முடி உதிர்வை தடுக்க சில வழிகள்

பள்ளி மாணவி, கல்லூரி பெண், வேலைக்கு செல்லும் பெண்கள், தாய்மார்கள் இப்படி எல்லா வயதுப் பெண்களுக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கக் கூடியது முடி உதிர்வு. அழகுக்கு அழகு சேர்ப்பது முடி. அந்த முடி கொட்டத் தொடங்கிவிட்டால் அழகு கெடுவதுடன் முகதோற்றமும்  வெறுத்துப்போய் மங்கலாக தோன்றும். இதற்கு காரணம் பலவாக இருக்கும், அதிலும் மிக முக்கியமான காரணம் போதுமான சத்தில்லாத உணவுகள் மற்றும் நமது பழக்கவழக்கங்கள்.

புவி வெப்பமயமாதலும் ஒரு முக்கியமான காரணம் என்று கூறலாம். புவி வெப்பமயமாதல் புவிக்கு மட்டும் பிரச்சனையல்ல புவியில் வாழும் நமக்கும் பிரச்சனைதான். புவி வெப்பமயமாதலால் புவியில் வாழும் நமது உடலும் எளிதாக உஷ்ணம் அடைகிறது. உஷ்ணத்தின் தாக்கம் பொதுவாக தலைக்கு வந்து சேரும். அந்த தாக்கத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முடி. அதனால் முடி உதிர்வும் அதிகமாக உள்ளது. மேலும் இந்த உஷ்ணத்தால் தலையில் வெடிப்புகள், வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை, தலை எரிச்சல், தலையில் ஏற்படும் புண்கள், அழுக்கு, வியர்வை திட்டு போன்றவையும் ஏற்படுகிறது. 

சீரான உணவுப் பழக்கம் இல்லாதது மற்றொன்று முறையற்ற பழக்கவழக்கங்கள் இவை இரண்டையும் சமாளித்தாலே போதும் முடியுதிர்வை தடுக்க முடியும். புவிவெப்பத்தையும் நமது உணவு பழக்கங்களாலும், மற்ற பழக்கங்களாலும் சமாளிக்க முடியும்.

உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் செயல்கள் –
முடி உதிர்வை தவிர்க்க கட்டாயம் தடுக்க வேண்டியவை

  • காலையில் அதிக நேரம் படுக்கையில் படுத்திருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இந்த உஷ்ணம் முடி உதிர்வை அதிகரிக்கும். சூரியன் வருவதற்குள் எழுவது உடலின்  குளிர்ச்சியை தக்க வைக்கும். 
  • மலச்சிக்கல் இல்லாமல் இருப்பது உடலின் வெப்பநிலை சீராக வைத்திருக்கும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது  மலச்சிக்கல் அதிகரிக்கும்.
  • செயற்கையாக கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பூ, சோப்பு போன்றவை தலையில் உள்ள செல்களை அழிப்பதுடன் முடி உதிர்வுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது.
  • தலையை குளித்தபின் ஈரத்தோடு கட்டுவது ஈரத்தோடு இருப்பது போன்றவையும் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.
  • நாம் பயன்படுத்தும் சீப்பு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. பொதுவாக அனைத்து இடங்களிலும் எளிமையாக கிடைக்கக்கூடிய நெகிழியால் தயாரிக்கப்பட்ட சீப்பே இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீப்பினை தலைக்கு பயன்படுத்துவதால் எதிர் வினை ஏற்பட்டு தலையில் இருக்கக்கூடிய செல்களை அழித்து முடிஉதிர்வு அதிகரிக்கிறது. அதாவது நெகிழியைப் பயன்படுத்தி தலையில் அழுத்தம் கொடுக்கும் பொழுது மயிர்க்கால்கள் வரண்டு போவதுடன் உஷ்ணமாகி முடி உதிர்வுக்கு காரணமாகிறது. மர சீப்பு பயன்படுத்தலாம்.
  • இன்றைய இளைஞர்கள் நவீன உலகின் தாக்கத்தால் தலைக்கு எண்ணெய் வைப்பதை தவிர்த்து பலவகையான ஜெல்களை பயன்படுத்துகின்றனர்.இந்த இரசாயனங்கள் முடியை பலவீனப்படுத்துவதோடு முடி உதிர்வுக்கும் காரணமாகிறது. செயற்கை எண்ணெய்களாலும் முடி உதிர்வு அதிகரிக்கிறது. செயற்கை எண்ணெய் தலையில் இருக்கும் மயிர்கால்களை வறண்டு போகச் செய்கிறது
  • போதுமான தூக்கம் இல்லாமை அதாவது இரவு தூக்கம் இல்லாமை முடி உதிர்வுக்கு பெரும் காரணமாகிறது. 
  • அதிகமான மனஉளைச்சல், கணினியின் வெப்பம், மனசோர்வு போன்றவை தலையின் உஷ்ணத்தை அதிகப்படுத்த முடி உதிர்வு அதிகரிக்கிறது.
  • நமது முறையற்ற  பழக்கவழக்கங்களைப் போல் சத்தற்ற நவீன உணவு பழக்கவழக்கங்களும் முடியுதிர்விற்கு காரணமாகிறது. 
  • உணவு, இன்று தரமற்ற உணவுகளும் ரசாயன நச்சு கலந்த உணவுகளும் அதிகரித்த வேலையில் சத்தற்ற உணவுகள் என்று சொல்லக்கூடிய செயற்கை சுவையூட்டிய உணவுகள், செயற்கை நிறமூட்டிய உணவுகள், பாஸ்ட்புட் உணவுகள் அதிகமாக உள்ளது. இவையும் முடி உதிர்வுக்கு பெரிய காரணமாகிறது. இவற்றால் உடலில் உள்ளது நல்ல சத்துக்களையும் உடல் கிரகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. 
  • உணவில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாமையும் மற்ற வைட்டமின் சத்துக்கள்  இல்லாமையும் முடி உதிர்வுக்கு பெரிய காரணமாக அமைகிறது. சத்து பற்றாக்குறை, ஹார்மோன் குறைபாடு, தைராய்டு, கருப்பை பிரச்சனை, மாத்திரைகள், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகளும் முடி உதிர்வுக்கு காரணமாக உள்ளது.

