எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் தமிழர்கள். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.
நல்லெண்ணெய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.
நல்லெண்ணெய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
நல்லெண்ணெய்யை, ‘இயற்கை நமக்கு அளித்த கொடை’ என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணெய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.
நல்லெண்ணெய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.
நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல், உஷ்ணம் சார்ந்த நோய்கள் போன்றவை நீங்கும்.
நல்லெண்ணெய் நோயை முறிக்கும் முறிவு மருந்தாகும். செசாமின் என்ற பொருள் நல்லெண்ணெயில் இருப்பதால், வாதம், இதய நோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு முதலியவற்றைத் தடுக்கும் பைரோரெஸினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெயில் இருக்கிறது.