரியமான நோயாகவும் உருமாற அதிக வாய்ப்புள்ளது என்கிறது. 

மன உளைச்சல்

அதுயென்ன வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்தால் உருவான நோய்கள் என்றால், உதாரணத்திற்கு மன உளைச்சலை முதலில் எடுத்துக்கொள்வோம். இன்று நிம்மதியான உறக்கம் இல்லை, நிம்மதியான வேலை இல்லை, நிம்மதியான பயணம் இல்லை சொல்லப்போனால் ஐந்து நிமிடம் மனதை அமைதிப்படுத்தி உட்காரக் கூட முடியாத ஒரு சூழல். பரபரப்பு எல்லா நேரமும் பரபரப்பு… குளிக்கக்கூட நேரமில்லாத அளவு அவசரம், சிந்தனை, தாழ்வு மனப்பான்மை, போட்டி, விரக்தி, தோல்வி, வெற்றிபெறாத எதிர்பார்ப்பு… இவையே மன உளைச்சலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

சர்க்கரை நோய்

அடுத்ததாக சர்க்கரை நோய் சீரான முறையில், தரமான, அளவான உணவை உட்கொள்ளாமல் நவீன காலத்து சக்கை உணவுகளை (நார்சத்தில்லாத அதிக மாவுசத்து நிறைந்த உணவுகள்) அதிகமாக உட்கொள்வதால் வருகிறது சர்க்கரை நோய்.

உடல் பருமன்

அடுத்தது திரும்பும் இடமெல்லாம் வருகிறது உடல் பருமன்.. சிறுவயதில் குழந்தைகள் பருமனாக இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளை கேலிசெய்வதை பார்த்திருப்போம்.. இன்றைய சூழல் கேலிசெய்யவேண்டுமென்றால் யார் யாரை கேலிசெய்வது.. கண்ணில் படுவதெல்லாம் உடல் பருமனை குறைக்க மருத்துவமனை. கண் பார்ப்பதற்கு முன் வாய் தன்வேலையை தொடங்கி உணவு வயிற்றுக்குள் சென்றுவிடுகிறது. கவர்ச்சிகரமான உணவுகள்.. சத்துக்கள் எங்கே? என்று தேடினாலும் கிடைக்காத அளவிற்கு செயற்கை சுவைக்காகவும் செயற்கை மணமூட்டிகள் நிறைந்த உணவுகளால் வரக்கூடியது இந்த உடல் பருமன். ஆக இவை அனைத்துமே நோய் கிடையாது நம்முடைய பழக்க வழக்கங்களால் வரக்கூடிய உடல் தொந்தரவுகள். இந்த பழக்கவழக்கங்களை சீராக்கினால் போதும் பல வகையான எதிர்கால உயிர் கொல்லி நோய்களில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

பழக்கவழக்கங்கள்

பழக்கவழக்கங்கள் என்பது நடைமுறை பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகும். அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுவது தொடங்கி இரவு சூரியன் அஸ்தமனமாகி இரண்டு மூன்று மணி நேரங்களுக்குள் உறங்கச் செல்வது வரை அனைத்துமே பழக்கவழக்கங்களுக்குள் தான் வரும். நோயிலிருந்து விடுபட நாம் மாற்றிக்கொள்ளவேண்டிய பழக்கவழக்கங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். அவற்றை சரி செய்தாலே போதும் கட்டாயம் நோயின்றி இளமையாக பல காலம் வாழலாம்.

