கண்டக சாலா அரிசி

உலக நாடுகளிலும், உலக நகரங்களிலும் மென்மையான வாழ்வை வாழ என்றும் சிறந்த இடம் என்றால் அது நமது தென்னிந்தியா தான்.

வாழ்கை என்பது நகரமும், நவீனமும் மட்டுமல்ல.. கருவறையில் தொடங்கிய வாழ்க்கை கல்லறையில் முடியும் வரை ஓட்டமும், அவசரமும் குடிகொண்டிருக்கிறது. இதுவல்ல வாழ்க்கை என்பதை நமது தென்னிந்தியா கிராமங்கள் பல இடங்களில் வெளிப்படுத்துகிறது.

வானுயர்ந்த கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகள், எங்கும் அலங்கார விளக்குகள், விரல் நுனி தகவல் தொழில்நுட்பம் போன்றவை இன்றைய பிரம்மாண்டங்களாக இருந்தாலும் காலத்தை கடந்த பலருக்கு அவை வெற்றிடங்களை நிரப்புகிறது என்பதும் உண்மையாக இருக்கிறது.

வாழ்க்கை என்பது இவற்றை தாண்டி, தூய உணவு, தூய காற்று, இதமான சூழல், ஆரோக்கியமான மனநிலை என பலவற்றை கலந்த ஒன்றாக உள்ளது.

பல நாடுகளையும் நகரங்களையும் வலம் வந்தவர்களுக்கு இந்தியத் திருநாடு அவ்வளவு பிரம்மாண்டத்திற்குரியதாகவும், பெருமைக்குரியதாகவும்  நிச்சயம் தோன்றாது.. உண்மை என்னவென்றால் வாழ ஏற்ற நாடு நம் நாடுதான்.

பணத்திற்காகவும், பெருமைக்காகவும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் நம்மவர்கள் மெடுக்காக புகைப்படங்களை வலை தளங்களில் பகிரலாம்.

கடும் குளிர் அதுவும் சூரியனையே பார்க்க தவம்கிடக்க வேண்டிய நிலையில் உடலைத் தாண்டி உடலுக்கு மேல் குளிரைத் தாங்கும் உடைகள், வீட்டுக்குள்ளும் இயற்கை காற்றோ, இயற்கை சூழலோ இல்லாது வெப்பமூட்டிகள் என நாள்முழுதும், வாரக்கணக்கில், நாள்கணக்கில் அவர்கள் படும் அவதிகள் புகைப்படத்தை எடுத்து பலருடன் பகிரும் பொழுது பெருமையாக மறைகிறது.

சங்கடங்கள் சங்கடங்களாக இருந்தாலும் அவற்றை மறைத்து வாழ்க்கையை ஓட்டவும் அவர்கள் பழகிக்கொள்கிறார்கள். குளிர் மட்டுமல்ல, குளிரைத்தாண்டி பனி இன்னும் சங்கடத்தில் பலரை வாட்டுகிறது. வருடத்தில் பல மாதங்கள் குளிரும், பனியும் ஒருசில நாடுகளில் என்றால் கடும் வெப்பமும், அனல் காற்றும் மற்ற நாடுகளில் இருப்பவர்களை விடுமுறை என்ற பெயரில் இந்தியாவின் பக்கம் தலைகாட்ட சொல்கிறது. இவ்வாறெல்லாம் அவதியுறும் அவர்கள் அதனை வெளிக்காட்டாது சமாளிக்கின்றனர்.

உண்மையிலேயே எந்த இயற்கை தொந்தரவுகளும் இன்றி நாம் வாழ்ந்து வருகின்றோம். அளவான வெயில், அளவான குளிர், அளவான மழை என்று காலமே நமக்காக தன்னை அழகாக பிரித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப நம்மையும் காத்து வருகிறது.

உலகிலேயே உணவு உற்பத்திக்கு, அதாவது உணவை விளைவிக்க தேவையான சூரியஒளியினை நமது நாடு சீராகப் பெற்றுள்ளது அதற்கு தேவையான நீரினையும் சீராகக் கொண்டுள்ளது. வாழ்க்கையை அமைதியாக வாழ நல்ல ஆரோக்கியமான உணவு மற்ற அனைத்தையும் விட அவசியமானதாயிற்றே.

