புதினா வளர்க்கலாம் வாங்க…

வீட்டு தோட்டத்தில் புதினா வளர்ப்பு

முதலில் வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றை தயாராக எடுத்துக்கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ளவேண்டும்.

அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் சிறுசிறு டப்பாக்களில் முக்கால் பங்கு நிரப்பவும். முதல் செடியாக அனைத்து இல்லங்களில் கட்டாயமாக இருக்கவேண்டிய இரும்பு சத்துக்கள் நிறைந்த புதினாவை வளர்க்கலாம்.

புதினா வளர்ப்பது மிகவும் எளிது. அதற்கு கடையில் வாங்கிய புதினா கீரைகளை கிள்ளிவிட்டு மீதம் இருக்கும் முற்றிய காம்புகளை எடுத்துக்கொள்ளவேண்டும் (முற்றிய கீரைகளின் தண்டுகள்தான் முளைப்பு திறன் உள்ளவை).

அந்த காம்புகளை நிரப்பிய மண்ணில் லேசாக இரண்டு அங்குலத்துக்கு துளையிட்டு அதில் நட்டுவிடவேண்டும். பின் மண்ணை நன்கு மூடிவிட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

வெயில் படும்படியான இடத்தில் இதனை வைக்க புதினா கீரைகள் சிறப்பாக வளரும்.

தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் தெளிக்க இரண்டு மூன்று நாட்களில் புது இலைகள் வளரத் தொடங்கும். அதிக நீரில் செடி மூழ்காதவாறும் பார்த்துக்கொள்ளவேண்டும். பெரிதாக எந்த பராமரிப்பும் தேவையில்லை.

வாரம் ஒருமுறை பஞ்சகாவ்யா, அமிர்த கரைசல், மீன் அமிலம் என ஏதேனும் ஒரு வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்த பூச்சி தாக்குதல், சத்து குறைபாடு தொந்தரவுகள் இல்லாமல் இலைகள் பெருத்து புதினா செடி செழிப்பாக வளரும்.

தேவையான நேரத்தில் பிரெஷாக எடுத்து பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். சூரிய ஒளியும் தண்ணீரும் சீராக கிடைக்க மூன்று வார காலத்தில் புதினாவை அறுவடை செய்யலாம்.

எளிமையாக இவ்வாறு நகரத்திலும் நமக்கான உணவை வளர்க்க தெரிந்துகொள்வோம். இதற்கு பெரிதாக இடமும் தேவையில்லை, எந்த செலவும் இல்லை. சின்ன சின்ன பாட்டில்களில் கூட இதனை வளர்க்கலாம்.

ஜன்னல் ஓரங்கள், சுவர்கள், படிகள் என எந்த ஓரத்திலும் செழிப்பாக வளரும்.

மணமும் குணமும் மிகுந்த ஒரு கீரை. இரத்த விருத்தி, இரும்பு சத்து கொண்டது. கோடையில் இதன் சாறு உடலுக்கு பலத்தை அளிக்கும்.