சோற்றுக் கற்றாழை வளர்ப்பு

வீட்டு தோட்டத்தில் சோற்றுக் கற்றாழை வளர்ப்பு

கற்றாழை என்றவுடன் ஏதோ காட்டுச்செடி என்று நினைக்கவேண்டாம், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய இந்த கற்றாழைக்கு இன்னொரு பெயர் குமரி. வயது கடந்தாலும் என்றும் குமரியாகவே நம்மை காக்கும் குணம் கொண்டது இந்த கற்றாழை.

வாராவாரம் அழகு நிலையங்களுக்கு செல்ல செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரமே போதுமானது நமது வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க. அதிலும் கற்றாழைக்கு என்று எந்த நேரமும் செலவழிக்க தேவையில்லை.

கற்றாழையை மாதம் இருமுறை உட்கொள்வதும், தினம் தினம் முகம், கண் வளையம், கழுத்து, கை கால்கள் போன்ற இடத்திற்கு பூசுவதன் மூலம் உடல் பொலிவும், அழகும் அதிகரிக்கும். தினமும் உழைப்பு, அலைச்சல், டென்ஷன், மனசோர்வு ஆகியவற்றால் உடலில் ஏற்படும் உஷ்ணத்தையும் இந்த கற்றாழை குறைத்து என்றும் பொலிவுடன் நம்மைக் காக்கிறது.

சோற்றுக் கற்றாழை பொதுவாக வெப்பமாக இருக்கும் இடத்தில் விளையக்கூடியது. இவற்றிற்கு விதைகள் கிடையாது. வாழையைப் போன்று பக்கவாட்டில் வரும் கன்றினை வைத்தும் மடல்களை வைத்தும் வளர்க்கமுடியும்.

நன்கு வளர்ந்த தாய் செடியின் பக்கவாட்டில் சில கன்றுகளும் வளர்ந்திருக்கும், அவற்றை எடுத்து நடுவதால் சோற்றுக்கற்றாழையை எளிதாக வளர்க்கமுடியும்.

பொதுவாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வீடுகளில் கற்றாழையை வளர்க்கின்றனர், அவர்களிடமிருந்தோ அல்லது அருகில் இருக்கும் தோட்டக்கலைத் துறையினரிடமிருந்தோ கற்றாழை கன்றினை முதலில் பெறவேண்டும். 

வீட்டில் தேவையில்லாத உடைந்த, பக்கெட்டுகள், இனிப்பு ட்ரேகள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்ற தயாராக எடுத்துக் கொள்ளவும். அவற்றின் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.

காற்றழையை வளர்பதற்கு மண் கலவையை முதலில் தயார் செய்துக்கொள்ள வேண்டும். அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ஒரு டப்பா அல்லது ஒரு தொட்டியில் முக்கால் பங்கு நிரப்பவும். அதனில் வேருடன் எடுத்துவைத்திருக்கும் சோற்றுக்கற்றாழை கன்றினை நடவேண்டும்.

பின் லேசாக தண்ணீர் தெளித்து வைக்கவேண்டும். பின் அன்றாடம் அதற்கு சிறிது நீரூற்ற வேண்டும். அவ்வளவு தான், விரைவில் அந்த கன்று பெருத்து இலைகள் தடிமனாகும். 

சோற்றுக் கற்றாழை வளர்ப்பில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..

தண்ணீர் : சோற்றுக் கற்றாழை வளர்ப்பில் பலர் செய்யும் முதல் தவறு அதிகப்படியாக நீர் ஊற்றுவது. கற்றாழை செடிகளுக்கு அதிகமாக நீரூற்றுவதால் செடிகள் அழுகுவதும் வளர்ச்சி குன்றி நிறமாற்றமும் ஏற்படும். அதனால் தேவைகேற்ப பார்த்து நீரினை தெளித்தாலே போதும் செடிகள் நன்கு செழித்து வளரும்.

வெயில் காலத்தில் ஒருமுறையும் மழைகாலங்களில் தேவைபட்டாலும் நீரூற்றவேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை கவனித்து சிறிது நீரினை தெளித்தாலே போதும்.

அடுத்ததாக ,

சூரியஒளி : சோற்றுக் கற்றாழை வெப்பத்தை விரும்பும் செடி. அதனால் அதிகப்படியான சூரியஒளி படக்கூடிய இடத்தில் கற்றாழையை வளர்ப்பது சிறந்தது. சூரிய ஒளி குறைந்தது ஆறுமணி நேரமாவதும் படக்கூடிய இடத்தை தேர்ந்தெடுத்து வைக்கவேண்டும். இந்த இரண்டையும் சீராக கடைப்பிடிக்க எளிதாக சோற்றுக் கற்றாழையை வளர்க்கலாம்.

பொதுவாக சோற்றுக் கற்றாழையில் அதிகமாக பக்கக்கன்றுகள் வளரும். அவற்றை அகற்றி வேறொரு தொட்டியில் மாற்றிவைக்க தாய் செடிகள் அடர்த்தியாக நல்ல சதைப்பற்றுடன் வளரும். இதற்கு எந்த பராமரிப்பும் தேவையில்லை, அவ்வப்பொழுது நீருற்றுவது மட்டுமே போதுமானது. தேவைப்பட்டால் மாதம் ஒருமுறை பஞ்சகவ்யா அல்லது ஏதேனும் ஒரு இயற்கை வளர்ச்சி ஊக்கியை பயன்படுத்தலாம்.

தேவைக்கேற்றவாறு சிறிது சிறிதாக உடைத்து அதன் ஜெல்லியை முகம், தலை, உடல் என ஊறவைத்து குளிக்க பொலிவுபெறும். அந்த ஜெல்லியை எடுத்து நன்கு நீரினில் அலசி மோருடன் சேர்த்து  குடித்து வந்தால் உடல் உஷ்ணம், குடல் புண் சரியாகும். 

(1 vote)

1 thought on “சோற்றுக் கற்றாழை வளர்ப்பு

  1. Joshua

    Want to more details for business link

Comments are closed.