இவ்வாறு காலங்களை கச்சிதமாக பிரித்து ஒவ்வொரு காலத்திக்கும் ஏற்ற சிறந்த சூழலையும் நமக்கு அளிக்கிறது. சித்திரை தொடங்கி வெயில் கொளுத்தினாலும், ஆடியில் காற்றடிக்க, ஐப்பசியில் மழைக்கென்று ஒதுக்க, மார்கழி, தை குளிரை நமக்கு காணிக்கையாக்குகிறது.

குளிர் காலம் என்றவுடன் நமக்கு சில்லென்று வீசும் காற்றும், இரவு பனியும், காலைப் புகை சூழ குளிரும் ரம்மியமான பொழுதாக இருக்கும். அதுவும் மார்கழி.. இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க இதமாக இருக்க அதனை மீறி அந்த குளிரை அனுபவிக்க கோலம் போடுவதும், கோவிலுக்கு போவதும் முன்னோரின் ஆரோக்கியத்திற்கான இரகசியங்களாக இருந்தது.

மனதுக்கும் உடலுக்கும் இதமான இந்த குளிர் காலத்தில் பலருக்கு சிறு உபாதைகளும், தொந்தரவுகளும் வருவது நடைமுறையில் உள்ள தொந்தரவுகள். காரணமோ காலத்திற்கும், நேரத்திற்கும், சூழலுக்கும் மாறான பழக்கத்தையும், உணவையும் பின்பற்றுவதால் வரும் கேடுகள் இவை. 

பொதுவாக உடலின் இயக்கத்திற்கு சராசரியான ஒரு வெப்பம் (37C) தேவைப் படுகிறது. எந்த சூழலிலும் உடல் அந்த வெப்பத்தை நிலை நிறுத்த முயற்சிசெய்துகொண்டே இருக்கும்.

குளிரான இடத்தில் இருந்தாலும் சரி அல்லது வெப்பமான இடத்தில் இருந்தாலும் சரி அதனை சீராக வைத்துக்கொள்ள உடல் பெருமுயற்சி எடுக்கும். இதனை தவறவிட்டால் உடலுக்கு பேராபத்து ஏற்படும். ஆபத்து மட்டுமல்லாது நோய் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். 

என்னதான் உலக நாடுகள் பிரமாதமான இடத்தில் இருந்தாலும் இந்த இடத்தில் அவை தங்களின் பிரமாதத்தை கோட்டை விடுகிறது. ஒரு காலம் குளிர், அடுத்த காலம் கடும் குளிர், அதற்கடுத்த காலம் பனிப் பொலிவு என்று குளிரின் எல்லையை தாண்டிய வாழ்க்கை, மற்ற நாடுகளிலோ அதிக வெப்பம், மிக அதிக வெப்பம் என்று தாங்க முடியாத வெப்பத்தின் ஆதிக்கம். இவற்றை வெளியில் காட்டிக்கொள்ளாமல் குளிரூட்டப்பட்ட அரை, வாகனம், வெப்பமூட்டப்பட்ட அரை, வாகனம் என எந்நேரமும் இயற்கைக்கு மாறான ஒரு வித அழுத்தம் மற்றொரு பக்கம்.

இதனால் உடல் படும் பாட்டினை உடலே கதறி அழுதாலும் செவிசாய்க்காமல் ஓடுகிறது ஓட்டம். உடல் தன்னால் முடிந்த வரை சமாளித்தும், கதறியும் போராடி கடைசியில் தோற்பது என்னமோ அன்றாடம் அரங்கேறுகிறது. 

அப்படி என்னதான் உடலுக்கு ஆபத்து வரப்போகிறது இதனால் என்கிறீர்களா? உடல் சாதாரணமாகவே தன்னை புதுப்பித்து, இயக்கியும் வருகிறது.

