மரபணு மாற்று உணவுகள்

ஒவ்வொரு நொடியும் அலைந்து திரிந்து மனதாலும், உடலாலும் பெரும்பாடுபட்டு தனது உயிருக்கும் மேலான குடும்ப உறுப்பினர்களுக்காக ஓடும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தனக்காக வென்று வந்து நிற்கும் இடம் உணவு. 

உணவு தொடங்குவது சேற்றில் கால் வைத்து விளைநிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயியின் கைகளில் இருந்து. அங்கு தொடங்கிய சில உணவினை நேரடியாக உட்கொள்ள முடியாது. அதனை பக்குவமாய் சமைத்த பின்பே உண்ண முடியும். ஒவ்வொரு உணவும் அக்கறை, அன்பு மற்றும் பக்குவமாகவும், சுவையாகவும் சமைக்கப்பட்டு அதனை அருந்துவோர் வாழ்வின் இன்னல்களையும் இடர்களையும் தாண்டி ஆரோக்கியமாகவும், மனநிறைவுடனும் வாழ்வார்கள்.

உணவிற்கு பக்குவத்தையும், சுவையையும் அளிப்பது அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள். நமது முன்னோர்கள் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து முறையாக செய்துள்ளனர். அப்படி தயாரித்த உணவுகள் உடலுக்கு மருந்தாக வேலைசெய்தது. அதனால் வீரமும், அன்பும் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் சமமாக காணப்பட்டது. 

விளைநிலத்தில் விளைந்த உணவுப் பொருட்கள் பக்குவப்படுத்தப்பட்டு உண்பதற்காக அன்பும் அக்கறையும் நிறைந்த ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் கொண்டு வரப்படுகிறது.

கொண்டுவரப்பட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து தமிழர்களின் உணவிலும், பல இந்திய உணவிலும் இன்றியமையாததாகவும், ஒன்றிப்போயும் இருப்பது ஒரு சிறு உணவுப் பொருள்…

இன்று புளிக்கும் நெல்லிக்காயை சேர்க்க வேண்டிய இடத்தில் சுவைக்காக புளியையும், காரத்திற்காக மிளகினை சேர்க்க வேண்டிய இடத்தில் சிவப்பு மிளகாயினையும், பருப்பை சேர்க்க வேண்டிய இடத்தில் கொளகொள மாவினையும், நாட்டு தக்காளியினை சேர்க்க வேண்டிய இடத்தில் சக்கை தக்காளியையும் சேர்த்து உணவு தயாரிக்கின்றோம்.

ஏதோ கிட்டத்தட்ட சுவை ஒரே மாதிரி இருந்தாலும், சத்துக்களும், அவற்றால் ஏற்படும் நன்மைகளும் நிச்சயம் வேறுபாடும்.

நெல்லிக்காய் கொடுக்கும் சத்தினை எந்த புளியும் கொடுக்காது, வயிற்று புண்ணினை ஆற்றும் மிளகிற்கு எந்த வகையிலும் மிளகாய் ஈடாகாது. அதுமட்டுமல்ல நமது முன்னோர்கள் அவை எந்த மண்ணில், எந்த நீரிணைக் கொண்டு விளைந்த மிளகு, அதன் காரம், அளவு, தன்மை என பலவற்றைக் தெரிந்த பின்பே பயன்படுத்தினர்.

இப்படி பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அளவில், அன்றாடம் உடலுக்கு தேவையான அளவில் நமது தமிழர்களின் உணவினை வகுத்துள்ளனர். 

வீட்டிற்கு வீடு வாசற்படி என்பதைப்போல் ஒவ்வொரு சமையலிலும் தவிர்க்க இல்லாத ஒரு பொருள் தான் நமது பாரம்பரிய கடுகு.

கடுகிற்கு கூட பரம்பரியமா?

நிச்சயம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது நமது முன்னோர் வாய்மொழி. அப்படி சிறிதாக இருக்கும் கடுகு நமது இந்தியாவில் பல வகைகளில் உள்ளது. தென்னிந்தியர்கள் பொரித்தும், வடஇந்தியர்கள் பெரும்பாலும் கடுகு எண்ணெயாகவும் கடுகினைப் பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு இந்தியரும் தவிர்க்க முடியாத இந்த கடுகிற்கு இன்று ஆபத்து வந்துவிட்டது. நமது பாரம்பரிய கடுகிற்கு பதில் மரபணு மாற்று கடுகு. 