  • அதிகாலை எழுவதால் ஏற்படும் நன்மைகள் – முதலில் அதிகாலை எழுவது நம் முன்னோர்கள் கடைபிடித்த மிக சிறந்த பழக்கம். அதாவது சூரிய உதயத்திற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் எழுவது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்வை அளிக்கும். காரணம் உலகமே புத்துணர்வு அடையும் நேரம் அது. ஒவ்வொரு நாளும் உலகமே புத்துணர்வு அடைய கூடிய நேரம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி ஆகும். இந்த நேரத்தில் நாமும் கண்விழித்து இருந்தால் உலகம் அகண்ட வெளியில் இருக்கக்கூடிய காஸ்மிக் எனர்ஜி என சொல்லக்கூடிய பிரபஞ்ச சக்தி, பேராற்றல் நம்மை அடையும். இந்த ஆற்றலால் அசாதாரண செயல்கள் கூட சாதாரணமாக  சாத்தியமாகும். ஆக குறைந்தது சூரிய உதயத்திற்கு குறைந்தது ஒருமணிநேரத்திற்கு முன் எழுவது சிறந்தது. இந்த பண்டைய பழக்கத்தை மீண்டும் மீட்டெடுத்து நடைமுறைப்படுத்தினால் சென்ற ஆரோக்கியம் நம்மை விரைவாக வந்துசேரும்.
  • காலைக்கடன் / மலஜலம் கழிப்பது – அடுத்ததாக காலைக்கடன்.. இந்த மண்ணில் இருந்து கிடைக்கக்கூடிய உணவை உண்ட நாம் இந்த மண்ணுக்கு உரமாக நமது கழிவுகளை அதாவது உண்ட கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆம் மலஜலம் கழிப்பது. கண்விழித்த இரண்டு மணி நேரத்திற்குள் இது நடக்கவேண்டும். காலையிலேயே நடக்கவேண்டும். அதனால்தான் காலைக்கடன் என்ற பெயரும் இதற்கு வந்தது. இந்த பழக்கம் சீராக இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை என்றும் நம்முடன் இருக்கும்.
  • அடுத்தது அதிக சத்துக்கள் கொண்ட எளிமையாக ஜீரணமாகக் கூடிய நமது தமிழக உணவுகளை காலையில் உட்கொள்வது. இன்று நம்மில் பலர் காலை உணவை தவிர்த்துவிட்டு இரவு அதிக உணவை உட்கொள்வது பழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே போதும் உடல் பருமன் மட்டுமல்ல சர்க்கரை வியாதியும் பறந்து ஓடிவிடும். இரவு உணவை எளிதாக கஞ்சி உணவாக்கிக்கொண்டு காலையில் சத்து நிறைந்த ஆகாரத்தை உண்ணும் பொழுது உடல் தனக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் பெறுகிறது. இதனால் மன உளைச்சலும் பறந்தோடிவிடும்.
  • காலையில் முளைகட்டிய தானியங்கள் எடுத்துக் கொள்வது சிறந்தது. காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் முளைகட்டிய தானியங்கள் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவு உட்கொள்வது சிறந்தது. முளைகட்டிய வேர்க்கடலை, முளைகட்டிய பச்சை பயறு, முளைகட்டிய நரிப்பயறு, முளைகட்டிய கருப்பு உளுந்து, முளைகட்டிய தட்டைப்பயறு என ஒவ்வொருநாளும் ஒன்றை உண்ணலாம்.
  • எண்ணெய் பலகாரங்கள் அதாவது செக்கில் ஆட்டிய நல்லெண்ணையில் நமது வீட்டில் தயாரித்த எண்ணெய் பலகாரங்களை எடுத்துக் கொள்ளலாம். மாலை நேர சிற்றுண்டியாக பழங்கள், கொட்டை பருப்புகள் உண்பது சிறந்தது.காலை உணவைப்போல் மதிய உணவும் சிறந்த சத்துக்கள் நிறைந்த தமிழக உணவாக இருப்பது அவசியம். 
  • இரவு ஏழரை மணிக்குள் நமது உணவை முடித்துக் கொள்வது அவசியம். இரவு உணவாக எளிதாக் ஜீரணமாகக் கூடிய கஞ்சி அல்லது பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். கடினமாக உழைப்பவர்கள் கஞ்சி அல்லது நீராவியில் வேகும் இட்லி, இடியப்பம் போன்ற எளிமையாக ஜீரணிக்கக்கூடிய உணவை எடுத்துக்கொள்ளலாம். இதனால் நல்ல உறக்கமும், சீரான உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
  • இவற்றோடு வாரம் 2 முறை இல்லையில்லை இன்றைய சூழலில் கட்டாயம் முடியவே முடியாது என்பவர்கள் வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் அல்லது மூலிகை பொடிகளைக்கொண்டு குளிப்பது கட்டாயமாக்க வேண்டிய ஒன்று.
  • அதனோடு வாரம் ஒரு நாள் சமைத்த உணவுகளை தவிர்த்து சமைக்காத உணவுகளை உண்பது அவசியம். அவல் சார்ந்த உணவுகள், பழங்கள், பச்சை காய்கள் போன்ற உயிருள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • தேவைக்கேற்றவாறு தண்ணீர் பருகுவது அவசியம். அதிக மசாலாக்கள் சேர்த்த உணவுகளை அதிகம் உண்பவர்கள் அல்லது கடைகளில் கிடைக்கும் உணவுகளை அதிகம் உண்பவர்கள் அதிக நீரினை பருகுவது அவசியம். இதனால் உறுப்புகளில் ஏற்படும் தொந்தரவுகள்  நீங்கும்.  
  • இரவு தூக்கம் அதிகபட்சமாக 10 மணிக்குள் இருக்க வேண்டும். 
  • இன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான காய்கறிகளை உண்ணும் நாம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பாரம்பரிய அரிசிகளையும் ஒவ்வொரு வகையான சிறுதானியங்களையும் உண்பதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருநாள் சிகப்பரிசி, ஒருநாள் வெள்ளையரிசி, ஒருநாள் கருப்பு அரிசி, ஒருநாள் பழுப்பு அரிசி, ஒருநாள் குதரைவாலி, ஒருநாள் கம்பு, ஒருநாள் கேழ்வரகு, ஒருநாள் சாமை என மாற்றி மாற்றி உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். இதனால் அனைத்து வகையான சத்துகளும் குறிப்பாக வைட்டமின்களும் தாதுப்புக்களும் உடலுக்கு கிடைக்கப்பெறும். ஒவ்வொரு சிறுதானியங்களிலும், ஒவ்வொரு அரிசி வகைகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளன. அன்றாடம் இவற்றை பயன்படுத்தும் பொழுது பலவகையான உடலில் வாழும் நுண்ணுயிர்களுக்கு துணை காரணிகளாக அவை விளங்குகிறது.