நல்ல சூழல், உணவு கிடைக்க உடல் தனக்கு தேவையான சக்தியை முதலில் தன்னிச்சையற்ற இயக்கத்திற்கு (உடலின் வெப்பத்தை நிலைநாட்டுவது, மூச்சு விடுதல், இரத்த சுழற்சி, இருதய இயக்கம், உணவு ஜீரணிக்க போன்ற பல செயல்கள்) எடுத்துக்கொள்ளும், பின் மிச்சம் இருக்கும் சக்தியே மற்ற வேலைகளுக்காக (அன்றாட வேலைகள் நடப்பது, தூக்குவது போன்றவை) அளிக்கப்படும்.

இவ்வளவு செயல்கள் இயற்கையாகவே உடலுக்கு இருக்க அதிக வெப்பமும், அதிக குளிரும் மேலும் உடலின் இயக்கத்தை பாதிக்கும். பாதிப்பது மட்டுமல்லாது போதுமான இயக்க சக்தியை உடலுக்கு கொடுக்க இயலாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

அதாவது நான்கு பேர் விளையாடும் தொடர் ஓட்டப் பந்தையத்தில் மூவர் சராசரியாக ஓடி முடித்து கட்டையை நான்காவது ஆளிடம் கொடுக்க நான்காவது நபரோ போராடி மூவர் விட்டதையும் பிடிக்க அதிக வேகமாக ஓடுவதை போல் தான் இந்த நிலையும். மற்ற மூவரிடத்திலிருந்தும் எந்த ஒத்துழைப்பும் இல்லாது தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் நான்காமானவர் விரைவிலேயே தனது சக்தியை எல்லாம் இழந்து ஆட்டத்திற்கு தகுதியற்றவராக மாறிவிடுவர். 

நமது உடலில் மற்ற அனைத்து இயக்கத்திற்கும் சக்தி தேவைப்படுகிறது. அளவிற்கு மீறிய சுற்றுச் சூழலில் தாக்கத்தினால் உடல் அதிக பளுவை தனது வெப்பநிலையை சமன் செய்ய பாடுபடுகிறது.

அதுவும் இயற்கையின் துணையில்லாமல் செயற்கை சாதனங்களான ஸ்வெட்டர், கோட், இறுக்கமான காலணிகள் போன்றவற்றைக் கொண்டு. இதனால் வரும் முதல் தொந்தரவு உடலின் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் குறைவது தான். 

இதைத் தான் முதலிலேயே கூறினேன் உலகில் ஆரோக்கியமாக வாழ ஏற்ற இடம் நமது தென்னிந்தியாதான் என்று.. உடலுக்கு ஏற்ற சுற்றுச் சூழல் நிறைந்த இடமாகவும், உடலுக்கு தேவையான வெப்பத்தை தனது சுற்றுப்புறத்திலேயே எளிதாக கொண்டிருக்கும் இடமாகவும் உள்ளது.

உடலுக்கு இந்த வெப்பத்தாலான தொந்தரவை மட்டும் நாம் கொடுப்பதில்லை, இன்றைய நவீன உணவுகளுடன் சேர்ந்து மாற்று உணவையும் கூடவே தான் நாம் கொடுக்கிறோம்.

நவீன உணவுகள் சரி அது என்ன மாற்று உணவுகள் என்கிறீர்களா? அது ஒன்றும் இல்லை சூழலுக்கும் உடலுக்கும் தகுந்த உணவை அளிக்காது சத்தானது என்று கருதி மாற்றி உண்பது. 

இயற்கை ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தவாறு உணவினை உற்பத்தி செய்கிறது. ஒரு இடத்தில் விளையும் உணவு இயற்கையாக அனைத்து இடத்திலும், அனைத்து காலநிலையிலும், அனைத்து தட்ப வெப்ப சூழலிலும் விளைவதில்லை.

தென்னிந்திய போன்ற உடலுக்கு ஏற்ற சமன்பாடு கொண்ட இடத்தில் வசிப்பவர்கள், மற்ற அனைத்து நாடுகளிலும் உருளைக்கிழங்கை அதிகம் உண்கின்றனர் என்று கூறிக்கொண்டு பல நாடுகள், ஊர்கள் கடந்து எங்கிருந்தோ வரவழைத்து உண்டால் உடல் மேலும் மேலும் சூடாகாமல் என்னசெய்யும். அவர்களுக்கு குளிரை சமாளிக்க இவ்வாறான உணவுகள் தேவை. உருளைக் கிழங்கை மட்டும் கூறவில்லை ஓட்ஸ், கோதுமை போன்ற உணவையும் சேர்த்து தான் கூறுகிறேன். காலத்திற்கும், சூழலிற்கும் மாற்றாக உணவை அருந்துவதும் உடலுக்கு கேடாய்ப் போகும். 

