வாழ்வியலின் மிக முக்கிய அடிப்படைத் தேவையான உணவில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதானால் நம் எண்ணம், சொல், செயல், அமைதி, ஆரோக்கியம் என அனைத்தும் பொலிவு பெரும்.
வாயின் மூலம் உண்ணுவதெல்லாம் உணவாகி விடாது. உணவு என்பது உடலுக்குச் சக்தியைக் கொடுப்பதுடன் நம் உடல், குடும்பம், சமுதாயத்தின் ஆரோக்கியத்தையும் பேணிக்காப்பதாகும். சக்தியைக் கொடுக்கக் கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்பது ஒரு கலையாகும். அந்தக் கலையை யார் சிறப்பாகக் கையாள்கின்றனரோ அவர்களைச் சுற்றி இந்த சமுதாயமே படையெடுப்பதைக் காண முடிகிறது.
கால்ஜான் வயிற்றிற்காக ஓடிக்கொண்டிருக்கும் நாம், வயிற்றினுடைய பசியைத் துல்லியமாக உணர்ந்து தேவையான அளவுடன், சிறந்த சக்தியைக் கொடுக்கக்கூடிய உணவை அளிக்கும் தருணத்தில் வாழ்க்கையின் ஆனந்தத்தையும், ரகசியத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
உணவு எதற்காக?
உணவு என்பது ஏதோ நாளொன்றிற்கு மூன்று முறை வயிற்றை நிரப்புவதற்காக இல்லை. அது ஒரு கலை, உணர்வு, வாழ்க்கையின் இரகசியம் என்று பார்த்தோம். உணவு மூன்றை உள்ளடக்கியது – நேற்று, இன்று, நாளை.
மூன்று விதங்களில் வேலையைச் செய்கிறது.
நேற்றைய கழிவை வெளியேற்றவும்;
இன்றைக்குச் சக்தி கொடுக்கவும்;
நாளைய உடல் கட்டமைப்பை வலுப்படுத்துவதுமாகும்.
நேற்று, இன்று, நாளையின் அவசியத்தை இனிப் பார்போம்.
கழிவுகளின் தேக்கமே நோய், உடலாக இருந்தாலும் சரி, உணர்வாக இருந்தாலும் சரி, பொது இடமாக இருந்தாலும் சரி, கழிவுகளை நீக்குவதே சிறந்த ஆரோக்கியத்தை முதலில் தரும். நாம் உண்ணும் உணவு இயற்கையின் படைப்பான இந்த உடலுக்குப் புரியும் படி இருந்தால் மட்டுமே நமது உடல் உணவை சீராக ஜீரணித்து கழிவைப் பிரித்து வெளியேற்றும்.
மேலும் ஜீரணித்த, ஜீரணமாகாத கழிவுகள் சீராக வெளியேறாமல் போனால் அவை உடலில் எங்கோ தங்கி காலப்போக்கில் பல உபாதைகளாகவும், உயிர்க் கொல்லி நோயாகவும் உருமாறும். உயிர்ச் சத்துள்ள உணவும், உயிருள்ள தண்ணீருமே உடல் கழிவை நீக்கி வாழ்நாளைச் சிறக்கச் செய்யும் சிறந்த மருந்துகளாகும்.
செய்யும் அனைத்து செயலையும் செம்மையாக மற்றும் சிறப்பாகச் செய்ய சக்தி மிகவும் அவசியமானது. அவற்றை நித்தம் நித்தம் நாம் உண்ணும் உணவே அளிக்கிறது. உணவு சக்தியைக் கொடுக்கிறது என்பதிலிருந்து தெள்ளதெளிவாகச் சுறுசுறுப்பையும், புத்திக்கூர்மையையும், தெளிவான ஆற்றலையும் அளிக்கிறது எனப் புரிகிறது.
இவ்வாறு இருக்க இன்று நம்மில் பலர் உணவை உட்கொண்ட உடனேயே மயக்க நிலைக்குச் செல்கிறோம் என்றால் காரணம் உணவில் சக்தியைக் கொடுக்கக் கூடிய மூலக்கூறுகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான உணவு உடலில் கழிவுகளாகவே சென்று, நம் உறுப்பையும், ‘நான்’ என்று நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த உடலையும் துன்புறுத்துகிறது. மனதும் இதனைப் புரியாமல் (உணவே காரணம் என்று) புரிந்து கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறது. உணவு என்பது சக்தியைக் கொடுப்பதுடன் ஆக்க சக்தியை உடலில் சேமித்தும் வைக்கிறது.
முலாம் பூசப்பட்ட நம் அழகு மேனியையும், உள்ளுறுப்பையும் ஒவ்வொரு நேர உணவும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. உறுப்புகளால் ஆன உடல் பல கோடி செல்களினால் பின்னிப் பிணைந்து இருக்கிறது. இவற்றை ஒவ்வொரு நொடியும் பராமரித்துப் புதுப்பிக்கும் மாபெரும் பணியையும் உணவே செய்கிறது. நாளைய தெளிவான எதிர்காலத்திருக்கு உணவே ஆணிவேர்.
இந்த மூன்று பணிகளில் ஏதேனும் ஒன்று சீராகச் செயல்பட வில்லை என்றால், உடல் சுகமின்மை என்ற மூட்டையைச் சேர்க்கத் தொடங்குகிறோம். தொந்தரவுகளைக் களையாமல் மருந்து மாத்திரைகள் மூலம் மறைத்தோமானால் மிஞ்சப் போவது நாள் பட்ட உயிர்க் கொல்லி நோய்களே.
மேலோட்டமாக உணவின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் பார்த்த நாம் இனி அடுத்தடுத்து எது உணவு, எவ்வாறு உணவைத் தேர்ந்தெடுப்பது, உணவின் மூலம் எவ்வாறு நோய் தீர்ப்பது எனப் பலவற்றை அறிந்து அதன் மூலம் ஆரோக்கியமான நம் வாழ்வை மீட்டெடுப்போம்.