நுண்ணுயிர்கள் செயல்பட காரணிகளாக விளங்கும் இந்த சத்துக்கள் உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது. மேலும் பலவகையான தமிழக உணவுகளை விதவிதமாக சமைத்து உண்பது சிறந்தது. தமிழக உணவுகள் பெரும்பாலும் நமது சீதோஷ்ண நிலைக்கும் உடலின் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றவாறு தயாரிக்கப்படும் உணவுகள்.

ஒரு உதாரணத்திற்கு தமிழகத்தில் நல்லெண்ணெய் தான் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் எண்ணெய். காரணம் தமிழகத்தில் தட்பவெட்ப நிலைக்கு நல்லெண்ணை உணவே சிறந்தது. அதுவே அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் அதிகமாக கடலை எண்ணெய் சமையல் இருக்கும்.  கேரளத்தில் தேங்காய் எண்ணெய் சமையல் அதிகமாக இருக்கும். காரணம் அங்குள்ளவர்களுக்கு உடலின் உஷ்ணத்திற்கு ஏற்ப எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையை நாமும் கடைபிடித்தால் ஆரோக்கியம் மேம்படும். 

பொதுவாக இன்று ஏதாவதும் ஒரு தேநீரை அருந்தினால் உடல் பருமன் குறையும், அல்லது ஏதேனும் ஒரு மரப்பட்டையை உண்டால் சர்க்கரை நோய் விலகும் என்றெல்லாம் கூறுவது ஒருசதவீதம் மட்டுமே பயனை அளிக்கும். அதிலும் ஆரம்பத்தில் இவை பிரமாதமாக வேலைசெய்வது போல்  தோன்றும், ஆனால் நாள் பட மீண்டும் அதே நிலை உருவாகும். அதனால் முழுவதுமாக நமது நடைமுறை பழக்கவழக்கங்களையும், உணவு பழக்கங்களையும் மாற்றினால் உண்மையில் வாழ்வியல் நோய்கள் என்று கூறப்படும் அனைத்து உடல் தொந்தரவுகளும் விலகும்.