பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு வரும் ஒரு மிக பெரிய தொந்தரவு பேன், ஈர், பொடுகு பிரச்சனை. பெரியவர்களுக்கு இந்த தொந்தரவு இருந்தாலே மனஉளைச்சல், ஒரு வித எரிச்சல் இருப்பதைப் பார்க்கலாம். அதிலும் எந்நேரமும் கையை தலையில் வைத்து சொரிவது பார்க்கவே அருவருப்பாகவும் சங்கடமாகவும் இருக்கும்,
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்ற குழந்தைகளின் தலையிலிருந்து பேனை ஒட்டிக்கொண்டு வருவார்கள். உடனே இதனை பெற்றோர்கள் கவனித்து அவ்வப்பொழுது தலையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் பேன் பரவுவதுடன் அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.
குழந்தைகள் இதனால் இரவு பகல் பார்க்காமல் கையை தலையிலேயே வைத்திருப்பதும் அதனால் தூக்கம் கெடுவதும் வேதனையை அளிப்பதுடன் அவர்களின் படிப்பும் இதனால் பாதிக்கப்படுகிறது.
தலையை சுத்தமாக வைத்திருக்காமல் இருப்பதால் பேன் பல்கிப்பெருகி, குடும்பம் குடும்பமாக உலாவருவதும் தலையில் பொடுகு, அரிப்பு போல் வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன் இரத்த சோகைக்கும் காரணமாகிறது. அதனால் பேனை உடனே ஒழிப்பது மிகவும் அவசியமானது.
இரத்த சோகை, சத்து குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, முடி உதிர்தல், தொடர் காய்ச்சல், தொற்றுநோய், மன உளைச்சல், எரிச்சல், தலையில் படை, சொறி ஏற்படுவது, சரும நோய்கள் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பேன் ஒழிய சில வழிகள்
- சுத்தமான சீப்பை பயன்படுத்துவது சிறந்தது. தலையை வாரம் ஒருமுறை சுத்தம் செய்வது அவசியம்.
- அரளிப்பூவை இரவு படுக்கும் முன் தலையின் அருகில், தலையணையில் வைத்துக் கொண்டாலே பேன் ஒழியும்.
- மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூச பேன் தொந்தரவிலிருந்து வெளிவரலாம்.
- சீத்தாப்பழ விதைகளை பொதுவாக நாம் வீணாக்குவதுண்டு, இந்த விதைகள் பேன், ஈர் ஒழிய சிறந்த பலனை அளிக்கும். சீத்தாப்பழ விதையை நன்கு காயவைத்து பொடியாக்கி சீயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்க கூந்தல் நன்கு வளரும், பேன், ஈர் ஒழியும்.
- தண்ணீரில் படிகாரத்தைக் கரைத்து அத்துடன் மூக்குத்தூளைப் போட்டுக் கலந்து, தலையில் நன்றாகத் மயிர்க் கால்கள் வரை தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பின் சீயக்காய் தேய்த்துத் தலை முழுகப் பேன் ஒழியும்.
- பப்பாளிப் பாலை படிகாரத்துடன் சேர்த்து தடவ பேன் ஒழியும்.
- பேன், பொடுகு தீர பொடுதலை நல்லெண்ணெய் தைலத்தில் வாரம் ஒருமுறை தலைமுழுகி வர விரைவில் தீரும்.
- இரவு படுக்கும் முன் துளசி இலையை கட்டிக்கொண்டு படுத்துறங்கினால் பேனுடன், ஈர் தானாகவே வெளியேறிவிடும்.
- வேப்பம் பூவை வாட்டி தலையில் வைத்தால் பேன், ஈர் நீங்கும். தலையில் ஏற்படும் புழு பூச்சிகளும் அழியும்.