குடும்பத்திலும், சமுதாயத்திலும் பின்னிப் பிணைந்திருக்கும் நாம் ஒவ்வொருவரும் இந்த மரபணு கடுகு அவசியமா என்று தீர்மானிக்கும் அவசர நிலையில் உள்ளோம். நமது சமையலறைக்கும், நமது குழந்தைகள் உண்ணும் தட்டுகளுக்கும் இந்த மரபணு கடுகு வரவேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

அது என்ன மரபணு மாற்று கடுகு?

முதலில் மரபணு…

மரபணு மாற்று பற்றிப்பார்ப்போம். மரபணு, பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வொரு உயிரினத்தின் ஒவ்வொரு குணாதிசியத்தையும் முடிவு செய்வது அந்த உயிரினத்தின் மரபணு. இந்த மரபணுக்கள் இயற்கையாக அந்தந்த உயிரினத்தின் மூதாதயரிடத்தில் இருந்து முதலில் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

உதாரணமாக உங்கள் தலைமுடியின் நிறம், விழியின் வடிவம் போன்று ஒவ்வொரு அம்சமும் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது மரபணு தான். காலப்போக்கில் சில சில மாறுதலுடன் அவை தனது வம்சத்தினருக்கு கடத்தப்படுகிறது.

இப்படிப்பட்ட  மரபணுவை நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் ஆய்வகத்தில், செயற்கையாக மாற்றம் செய்வதன் மூலம் அந்த உயிரினத்தின் எதோ ஒரு தன்மையை மாற்றம் செய்வது தான் மரபணு மாற்றம். 

ஒரு உயிரினத்தின் வடிவத்தையோ, நிறத்தையோ அல்லது வெளிப்புற தோற்றத்தையோ கொடுக்கும் மரபணுவை மாற்றம் செய்தால் மட்டுமே அதனை நாம் அறிந்து கொள்ள முடியும், மிகவும் நுட்பமாக அதன் தன்மையை மாற்றினால் நிச்சயம் சாதாரணமாக அறிந்து கொள்ள முடியாது.  

மரபணுவை சாதாரண கண்களால் பார்க்க முடியாது.. அதன் வடிவத்தில் அல்லாது மரபணுவின் இயல்பினில் செய்யக்கூடிய மாறுதல்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியாது.

அவற்றை பயன்படுவதனால் உடனே அதன் விளைவையும் அறியமுடியாது, காலப்போக்கில் மனிதனுக்கு கொடிய உயிர்கொல்லியாக அது மாறும்.

அதிகரிக்கும் இந்தியாவின் மக்கள் தொகையும், மழையின்மையும் இந்திய விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளினாலும், அதைப்பற்றியெல்லாம் கவலையில்லாமல் ஏதோ ஒரு ஏசி சூப்பர் மார்க்கெட்டுக்கு போனோமா அரிசி, பருப்பு, எண்ணெயில் தொடங்கி கடுகு வரை வாங்கினோமா, சமைத்தோமா, சாப்பிட்டோமா என்று இருக்கும் நமக்கு இதனால் ஏற்படும் உணவுத் தட்டப்பாடும், உணவு இறக்குமதியும் விநோதமாகவே உள்ளது.

ஆம், பொன் விளையும் நாடான நமது இந்தியா, பெருவாரியான சமையல் எண்ணெயை மற்றும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இதுவே இந்த மரபணு மாற்று கடுகு வெளிவர காரணமாக கூறப்படுகிறது.

சரி எதுவந்தால் என்ன, நமக்கு கிடைத்தால் போதும், கடைகளில் அவற்றை வாங்கி பயன்படுத்தப் போறோம். என்கிறீர்களா? பயன்படுத்தி அதனால் வரும் விளைவை நாமும் நமது சந்ததியினரும் தானே சந்திக்கப் போறோம், அதனால் சற்று கவனமும், முன்னெச்சரிக்கையும் அவசியம்தானே.

