கோடைகாலத்தை சமாளிக்க உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் சிறந்த வெள்ளரிக்காயும் சாத்துக்குடியும் உடலுக்கு தேவையான நீர் சத்துக்களையும் வைட்டமின் சத்துகளையும் அள்ளிக் கொடுக்கும் உணவுகள். இவற்றைக் கொண்டு ஒரு சுவையான சத்தான ஜூஸ் தயாரித்து வாரம் நான்கு நாட்களை பருக சருமம் பளபளக்கும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உடலின் உறுப்புகள் பலப்படும்.
உடலுக்கு சிறந்த சத்துகளையும், குளிர்ச்சியையும் அளிக்கும் அற்புத உணவு வெள்ளரிக்காய். இதில் பல வகைகள் உள்ளன. பொதுவாக நாடு வெள்ளரிக்காய் சிறந்த சத்துக்களைக் கொண்டது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சத்துக்களை அளிக்கும் உணவுகளில் பிரதானமான இடத்தை பிடித்திருக்கும் பழம் சாத்துக்குடி. கோடை காலத்தில் அவ்வப்போது இவற்றை உட்கொள்வதால் உடல் பலம் கூடும். சோர்வு நீங்கும், புத்துணர்வும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். இதில் இருக்கும் தேன், புதினா, இஞ்சி ஆகியவை சீரான செரிமானத்தை அளிப்பதுடன் கோடையில் ஏற்படும் நாவறட்சி, நீர் கடுப்பு, அக்கி, கட்டிகள், வியர்வை புண், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்
- 1 வெள்ளரிக்காய்
- 2 சாத்துக்குடி
- சிறு துண்டு இஞ்சி
- நான்கைந்து புதினா இலைகள்
- 1 ஸ்பூன் தேன்
செய்முறை
- முதலில் வெள்ளரிக்காயை நன்கு கழுவி சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- சாத்துக்குடியை பிழிந்து விதை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நறுக்கிய வெள்ளரிக்காயை சிறிது இஞ்சி துண்டு, புதினா இலைகள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். (அல்லது வெள்ளரிக்காயை புதினாவுடன் அரைத்துக் கொண்டு அதனுடன் இஞ்சி சாறு கலந்து கொள்ளலாம்.)
- இவற்றுடன் சாத்துக்குடி சாறு கலந்து அதனுடன் தேன் கலந்தால் சுவையான வெள்ளரி சாத்துக்குடி ஜூஸ் தயார்.
- கோடையில் ஏற்படும் சரும வறட்சிக்கு சிறந்த பானம்.