ginger-benefits-uses-tamil inji payangal

இஞ்சி பயன்கள்

Zingiber Officinalis; Ginger; இஞ்சி

“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்பிரமணிக்கு மிஞ்சிய கடவுளுமில்லை” என நம்மூர் பேச்சு வழக்கில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். காய்ந்த சுக்கு பச்சையாக இருக்கும் பொழுது இஞ்சி என்பது நமக்கு தெரியும். இஞ்சி பல உடல் உபாதைகளுக்கும், நோய்கள் தொந்தரவுகளுக்கும் மிக சிறந்த மருந்து. வாத, பித்த, கப நோய்களுக்கு மிக சிறந்த மருந்து.

அல்லம் என்ற பெயரையும் கொண்ட இஞ்சி சிறு செடி தாவரமாகும். இந்த செடியின் வேர் கிழங்கே இஞ்சியாகும். இயற்கையாகவே பசியைத்தூண்டும் ஆற்றலும் வெப்பமுண்டாக்கும் தன்மையும் கொண்டது. கப நோய்கள், அஜீரணம், இருமல், கண்நோய், பொருமல், வாந்தி, நீரிழிவு போன்றவற்றிற்கு மிக சிறந்த மருந்து இஞ்சி. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்.

எப்பொழுது இஞ்சியை உண்ணவேண்டும்?

நமது முன்னோர்கள் எந்தெந்த உணவை எவ்வாறு எப்பொழுது உண்ணவேண்டும் என்று வகுத்து வைத்துள்ளனர். இவ்வாறு உண்பதால் அதன் முழு பயனையும் நாம் பெறமுடியும். காலை இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலை கடுக்காய் என முறைப்படுத்தி உள்ளனர்.

கசாயம், தேநீர், சாறு என பல விதங்களில் இஞ்சியைப் பயன்படுத்தலாம். இஞ்சியை சுத்திசெய்து பயன்படுத்துவது ஆற்றலை அதிகரிக்கும், மேலும் நச்சுக்களை வெளியேற்றவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சியை சுத்தி செய்யும் முறை

தோல் நீக்கியப் பின்பே இஞ்சியை நாம் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு உணவிலும் அதன் சத்துக்களும், நன்மைகளுடன் அதன் நச்சுக்களும் சேர்ந்தே இயற்கையாக இருக்கும். அவற்றின் அடிப்படையில் இஞ்சியின் நச்சு அதன் தோல் பகுதியில் உள்ளது. அதனால் அதனை நீக்கிவிட்டு பின் இஞ்சியை சாறெடுத்து நீர் சேர்த்து தெளியவைத்து பின் நன்கு பழுத்த இரும்பு கம்பியை தெளிந்த இஞ்சி சாறில் வைத்து எடுக்க இந்த சாறு காய கல்ப மருந்தாக செயல்படுகிறது. இதுவே இஞ்சி சுத்தி செய்யும் முறை. இதற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மிக அதிகம். மேலும் பல நோய்களையும் அகற்றும்.

ginger-benefits-uses-tamil inji payangal

இஞ்சி முறப்பா

அஜீரணத்தை போக்கி பசியைத் தூண்டும் இஞ்சியை நம் முன்னோர்கள் அன்றாடம் உண்ண எதுவாக இஞ்சி முறப்பாவை தயாரித்து வைத்துக் கொண்டு எடுத்துக் கொண்டனர். இஞ்சி முறப்பவை நாள்தோறும் சாப்பிட்டு வர குடல் நோய், வயிற்று வலி, வாந்தி, வாய்வு, மார்புச்சளி, வயிற்றுப் பொருமல், இரைப்பு மட்டுமல்லாமல் பல உடல் கோளாறுகள் மறையும்.

தொற்றுகளுக்கு

தீமை செய்யும் கிருமிகள் / தொற்றுகளை வெளியேற்றும் தன்மைக் கொண்ட இஞ்சியை வாயில் மென்று உமிழ்நீரைத் துப்ப வாய்ப்புண், தொண்டைப் புண், குரல் கம்மல் நீங்கும்.

இஞ்சி எண்ணெய்

உடலில் ஏற்படும் வீக்கங்கள் வலிகளையும் குறைக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இஞ்சியை நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தைலமாக தயாரித்து வைத்துக் கொண்டு வீக்கங்கள், வலிகள் உள்ள இடங்களில் தேய்த்து வர வலிகள் மறையும்.

ஆயுள் பெருக

பித்தம் தணிய இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சம பங்கு தேன் கலந்து ஊறவைத்து அன்றாடம் ஒரு துண்டு என உண்டு வர உடல் பிணிகள் நீங்கும். மேலும் உடல் பளபளக்கும், முக அழகு கூடும், பித்தம் தணியும் மற்றும் ஆயுள் பெருகும்.

நீரிழிவு நோய்க்கு

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இஞ்சிச் சாற்றை கற்கண்டு சேர்த்துப் பருக நல்ல பலனைப் பெறலாம், நீரிழிவு நோய்க்கு இது மிக சிறந்த மருந்து.

இருமல் நீங்க

மாதுளம்பழச் சாறுடன் தேன், இஞ்சிச் சாறு கலந்து சேர்த்து தினமும் சிறிதளவாக மூன்று வேளைகள் உண்டுவர இருமல், இரைப்பு, கபநோய்கள் மறையும்.

மேலும் இஞ்சியைக் கொண்டு இஞ்சி பூண்டு சோறு, இஞ்சி அல்வா போன்ற உணவுகளை தயாரித்து உண்ண மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

(2 votes)