இவற்றைப் போக்கும் சில வழிகள்

  • சீரான இரசாயன கலப்பில்லாத உணவு பழக்கங்கள் உடலில் சத்து பற்றாக்குறையை சீராக்குவதுடன் உடலில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பையும் சீராக்கும்.
  • இந்துப்பு பயன்படுத்துவதால் ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சீராகும்.
  • கருப்பைக்கு தேவையான துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை வாரம் 4 முறை எடுத்துக் கொள்வதால் கருப்பை தொந்தரவு குறைவதுடன் முடி உதிர்வும் குறையும்.
  • யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்கும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன்மூலம் தலையில் உள்ள உஷ்ணத்தை அதிகமாக கட்டுப்படுத்த முடியும். 
  • முடிந்தவரை பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் ஒவ்வொரு நாளும் கட்டாயம் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
  • அன்றாடம் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்ப்பது அவசியம். வாரம் ஒருமுறை செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயை (எள் எண்ணெய்) உடல் முழுக்க தேய்த்து குளிப்பது அவசியம். காலையில் இளம்சூடான நீரில் குளிப்பதால் உடல் உஷ்ணம் கட்டுப்படும். மயிர்கால்களுக்கு தேவையான சத்துகளும் எளிதாக கிடைக்கும். இதனால் முடி உதிர்வை பெருமளவில் கட்டுப்படுத்தமுடியும்.
  • புரதச் சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான அமினோ அமில உற்பத்தி சீராக்குவதுடன் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியும்.
  • ரசாயனங்கள் கலந்த ஷாம்பு, கண்டிஷனர் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது. இவற்றிற்கு பதிலாக கற்றாழை, செம்பருத்தி, நெல்லிக்காய் சேர்ந்த சீயக்காய், எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
  • தலைக்கு ரசாயன பூச்சு பூசுவதை தவிர்க்க வேண்டும். ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எனப்படும் முடி அமைப்பை மாற்ற பயன்படுத்தப்படும் பல நவீன சிகிச்சைகள் பெருமளவில் முடி உதிர்வுக்கு காரணமாக அமைகிறது. இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • காலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நீரைப்பருகி இளஞ்சூடான வெயிலில் ஒரு சிறந்த நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல முடி உதிர்வுக்கும் தீர்வாக அமையும். முடி வளர்ச்சிக்கும் தீர்வாக அமையும்.
  • பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்தாமல் மரத்தாலான சீப்புகளை பயன்படுத்துவதால் தலையில் இருக்கும் எண்ணெய் பசை அனைத்து இடங்களிலும் சீரான முறையில் பரவுவதுடன், தலையில் ஏற்படும் உஷ்ணத்தையும் கட்டுப்படுத்த முடியும். இதனால் முடி உதிர்வை பெருமளவில் குறைக்க முடியும். ஆரோக்கியமான கூந்தலுக்கு இது வழிவகுக்கும்.
  • எண்ணெய் பதார்த்தங்கள் உண்ண விரும்புபவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பது சிறந்தது. கடைகளில் கிடைக்கும் உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
  • இவற்றை கடைபிடிப்பதால் முடியுதிர்வைமட்டுமல்ல உடல் அழகையும் அதிகரிக்கலாம்.
(1 vote)