தொன்றுதொட்டு, மக்களால் அதிக அளவில் விரும்பி, வரவேற்கப்பட்ட பல வகையான மூலிகைகள், தானியங்கள் நாட்கள் செல்லச் செல்ல தெய்வீக முக்கியத்துவமும் புனிதத்துவமும் பெற்றதாக வரலாறு கூறுகின்றது. அவ்வாறு புனிதத்துவம் பெற்ற தானியங்களில் ஒன்று தான் தினை. சங்க இலக்கியங்களிலும் புராணங்களிலும் அதிகம் பேசப்பட்ட தானியமும் இது.
இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட இந்த தானியம் தினை. உடலை வலுவாக்கும். வாயு நோயையும், கபத்தையும் போக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. மேலும் தினை அரிசியின் சத்துக்கள் பயன்களை தெரிந்து கொள்ள – தினை அரிசி. சுவையான சத்தான தினை அரிசி கருப்பட்டி பாயாசம்.
சத்துக்களும் சுவையும் மிகுந்த பாயசம் இந்த கருப்பட்டி தினையரிசி பாயசம். குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒரு சிறந்த சிறுதானிய உணவு இது. இன்று பலவகைகளில் கலப்படம் செய்து தயாராகும் ஜவ்வரிசி பாயசத்தை தவிர்த்து இது போல் சத்தான உணவுகளை உண்பதால் இந்த தலைமுறையும் வருங்கால சந்ததியினரும் ஆரோக்கியமாக இருக்க இது வழிவகை செய்யும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் தினை அரிசி
- ½ – ¾ கப் கருப்பட்டி
- 1 கப் தேங்காய் பால்
- 2 ஏலக்காய் (தூளாக பொடித்துக் கொள்ள வேண்டும் )
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 10 பிஸ்தா (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.)
- 10 பாதாம் (ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவேண்டும்.)
- 10 கிஸ்மிஸ்
- 3 ஸ்பூன் பசு நெய்
செய்முறை
- முதலில் தினை அரிசியை இருபது நிமிடம் நீரில் ஊற வைத்துக் கொண்டு பின் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒன்று மண்பத்திரத்தில் ஐந்து பங்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து சற்று சூடானதும் அதில் ஊறவைத்த இந்த தினை அரிசியை சேர்த்து வேகவிடவும்.
- தினை அரிசி நன்கு மலர்ந்து ஒரு பத்து நிமிடத்தில் வெந்துவிடும். மேலும் ஒரு ஐந்து நிமிடங்கள் வேகவிட மேலும் குழைவாக வெந்து தயாராக இருக்கும்.
- அதனில் கருப்பட்டி சேர்த்து சிறு தீயில் சிறிது வேகவிட வேண்டும். (மண்ணில்லாத கருப்பட்டி என்றால் நேரடியாக சேர்க்கலாம். இல்லையென்றால் கருப்பட்டியை சிறிது நீரில் கரைத்து வடிகட்டி சேர்க்கவும்).
- பின் அடுப்பை அணைத்து அதனில் தேங்காய்ப் பால் சேர்க்க வேண்டும். (பசும்பாலும் சேர்க்கலாம் ஆனால் தேங்காய்ப் பால் சேர்க்க சுவை கூடும்).
- பின் ஒரு வாணலியில் பசு நெய்யை சூடாக்கி ஏலக்காய் தூள், பிஸ்தா, பாதாம், கிஸ்மிஸ், தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து சேர்க்கவும்.