நெல்லிக்காய் பொடி

உடலுக்கு பல விதமான சத்துக்களை அளிக்க கூடிய மிக முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று நெல்லிக்காய். குறிப்பாக வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு சிறந்த பழம். அதிலும் நாட்டு நெல்லிக்காய்க்கு ஒரு தனி இடமே உண்டு. உடலில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்த கூடிய ஒரு சக்திவாய்ந்த பழம். நெல்லிக்காய் ரத்த விருத்திக்கு உதவும், நீரழிவை கட்டுப்படுத்தும்.

பொதுவாக தமிழகத்தில் நாட்டு நெல்லிக்காய் கார்த்திகை மாதத்திற்கு பின் மாசி, பங்குனி மாதம் வரை கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதனால் நமது முன்னோர்கள் இந்த நெல்லிக்காய்களை வத்தல், தேன் நெல்லி, ஊறுகாய், நெல்லிமுள்ளி என பல வகைகளில் பதப்படுத்தி வருடம் முழுவதும் பயன்படுத்தினர்.

நாமும் நாட்டு நெல்லிக்காய்களை கிடைக்கக் கூடிய காலத்தில் சேகரித்து காயவைத்து வீட்டிலேயே நெல்லிக்காய் பொடி செய்து வருடம் முழுவதும் பயன்படுத்த சிறந்த ஆரோக்கியத்தை பெறமுடியும்.

நெல்லிக்காய் பொடி செய்ய முதலில் வேண்டிய அளவு நெல்லிக்காய்களை சேகரித்து அல்லது வாங்கி அதனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒவ்வொன்றாக நறுக்கி கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு வெயிலில் போட்டு நன்கு காய வைக்கவேண்டும்.

காய்ந்ததும் உரலில் இட்டு இடித்து சலித்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை எந்த இலைப் பொடிகளுடனும் கலந்து உண்ணலாம்.

  • இவ்வாறு பதப்படுத்திய நெல்லிக்காய்களை வருடம் முழுவதும் பயன்படுத்தும் பொழுது கூந்தல் வளர்ச்சி சீராக இருப்பது மட்டுமல்லாமல் கூந்தல் கருகருவென்றும் வளரும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.
  • தினமும் கால் தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை சாப்பிட்டு வந்தால் இளமை நீடிக்கும்.
  • நெல்லிக்காய் பொடி சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த லேகியம் தேவையில்லை.
  • நெல்லிக்காய் பொடியுடன் தேன்கலந்து சாப்பிடலாம்.
  • நெல்லிக்காய் பொடியுடன் சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள், சிறிது வறுத்து அரைத்த உளுந்து பொடியையும் கலந்து கொண்டால் சாப்பாட்டுப் பொடியாக உபயோகிக்கலாம்.
  • நெல்லிக்காய் சாப்பாட்டுப் பொடி புளிப்பு, துவர்ப்பு, காரம் போன்ற மூன்று சுவைகளும் கலந்திருப்பதால் சுவையாக இருக்கும்.
  • சாம்பார், ரசம் ஊற்றி சாப்பிடுபவர்கள் அதனுடன் இந்த நெல்லிக்காய் சாப்பாட்டு பொடியையும் சிறிது கலந்து கொண்டால் சுவையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
  • கொட்டை எடுத்த பேரிச்சம்பழம் ஐந்தும், கால் தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியுடன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாப்பிட சுவையான இயற்கை குளிர்பானம் தயார். சுவைக்காக தேன் கலந்து கொள்ளலாம்.
(7 votes)