காலில் வரக்கூடிய சில தொந்தரவுகளுக்கு சிறந்த வீட்டுக் குறிப்பை பார்க்கலாம். உடலில் நீர் சத்து, மற்ற வைட்டமின் சத்து குறைவு ஏற்படுவதாலும் அதிக அழுத்தத்தினாலும் வரக்கூடிய தொந்தரவு கால் ஆணி, கால் எரிச்சல், குதிகால் வலி போன்றவை. இதனால் பெரும்பாலும் பெண்கள் அவதிப்படுவார்கள், இதற்கும் சிறந்த தீர்வை நமது கை மருத்துவ முறையில் பார்க்கலாம். மேலும் சில பெண்களுக்கு குதிகால் வலி, பாத எரிச்சல் வருவதனையும் எளிமையாக தீர்க்கலாம். மேலும் கை கால் வீக்கத்திற்கு இன்னும் சில குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.
கால் பாதக்குளியல்
அனைத்து விதமான கால் தொந்தரவுகளுக்கும் இளம் சூடான நீரில் பதினைந்து நிமிடங்கள் கால்களை வைக்க நல்ல நிவாரணத்தை பெறலாம். இதற்கு கால் பாதக்குளியல் என்ற பெயரும் உள்ளது. இந்த நீரில் சோறு வடித்த கஞ்சி, கல் உப்பு, வேம்பு, குப்பைமேனி, மஞ்சள் என ஏதேனும் ஒன்றை சேர்த்து செய்வதால் அதிக பலனை பெறலாம். பலருக்கும் வரக்கூடிய கால் குடைச்சல், உடல் வலி, கால் வலிக்கும் சிறந்த பலனை இது அளிக்கும்.
காக்கிரட்டான் விதைகள்
சங்கு புஷ்ப கொடியின் (காக்கிரட்டான் விதைகள்) விதைகளை தூள் செய்து அதனுடன் இந்துப்பு, சுக்குத் தூள் கலந்து ஒரு சிட்டிகை அளவு உண்டு வர விரைவில் யானைக் கால் வீக்கம் குறையும்.
மருதாணி
கால் ஆணி உள்ளவர்களுக்கு அது ஒரு பெரும் குடைச்சலை கொடுக்கும். கால் ஆணிக்கு மருதாணி இலைகள், மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது வைத்துக் கட்டிவர நல்ல ஒரு பலனை பெறலாம்.
அம்மான் பச்சரிசி
சித்திரப் பாலாடை என்று சொல்லக்கூடிய அம்மான் பச்சரிசிக் கீரையின் பாலை கால் ஆணியில் தடவ வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
ஒத்தடம்
குதிகால் வலிக்கு தவிடையும், கல் உப்பையும் சுட சுட வறுத்து அவற்றை ஒரு துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க விரைவில் நீங்கும்.
பாகல் இலை
பாதத்தில் வரக்கூடிய பாத எரிச்சல் குணமாக பாகற்காய் இலை சாற்றை தடவ எரிச்சல் நீங்கும்.
வல்லாரை
யானைக்கால் தொந்தரவிற்கு மிகச்சிறந்த ஒரு மருந்து வல்லாரை இலைகள். விளக்கெண்ணையில் வல்லாரை இலைகளை வதக்கி அவற்றை யானைக்காலில் கட்டிவர வீக்கங்கள் குறைந்து விரைவில் நிவாரணத்தை பெறலாம். வல்லாரை இலை பொடியை காலையும் மாலையும் நெய்யுடன் சேர்த்து உண்டு வரலாம். யானைக்கால் நோய்க்கு வல்லாரை மிகச்சிறந்த ஒரு மருந்து இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவர விரைவில் நல்ல பலனை பெறலாம்.