வீட்டில் வெற்றிலை வளர்க்கலாம் வாங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும் வெற்றிலையை எவ்வாறு நமது வீட்டில் வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.


வெற்றிலை, வெறும் வெற்று இலை மட்டுமில்லை.. உண்மையில் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும் ஒரு மாமருந்து. அன்றாடம் உணவிற்கு பின் வெற்றிலை உண்ண எந்த சிக்கலும் இன்றி உணவு செரிப்பதுடன் ஆரோக்கியமாகவும் வாழலாம். 

ஒவ்வொரு நாளும் இரசாயனம், பூச்சிக்கொல்லி இல்லாத வெற்றிலை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. இதனை வீட்டிலேயே சுலபமாக வளர்க்க ஆரோக்கியம் நிலைக்கும்.

வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

பின் மண் கலவையை தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். பின் எந்த பராமரிப்பும் தேவையில்லாத இந்த வெற்றிலைக் காம்புகளை (கணுக்களுடன் உள்ளதை) மண்ணில் பதியம் போட சில நாட்களில் வெற்றிலைக்கொடி தயாராகிவிடும், வாரம் இருமுறை நீர் ஊற்றி வளர்க்கவும். 

வெற்றிலைக்கொடி படருவதற்கும், குறைந்த சூரிய ஒளி படுவதற்கும் ஏற்றவாறு அவற்றை மரநிழலிலும் மரத்திற்கு அருகிலும் வளர்க்கலாம் அல்லது அவை படர்ந்து வளர கயிறு கட்டி வளர்க்கலாம். ஒரு மாதத்திற்குப் பின் இலைகளை எடுத்து பயன்படுத்தலாம்.

வெற்றிலையில் ஏற்படும் பாதிப்புகள்

வெற்றிலையில்  வாடல் நோய், சாம்பல் நோய், இலைப்புள்ளி மற்றும் செதில் பூச்சிகள் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இலைகள் பசுமையான நிறம், பளபளப்பு தன்மையை இழந்து மங்கலாகி மஞ்சளாகி கீழ்நோக்கி தொங்கிவிடும். கணுப்பகுதி கருமை நிறமாக மாறி அழுகியிருப்பதையும் பார்க்கலாம்.

தொழுவுரம், மண்புழு உரம், மீன் அமிலம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, வேப்பங்கொட்டைக் கரைசல், 3ஜி கரைசல் போன்றவற்றை வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொடுக்க பூச்சி, நோய் தாக்குதல் இன்றி இலைகள் பெருத்து செழிப்பாக வளரும்.

(1 vote)