நமது சூழலுக்கு தகுந்த முக்கியமான  உணவு அனைவருக்கும் தெரிந்ததே, அரிசிதான். அதுவும் இந்த முறை நாம் பார்க்கப்  போகும் அரிசி தனி சிறப்பு வாய்ந்த அரிசி தான் என்றால் மிகையாகாது. இந்த அரிசி நம் தமிழகத்தில் மட்டும் விளையும் அரிசி இல்லை. ஆந்திர, கர்நாடக, கேரளா போன்ற மாநிலங்களிலும் நன்கு விளையும் அரிசி. விளைவது மட்டுமல்ல இந்த மாநில மக்களாலும் விரும்பி உண்ணக்கூடிய அரிசியாகவும் இருக்கிறது. 

கண்டக சாலா என்பது தான் இந்த சிறப்பு வாய்ந்த அரிசியின் பெயர். ‘கண்டாலே போதும்’ என்ற அளவிற்கு அனைத்து மக்களின் மனதையும் கவர்ந்த அரிசியை இந்த கண்டக சாலா அரிசி.

எந்த செயற்கை ரசாயனமும் இல்லாது, இயற்கையான முறையில் விளையக் கூடிய அரிசி இந்த கண்டகசாலா அரிசி. பழுப்பு வெள்ளை நிறத்து இந்த கண்டக சாலா அரிசி நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி குறைந்த நீரிலேயே விளையக்கூடிய அரிசி. 

விளையும் பொழுதே எந்த நோயும், பூச்சியும் தாக்குதலும் இன்றி நன்கு விளையும் அரிசி என்றாலே தெரிந்து கொள்ளவேண்டும், அதனை உண்டால் எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் உறுதி ஏற்படும் என்பதனை.

நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்த அரிசியாக இந்த சன்னராக அரிசி இருக்கிறது. எளிதாக உண்ணவும், மனதை கவரும் நிறமும் மேலும் இந்த அரிசிக்கு சிறப்பு. 

தென்னிந்திய இயற்கை சூழலுக்கும், தட்ப வெப்ப சூழலுக்கும் சிறந்த இந்த அரிசி உடலின் வெப்ப நிலையை பராமரிக்கவும், உடலுக்கு ஒத்துழைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. தென் மாநிலங்களில் சிறந்து விளையும் அரிசி என்பதால் இங்கிருக்கும் மக்கள் எல்லா காலத்திலும் உண்ண தகுந்த பாரம்பரிய அரிசி என்பதும் இதற்கு சிறப்பை தருகிறது.

சித்திரை வெயிலுக்கும், ஆடி காற்றிற்கும், ஐப்பசி மழைக்கும், மார்கழி குளிருக்கும் ஏற்ற அரிசி இந்த பாரம்பரிய கண்டக சாலா அரிசி.

கண்டக சாலா பழுப்பு வெள்ளை அரிசியினை கொண்டு அனைத்து அன்றாட உணவுகளையும் தயாரிக்கலாம். மத்திய உணவிற்கு ஏற்ற ருசியான, சன்னமான அரிசி இது.

குழம்பு, ரசம், மோர் போன்ற உணவுகள் மட்டுமல்லாது புலாவ், பிரியாணி, தக்காளி சாதம் போன்றவற்றிற்கு சிறந்தது இந்த பாரம்பரிய அரிசி.

சாதாரணமாக ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற அளவில் இந்த கண்டக சாலா அரிசியினை சமைத்து சுவைக்கலாம். சுவை மட்டுமல்ல சிறந்த மனதையும் கொண்டிருக்கும் அரிசி நமது கண்டக சாலா அரிசி.

உடலின் இயக்கத்திற்கு கேடு விளைவிக்காத இந்த அரிசி, சுற்றுச்சூழலுக்கும் தகுந்தது. ஆரோக்கியத்தை காக்கும் அமிர்தமாகும்.