நமது பிள்ளைச்செல்வங்களின் வாழ்வும், நமது குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நமது கைகளில் தானே இருக்கிறது. நமது கையால் சமைக்கும் பொழுது பொரியப்போவது கடுகு மட்டுமில்லை நமது குடும்பமும் தானே.

மனிதர்களின் உடல் அன்னத்தால் உருவானது, அதாவது மண்ணிலிருந்து தாவரங்களுக்கு சத்துக்கள் செல்ல அதனை கொண்டு தாவரங்கள் வளர்ந்து உணவுப் பொருட்களாக மாற்றுகிறது. ‘what you eat is what you are’ என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அவ்வாறு இருக்க தாவரங்களின் மரபணுவினை மாற்றி, அதன் மூலம் உருவாகும் உணவினை உட்கொண்டால் நமது மரபணுவும் மாறும் தானே? அப்படி மாறினால் நமது அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் இழப்பது நிச்சயம். இன்னாருடைய பிள்ளை என்று நமது பண்பும் பழக்கவழக்கங்களும் நம்மை அடையாளம் காட்டுவது மாறும். 

வளர்ந்த நாடுகள் பல இந்த மரபணு மாற்று பயிர்களுக்கு தடைவிதித்துள்ளது. காலப்போக்கில் உடலில் பல குணப்படுத்த முடியாத புதுப்புது நோய்களும், குழந்தையின்மை, மலட்டுத்தன்மை, அலர்ஜி, புற்றுநோய் போன்றவை ஏற்படும் என பல ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

நான், நமது பாரம்பரியம், நமது குடும்பம் என்று நம்மை அடையாளம் காட்டும் பல மரபுகள் சீர்குலைந்து போகும். அதிகப்படியான பின்விளைவுகளால் நமது குழந்தைகள் நம்மை போல் இல்லாமல் கீழ்த்தனமுள்ள குணங்களுடன் காணப்படுவார்கள். 

அதுமட்டுமல்ல இந்த மரபணு மாற்று பயிர்களை விளையவைக்க பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் மானாவரியாக தெளிக்கப்படவேண்டும்.

ஏற்கனவே பூச்சிக்கொல்லிகளால் தாய்ப்பாலே விஷமான நிலையில் இன்னும் என்னென்ன நோய்களும், தொந்தரவுகளும் வரவேண்டும் என்று பட்டியலிடவா வேண்டும்.

நாம் ஒவ்வொருவரின் இல்லத்திலும் நேரடியாக நாம் சந்திக்கும் ஆரோக்கியமின்மை தொந்தரவுகளுக்கு இதுவே முதல் காரணம். புற்றுநோய் அழையா விருந்தாளியாக ஒவ்வொரு வீட்டின் வாசற்கதவையும் அடைவது இதனால்தானே. 

எங்கேயோ ஏதோ ஆய்வு, விளைச்சல், யாரோ விவசாயி என்று இன்னும் நினைத்திருந்தால் பல பல நோய்கள் நமது படுக்கைக்கு பங்குபோடும். 

இயற்கை படைத்த நமக்கு இயற்கையின் பாரம்பரிய விதைகளே சிறந்தது. நாட்டு விதைகளில் இருந்து பெறப்படும் உணவுப்பொருட்களே ஆரோக்கியத்தை பெருக்கும்.

நமக்கு நமது பண்பாட்டையும், மரபையும் சிறப்பாக அளித்த நமது முன்னோர்களுக்கு நாம் செய்யும் கைமாறு அதனை பாதுகாப்பாக நமது பிள்ளைகளுக்கு சேர்ப்பதே.

உயிரற்ற செயற்கைக்கு தான் செயற்கை உணவு தேவை. உணர்வும், உயிரும் கொண்ட நமக்கு நமது நாட்டு பயிர்களே போதும். விளைநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் விவசாயிகளைக் காப்போம், நாமும் நமது சமூகமும் சிறப்பாக வாழலாம்.   

இன்னும் பல தகவல்களை தெரிந்துகொள்ள இந்த காணொளியை பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=jne30T7qY34